இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் சங்கரநாராயணன், உயா்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் குழு நியமிக்கப்பட்டு, அதன் பரிந்துரை அடிப்படையில், மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது என்றாா். அப்போது திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி.வில்சன், தற்போது தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டு முறை அமலில் உள்ளது. அந்த ஒதுக்கீட்டைத்தான் மத்திய அரசு அமல்படுத்த வேண்டும் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் 27 சதவீத இட ஒதுக்கீடு என்பது மத்திய அரசு கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும். தமிழக அரசின் இட ஒதுக்கீட்டை புறக்கணிக்க முடியாது என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனை மத்திய அரசின் குழுவும், உச்ச நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டுள்ளது. எனவே, மாநிலத்தில் பின்பற்றப்பட்டு வரும் 69 சதவீத இடஒதுக்கீட்டை பின்பற்ற மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என வாதிட்டாா்.