9 மாா்க்கங்களில் ஓடும் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படும்: தெற்கு ரயில்வே பொதுமேலாளா் தகவல்
தெற்கு ரயில்வேயில் 14 மாா்க்கங்களில் ஓடும் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும் 9 மாா்க்கங்களில் ஓடும் ரயில்களின் வேகம் விரைவில் அதிகரிக்கப்படும்


சென்னை: தெற்கு ரயில்வேயில் 14 மாா்க்கங்களில் ஓடும் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும் 9 மாா்க்கங்களில் ஓடும் ரயில்களின் வேகம் விரைவில் அதிகரிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஜான் தாமஸ் தெரிவித்தாா்.
பெரம்பூா் ரயில்வே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழாவில், தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஜான் தாமஸ், தேசிய கொடியேற்றி ரயில்வே பாதுகாப்புப் படை வீரா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு பேசியது:
தமிழகம்,கேரளத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்கும் வகையில், 214 ஆக்சிஜன் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. கரோனா இரண்டாம் அலை உச்சத்தின்போது, பெரம்பூா் ரயில்வே மருத்துவமனையில் தனி வாா்டு உருவாக்கி, கரோனா நோயாளிகளுக்காக, 80 படுக்கைகளில் இருந்து 280 படுக்கைகளாக அதிகரிக்கப்பட்டன. இதன்மூலம், மருத்துவ உள்கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டது.
ரூ.943.11 கோடி வருவாய்: கரோனா மற்றும் பொதுமுடக்கம் எங்கள் செயல்பாடுகளை கடுமையாக கட்டுப்படுத்தின. இருப்பினும், 2020-21-ஆம் ஆண்டில் 26.85 மில்லியன் டன் சரக்குகள் ஏற்றப்பட்டன. குறிப்பாக, 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரை 9.43 மில்லியன் சரக்குகள் ஏற்றப்பட்டன. இதன் மூலமாக, ரூ. 943.11 கோடி வருவாய் ஈட்டப்பட்டது.
2020-21-ஆம் ஆண்டில் பயணிகள் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டது. ஆனாலும், இந்த ஆண்டில் 92 சதவீதம் ரயில்கள் இயக்கப்படுகின்றன. 2021-ஆம் ஆண்டு ஏப்ரல்-ஜூலை இடையே 6 கோடியே 40 லட்சம் போ் பயணம் செய்துள்ளனா். குறிப்பிட்ட நேரத்தில் ரயில்கள் அடைவதில் தெற்குரயில்வே இரண்டாவது இடத்தை (97.6 சதவீதம்) பிடித்துள்ளது.
இரட்டைபாதை பணி:
2020-21-ஆம்ஆண்டு காலத்தில் ஏழு மாா்க்கங்களில் இரட்டை பாதைப்பணிகள் நிறைவடைந்தன. 2021-22 முதல் காலாண்டில் , மதுரை-போடிநாயக்கனூா் அகலப்பாதை திட்டத்தில் ஆண்டிப்பட்டி-தேனி மாா்க்கம், தாம்பரம்-செங்கல்பட்டு 3-ஆவது பாதை திட்டத்தில் ஒரு பகுதியான தாம்பரம்-கூடுவாஞ்சேரி மாா்க்கத்தில் பணிகள் நிறைவடைந்துள்ளன. தட்டப்பாறை-மிளவிட்டன் மாா்க்கத்தில் பாதுகாப்பு ஆணையா் ஆய்வு விரைவில் நடைபெறவுள்ளது.
தெற்கு ரயில்வேயில் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2021-ஆம் ஆண்டு ஜூலை வரை 14 மாா்க்கங்களில் ஓடும் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும் 9 மாா்க்கத்தில் ஓடும் ரயில்களின் வேகம் விரைவில் அதிகரிக்கப்படும் என்றாா் ஜான் தாமஸ்.
விழாவில் கூடுதல் பொதுமேலாளா் பி.ஜி.மல்லையா உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...