திருச்சியில் முள்புதரில் சடலம் வீசப்பட்ட சர்ச்சை: நடந்தது என்ன?

திருச்சி அருகே ஆம்புலன்ஸ் ஒன்றில் கொண்டு வரப்படும் ஒருவரின் சடலம் பொதுமக்கள் நடமாட்டமில்லாத பகுதியில் முள்புதரில் வீசிச் செல்லும் விடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
திருச்சியில் முள்புதரில் சடலம் வீசப்பட்ட சர்ச்சை: நடந்தது என்ன?

திருச்சி: திருச்சி அருகே தனியார் மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் ஒன்றில் கொண்டு வரப்படும் சடலம் பொதுமக்கள் நடமாட்டமில்லாத பகுதியில் முள்புதரில் வீசிச் செல்லும் விடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருச்சி இருங்களூர் அருகே தனியார் மருத்துவமனை ஒன்றின் ஆம்புலன்ஸ் கோட்டமேடு என்ற பகுதிக்கு செல்வது போல உள்ள அந்தக் காட்சியில், ஆம்புலன்ஸிருந்து மூவர் கீழே இறங்கி சடலத்தை தூக்கிச் சென்று முள்புதர் கீழே வீசுவதாக உள்ளது. இதில், ஒருவர் மட்டுமே முழுவதுமாக பாதுகாப்பு கவச உடை அணிந்துள்ளார். மற்ற இருவரும் முகக் கவசம் அணிந்த நிலையில் சாதாரண உடையிலேயே இருந்தனர். மேலும், சடலத்தின் மீது கறுப்பு வண்ணத் துணியில் முழுவதுமாக மறைக்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டது தெரியவந்துள்ளது.

இறந்தவர் கரோனா தொற்றால் உயிரிழந்ததால் தூக்கி வீசப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வியாழக்கிழமை காலை வைரலாக விடியோ பரவியது. இந்த நிலையில், இந்த விடியோவானது குறிப்பிட்ட சில காட்சிகளை மட்டுமே வைத்து எடிட் செய்து வெளியாகியுள்ளதாக திருச்சி மாவட்ட சுகாதாரத்துறையினரும், மருத்துவமனை நிர்வாகத்தினரும் விளக்கம் அளித்துள்ளனர்.

மருத்துவமனை விளக்கம்: விடியோ விவகாரம் தொடர்பாக திருச்சி எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக, மருத்துவக் கல்லூரி டீன் என். பாலசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 16ஆம் தேதி உயிரிழந்தவரின் சடலத்தை உறவினர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் உரிய தகவல் தெரிவித்து, பாதுகாப்பு முறைகளை பின்பற்றியே இருங்களூர் அருகேயுள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

உயிரிழந்தவரின் சடலத்துக்கு எந்தவித மரியாதை குறைவும் அளிக்கவில்லை. அரசு அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்தக் காட்சிகள் அனைத்தும் ஆவணத்துக்காக விடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. புகைப்படங்களும் எடுக்கப்பட்டுள்ளன.  ஆனால், சமூக விரோதிகள் சிலர் திட்டமிட்டு விடியோவில் சில காட்சிகளை மட்டுமே பதிவு செய்து போலியாக சித்தரித்து அவதூறு ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர்.

துதொடர்பாக, மாவட்ட ஆட்சியருக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவதூறு பரப்பும் வகையில் விடியோ வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com