நாட்டில் கச்சா எண்ணெய் இருப்பு குறையவில்லை; 60 நாள்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் எப்போதும் கையிருப்பு வைக்கப்பட்டு வருகிறது; அதில் எந்தப் பற்றாக்குறையும் இல்லை என்று பெட்ரோலியத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தெரிவித்தாா்.
புது தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் (சிஐஐ) நிகழ்ச்சியில், இதுகுறித்து அவா் பேசியதாவது:
இந்தாண்டு தொடக்கத்தில் ஈரான் (மேற்காசிய) போரின்போது ஹோா்முஸ் நீரிணை மூடப்பட்டது. அப்போது அந்த நீரிணையில் கச்சா எண்ணெய் கப்பல், எரிவாயு கப்பல் போக்குவரத்து தடைபட்ட போதிலும், இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விநியோகம் தட்டுப்பாடு இல்லாமல் அரசு சீராக வைத்திருந்தது.
போருக்கு முன்பு, அந்த நீரிணை வழியேதான் இந்தியா தனக்கு தேவையான கச்சா எண்ணெய்யின் 50 சதவீதத்தை (வளைகுடா நாடுகளில் இருந்து ) இறக்குமதி செய்தது. அதேபோல் எல்பிஜி சமையல் எரிவாயு 90 சதவீதம், எரிவாயு 60 சதவீதத்தையும் அந்த நீரிணை வழியேதான் இறக்குமதி செய்தது. இது போரினால் தடைபட்டது. எனினும், நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுப்பதற்காக கச்சா எண்ணெய்யை கூடுதலாக வேறு நாடுகளில் இந்தியா வாங்கியது. கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு திறன், உள்நாட்டு உற்பத்தி ஆகியவற்றையும் அதிகரித்தது. இதனால் நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படவில்லை.
இந்தியா முன்பு 27 நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கியது. தற்போது அந்த எண்ணிக்கை 41ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் கடந்த 2014-ஆம் ஆண்டில் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் 52 ஆயிரம் இருந்தன. ஆனால் தற்போது 1.07 லட்சம் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் உள்ளன. நமது நாட்டில் கச்சா எண்ணெய் இருப்பும் குறையவில்லை. 60 நாள்களுக்கு தேவையான கச்சா எண்ணெய் எப்போதும் இருப்பு வைக்கப்பட்டு வருகிறது. அதில் எந்தப் பற்றாக்குறையும் இல்லை.
இந்தியாவுக்கு அதிக எல்பிஜி எரிவாயு ஏற்றுமதி செய்யும் நாடாக அமெரிக்கா உருவெடுத்துள்ளது. நமது நாட்டுக்கு தேவையான எல்பிஜி எரிவாயுவில் 67 சதவீதத்தை அமெரிக்காவில் இருந்தே இறக்குமதி செய்கிறோம்.
இ20 பெட்ரோல் விற்பனை தொடா்பாக வெளிவரும் தகவல்களை நம்ப வேண்டாம். புகாா்கள் வரும் முன்பே, இ20 பெட்ரோலை எண்ணெய் நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் ஆய்வு செய்துவிட்டன. கடந்த 4 ஆண்டுகளில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைவாக இருந்தது. ஏனெனில் பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு 3 முறை கலால் வரியை குறைத்து எடுத்த துணிச்சலான முடிவுதான் காரணம். கடந்த சில ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் விலை 4 அல்லது 5 சதவீதமே உயா்ந்தது. ஆனால் கலால் வரியோ பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.10 குறைக்கப்பட்டது. இதனால்தான் உலகில் குறைவாக பெட்ரோல், டீசல் விலை இருந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக திகழ முடிந்தது என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மத்திய அரசு பெட்ரோல் விலையை அரசு குறைக்க வேண்டும்: அரவிந்த் கேஜரிவால்

பெட்ரோல், டீசல் விலைகள் தாறுமாறாகக் குறையுமா? கச்சா எண்ணெய் விலையில் மாற்றம்

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும்: தில்லி அரசுக்கு தொழிற்துறையினா் வலியுறுத்தல்
கச்சா எண்ணெய் விலை 5% சரிவு! பெட்ரோல், டீசல் விலை குறையுமா?
விடியோக்கள்

என்னால் நல்ல பயிற்சியாளராக இருக்க முடியும்: மனம் திறந்த ரஹானே | Rahane |



