
தமிழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) புதிதாக 1,438 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் மற்றும் பலியானோர் உள்ளிட்ட தகவல்களை மாநில சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்கள் சந்திப்பின் மூலமாக வெளியிட்டார்.
அதன்படி, தமிழகத்தில் புதிதாக 1,438 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 28,694 ஆக உயர்ந்துள்ளது.
இதில் தமிழகத்தில் மட்டும் உறுதி செய்யப்பட்டோர் 1,405. பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களில் உறுதி செய்யப்பட்டோர் 33.
தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1,116 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இன்று மேலும் 12 பேர் பலியானதைத் தொடர்ந்து மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 232 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், இன்று ஒரேநாளில் 861 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 15,762 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் 12,697 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் இன்று மட்டும் மொத்தம் 15,692 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 5,60,673 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 74 (அரசு 44 + தனியார் 30) பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன.
தமிழகத்தில் தொடர்ந்து 6 ஆவது நாளாக பாதிப்பு ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. மேலும் இதுவரை இல்லாத அளவுக்கு இன்றைய தினம் அதிகபட்ச பாதிப்பு பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...