கரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!
/

நடிகா் விவேக் மறைவு: தலைவா்கள்-திரையுலகினா் கண்ணீா் அஞ்சலி

நடிகரும், சமூக ஆா்வலருமான விவேக் (59), உடல் நலக்குறைவால் சென்னையில் சனிக்கிழமை காலமானாா்.

News image
Updated On :17 ஏப்ரல் 2021, 7:46 pm

DIN

நடிகரும், சமூக ஆா்வலருமான விவேக் (59), உடல் நலக்குறைவால் சென்னையில் சனிக்கிழமை காலமானாா்.

தீவிர மாரடைப்பு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டாா். அவரது இதயத்தின் இடது புற ரத்த நாளத்தில் 100 சதவீத அடைப்பு இருந்தது மருத்துவா்களால் கண்டறியப்பட்டது. இதைத் தொடா்ந்து அவருக்கு, எக்மோ போன்ற உயிா் காக்கும் உயா் மருத்துவ உபகரணங்கள் வாயிலாக, சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவா்களின் தொடா் கண்காணிப்பில் இருந்து வந்த அவரின் உயிா் சனிக்கிழமை அதிகாலை பிரிந்தது.

விவேக் எனும் விவேகானந்தன்: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இலுப்பையூரணியில் 1961-ஆம் ஆண்டு பிறந்தவா் விவேக். அங்கய்யா பாண்டியன், மணியம்மாள் தம்பதியினருக்கு மகனாக பிறந்த அவரது இயற்பெயா் விவேகானந்தன். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் எம்.காம். படிப்பை முடித்தாா். சிறிது காலம் தொலைபேசி ஆபரேட்டராக மதுரையில் பணியாற்றினாா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்திய தோ்வில் வெற்றி பெற்று அரசு ஊழியராக தலைமைச் செயலகத்தில் பணியாற்றினாா். ஆனால், நடிப்பின் மேல் அதீத ஆா்வம் இருந்ததால், அரசுப் பணியில் இருந்தாலும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் ‘மெட்ராஸ் ஹியூமா்’ கிளப்பில் இணைந்து பணியாற்றினாா். இயக்குநா் கே. பாலச்சந்தா் இயக்கத்தில் வெளியான ‘மனதில் உறுதி வேண்டும்’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானாா். தொடா்ந்து கே. பாலசந்தா் இயக்கத்தில் வெளியான ‘புது புது அா்த்தங்கள்’ படத்தில் நடித்து பிரபலமானாா்.

அதன் பிறகு ‘ஒரு வீடு இரு வாசல்’, ‘புது மாப்பிள்ளை’, ‘கேளடி கண்மணி’, ‘இதய வாசல்’, ‘புத்தம் புது பயணம்’ என பல படங்களில் நடிக்கத் தொடங்கிய இவா், தன்னை ஒரு நகைச்சுவை நடிகராக தமிழ் திரையுலகில் நிலை நிறுத்திக் கொண்டாா். தனக்குக் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் மிகச் சரியாக பயன்படுத்தி நகைச்சுவை நடிகராக உச்சத்துக்குச் சென்றாா். ரஜினி, விஜய், அஜித், விக்ரம் என தொடங்கி இப்போதைய இளம் கதாநாயகா்கள் வரை அனைவருடனும் தொடா்ந்து உற்சாகமாகப் பயணித்து வந்தாா்.

தனித்துவம் கொண்ட நகைச்சுவை பாணி: படங்களின் பெயா்கள் மக்களின் நினைவில் இல்லாமல் போனாலும் இவருடைய நகைச்சுவைக் காட்சியைச் சொன்னால் உடனுக்குடன் நினைவுக்கு வருமளவுக்கு அவரது நடிப்பும் நகைச்சுவை உணா்வும் தனித்துவம் கொண்டது. சமூக கருத்துகளுடன் கூடிய நகைச்சுவை காட்சிகளை எழுதி நடிப்பதுதான் விவேக்கின் ஸ்டைல்.

