தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

சட்டப்பேரவைத் தலைவர் பதவிக்கு சிறப்புச் சேர்த்தவர் பி.எச்.பாண்டியன்: முதல்வர் புகழாரம்

சட்டப்பேரவைத் தலைவர் பதவிக்கு சிறப்புச் சேர்த்தவர் மறைந்த பி.எச்.பாண்டியன் என தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி புகழாரம் சூட்டினார்.

News image

சட்டப்பேரவை முன்னாள் தலைவர் பி.எச்.பாண்டியன் நினைவாகக் கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தில் அவரது  சிலையைத் திறந்து வைத்தார் முதல்வர் கே.பழனிசாமி. உடன், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர். 

Updated On :5 ஜனவரி 2021, 3:18 am IST


அம்பாசமுத்திரம்: சட்டப்பேரவைத் தலைவர் பதவிக்கு சிறப்புச் சேர்த்தவர் மறைந்த பி.எச்.பாண்டியன் என தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி புகழாரம் சூட்டினார்.

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவி அருகே கோவிந்தப்பேரியில் தமிழக சட்டப்பேரவை முன்னாள் தலைவர் பி.எச்.பாண்டியன் நினைவாக அவரது குடும்பத்தினர் சார்பில் கட்டப்பட்ட மணிமண்டபத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பி.எச்.பாண்டியன் சிலையை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் திங்கள்கிழமை திறந்து வைத்தனர்.

அதைத் தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:  தென்பாண்டிச் சீமையில் கோவிந்தப்பேரியில் பிறந்து தமிழக கோட்டையில் ஆணித்தரமான தனது வாதத்தை முன்வைத்தவர் பி.எச்.பாண்டியன். இந்திய தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் தனது பதவிக்கு புகழ் சேர்த்தவர்.  சட்டப்பேரவைத் தலைவர் பதவிக்கு சிறப்புச் சேர்த்தவர் பி.எச்.பாண்டியன், பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தார்.

நான்குனேரி-பச்சையாறு திட்டம், நான்குனேரி-கொடுமுடியாறு திட்டங்களுக்காக வழக்குரைஞராக உச்சநீதிமன்றத்தில் வாதாடி அத்திட்டத்தை ஒரு காலவரையறைக்குள் செயல்படுத்தும் உத்தரவைப் பெற்றுத் தந்தார். 

தமிழகத்தில் பஞ்சம் ஏற்பட்டபோது, மத்திய அரசு 10,000 டன் அரிசியை விடுவிக்க உச்சநீதிமன்றத்தில் வாதாடி வெற்றி கண்டார். தமிழக அரசின் நிலங்களை அபகரிப்பவர்களை எதிர்த்ததோடு, சுமார் 17,000 ஏக்கர் நிலங்களை மீட்டெடுக்க காரணகர்த்தாவாக இருந்தார். 

சொந்தக் கிராமமான கோவிந்தப்பேரியில் மனோ கல்லூரி அமைக்க 5 ஏக்கர் நிலம் வழங்கினார். வாழ்நாள் சாதனையாளர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். பி.எச்.பாண்டியன் துணிச்சலின் உருவம். பயங்கரத்தை எதிர்த்து நில், துணிச்சலாக பிரச்னையை எதிர்கொள், எதற்கும் பயந்து ஓடாதே, கோழைத்தனத்தால் வெற்றி பெற இயலாது, அச்சத்தை, அறியாமையை எதிர்த்து நில் என்ற விவேகானந்தரின் கருத்துக்கு ஏற்ப வாழ்ந்து காட்டியவர் பி.எச்.பாண்டியன் என்றார் முதல்வர்.

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: அதிமுகவில் எம்ஜிஆர் காலத்தில் இருந்து தளபதிபோல செயல்பட்டவர் பி.எச்.பாண்டியன். 26 ஆண்டு காலம் பல்வேறு நீதிமன்றங்களில் தன் வாதத்தை எடுத்து வைத்து, பொதுநல வழக்குகள் மட்டுமன்றி அரசியலமைப்புச் சட்ட வழக்குகளிலும் வாகை சூடியவர்.

அவருடைய பன்முகத் திறனை அறிந்து பல்வேறு பொறுப்புகளை எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் வழங்கி அழகு பார்த்தனர். சட்டப்பேரவைத் தலைவராக அவர் பணியாற்றிய காலத்தில் சரித்திர நிகழ்வுகளை நிகழ்த்திக் காட்டினார். சட்டப்பேரவைத் தலைவரின் அதிகாரம் குறித்து எடுத்துரைத்து பெருமை சேர்த்தார். மக்கள் பிரதிநிதிகள் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தார். கருத்துகளைத் துணிவுடன் எடுத்துரைப்பதில் வல்லவர். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். கன்னடியன் கால்வாய் பாலங்கள், பல்வேறு திருமண மண்டபங்கள் என தனது தொகுதி மக்களின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களைத் தந்துள்ளார். பி.எச்.பாண்டியனின் இழப்பு அதிமுகவுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவர் காலத்தால் அழியாத புகழ் பெற்றவர் என்றார். 

அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தலைமை வகித்தார். பி.எச்.பாண்டியனின் மகனும், அதிமுக மாநில அமைப்புச் செயலருமான மனோஜ் பாண்டியன் வரவேற்றார். பி.எச்.நவீன் பாண்டியன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.