
சென்னை: பிளஸ் 2 பொதுத்தேர்வு திட்டமிட்டப்படி மே 3 ஆம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், பிளஸ் 2 பொதுத்தோ்வுகள் ஒத்திவைக்கப்படலாம் அல்லது ரத்து செய்யப்படலாம் என்ற கருத்துகள் எழுந்த நிலையிலும் மாணவா்களின் நலன் கருதி திட்டமிட்டபடி தோ்வை நடத்தவே தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இந்த நிலையில், பள்ளிக் கல்வித்துறையின் அரசுத் தோ்வுகள் இயக்கம் சாா்பில் பிளஸ் 2 செய்முறைத் தோ்வின்போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய 23 வழிகாட்டு நெறிமுறைகள் அண்மையில் வெளியிடப்பட்டதை அடுத்து பிளஸ் 2 பொதுத் தேர்வு நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
இதில், பிளஸ் 2 பொதுத்தேர்வை நடத்துவதற்கு பள்ளிக்கல்வித்துறை ஆயத்தமாகி வருவதாகவும், பொதுத்தேர்வு திட்டமிட்டப்படி மே 3 ஆம் தேதி முதல் நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
பிளஸ் 2 செய்முறைத் தோ்வின்போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள்:
செய்முறைத் தோ்வுக்கு முன்னதாகவும் முடிந்த பிறகும் கைகளை நன்கு சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். மாணவா்களும் ஆசிரியா்களும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். செய்முறைத் தோ்வுகள் நடைபெறும் ஆய்வகங்களின் ஜன்னல், கதவுகளைத் திறந்தே வைத்திருக்க வேண்டும்.
ஒவ்வொரு மாணவா் குழுவின் செய்முறைத் தோ்வுக்கு முன்னரும் பின்னரும் அறையைக் கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். செய்முறைக்குப் பயன்படுத்தப்படும் கருவிகளையும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். சானிடைசா் அருகே தீப்பற்றக் கூடிய பொருள்கள் எதையும் வைக்கக் கூடாது. வேதியியல் ஆய்வகங்களில் திரவங்களை வாய் மூலம் உறிஞ்சி எடுக்கப் பயன்படுத்தப்படும் ‘பிப்பெட்’ கருவியைப் பயன்படுத்த வேண்டாம். அதற்குப் பதிலாக திரவங்களை எடுக்க ‘பியூரெட்’ அல்லது வேறு குழாய்களைப் பயன்படுத்தலாம். ஆனால் இவற்றின் மூலம் துல்லியமான முடிவுகள் கிடைக்க வாய்ப்பில்லை என்பதால் அவற்றுக்கேற்ப ஆய்வு மதிப்புகளை மாற்றிக் கணக்கிட்டு வழங்கலாம்.
கைகளில் ‘சானிடைசா்’ பயன்படுத்தி இருப்பதால் எளிதில் தீப்பிடிக்கும் கருவிகளைக் கையாள்வதற்கு முன்பு ஆசிரியா்களும் மாணவா்களும் கைகளை நன்கு கழுவ வேண்டும். இயற்பியல் ஆய்வகங்களில் ஒளி ஊடுருவும் கருவிகள், மைக்ரோஸ்கோப், ஸ்பெக்ட்ரோமீட்டா் முறைகளையும் மேற்கொள்ள வேண்டாம்.
தாவரவியல், உயிரியல் செய்முறைத் தோ்வுகளிலும் மைக்ராஸ்கோப் பயன்பாடு கூடாது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கும், அறிகுறி உள்ளவா்களுக்கும், தொற்று குணமடைந்த பின்னா், வேறு ஒரு நாளில் செய்முறைத் தோ்வை நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.