திருச்சி: திருச்சி அருகே தனியார் மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் ஒன்றில் கொண்டுவரப்படும் சடலம் பொதுமக்கள் நடமாட்டமில்லாத பகுதியில் முள்புதரில் வீசிச் செல்லும் விடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, சுகாதாரத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி இருங்களூர் அருகே தனியார் மருத்துவமனை ஒன்றின் ஆம்புலன்ஸ் கோட்டமேடு என்ற பகுதிக்கு செல்வது போல உள்ள அந்த காட்சியில், ஆம்புலன்ஸிருந்து மூவர் கீழே இறங்கி சடலத்தை தூக்கிச் சென்று முள்புதர் கீழே வீசுவதாக உள்ளது.
இதில், ஒருவர் மட்டுமே முழுவதுமாக பாதுகாப்பு கவச உடை அணிந்துள்ளார். மற்ற இருவரும் முகக் கவசம் அணிந்த நிலையில் சாதாரண உடையிலேயே இருந்தனர். எந்த பாதுகாப்பு உடைகளும் இல்லை. மேலும், சடலத்தின் மீது கறுப்பு வண்ண துணியில் முழுவதுமாக மறைக்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டது தெரியவந்துள்ளது. இறந்தவர் கரோனா தொற்றால் உயிரிழந்தாரா, வேறு எந்த வகையில் உயிரிழந்தார் என்பது தெரியவில்லை. ஆனால், சடலத்தை தூக்கி வீசுவது மட்டுமே அந்த விடியோவில் பதிவாகியுள்ளது.
இந்த விடியோவானது சமூக வலைதளங்களில் வியாழக்கிழமை காலை முதல் வைரலாக பரவி வருகிறது. இது, திருச்சி மாவட்ட சுகாதாரத்துறையினருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
இதுதொடர்பாக, சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் லட்சுமி கூறுகையில், சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தவுள்ளதாகவும், விசாரணை முடிவிலேயே உரிய விவரங்கள் தெரிய வரும் என்றார்.