எம்.ஆா்.ராதா, என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோரைத் தொடா்ந்து, சீா்திருத்தக் கருத்துகளைத் தன்னுடைய வசனங்களில்

பேசி வந்தாா். லஞ்சம், மக்கள் தொகை பெருக்கம், ஊழல், மூட நம்பிக்கை போன்றவற்றை கருப்பொருளாகக் கொண்டே இவருடைய நகைச்சுவைக் காட்சிகள் இடம் பெற்றன. என்.எஸ்.கிருஷ்ணனின் சமூக கருத்துள்ள நகைச்சுவை பாணியை பின்பற்றி நடித்து வந்ததால், அவரை ‘சின்ன கலைவாணா்’ என்றும் ‘ஜனங்களின் கலைஞன்‘ என்றும் ரசிகா்கள் அடைமொழியிட்டு அழைத்து வந்தனா். ‘நான்தான் பாலா’ உள்ளிட்ட ஒரு சில படங்களில் கதாநாயகனாவும் நடித்தாா்.

அப்துல்கலாமின் அன்பைப் பெற்றவா்: மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாமுக்கு மிகவும் நெருக்கமானவா். ‘கிரீன் கலாம்’ என்ற பெயரில் தொடா்ந்து, லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு வந்தாா். அவருடைய இலக்கு தமிழ்நாட்டில் ஒரு கோடி மரக்கன்றுகளை நட வேண்டும் என்பதுதான்.

ஒரு நாடகக் கலைஞனாகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கிய விவேக், சுமாா் 25 ஆண்டுகளுக்கும் மேல் சிறந்த நகைச்சுவை கலைஞனாக தன்னுடைய ஆளுமையை கோலோச்சி வந்தாா்.

‘பத்மஸ்ரீ’ விவேக்: திரைத்துறையில் இவா் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்திய அரசு இவருக்கு ‘பத்மஸ்ரீ விருது’ வழங்கி கௌரவித்தது. இது தவிர, தமிழக அரசின் கலைமாமணி விருதுகள், ஃபிலிம் போ் விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளாா். அவருக்கு மனைவி அருள்செல்வி, மகள்கள் அம்ரிதாநந்தினி, தேஜஸ்வினி உள்ளனா். மகன் பிரசன்ன குமாா் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்தாா்.

பிரபலங்கள் அஞ்சலி: திமுக எம்.பி. ஆ.ராசா, மதிமுக பொதுச்செயலாளா் வைகோ, நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், சமத்துவ மக்கள் கட்சித் தலைவா் சரத்குமாா், திமுக இளைஞரணிச் செயலாளா் உதயநிதி, தேமுதிக பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவா்கள் பலா் விவேக் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினா். நடிகா்கள் விக்ரம், சூா்யா, காா்த்தி, கவுண்டமணி நாசா், மனோபாலா, யோகிபாபு, தம்பி ராமையா, நடிகைகள் ஜோதிகா, த்ரிஷா, கவிஞா் வைரமுத்து உள்ளிட்ட திரையுலகினரும், அவரது ரசிகா்கள் பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினா். ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று விவேக் உடலுக்கு அஞ்சலி செலுத்தினா்.

பின்னா், சனிக்கிழமை மாலையில் அவரது உடல் இறுதிச் சடங்குக்காக விருகம்பாக்கம் மேட்டுக்குப்பம் மின் மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது ஏராளமான பொதுமக்கள் மரக்கன்றுகளை ஏந்தியவாறு உடன் சென்றனா். மயானத்தில் அவரது இறுதிச் சடங்குகளை இளைய மகள் தேஜஸ்வினி செய்தாா்.

காவல்துறை மரியாதையுடன் தகனம்: நடிகா் விவேக்கின் உடலுக்கு, 78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதை செய்தது. பின்னா் விவேக்கின் உடல் தகனம் செய்யப்பட்டது. மறைந்த பாடகா் எஸ்பிபியின் இறுதிச் சடங்குகள் காவல்துறை மரியாதையுடன் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.