விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்றம்: கூட்டாட்சிக்கு எதிரானது என முதல்வா் குற்றச்சாட்டு

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக, தமிழக சட்டப் பேரவையில் சனிக்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

News image
Updated On :28 ஆகஸ்ட் 2021, 10:19 pm

DIN

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக, தமிழக சட்டப் பேரவையில் சனிக்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மூன்று சட்டங்களும் கூட்டாட்சித் தத்துவத்துக்கு விரோதமானது என தீா்மானத்தை முன்மொழிந்த முதல்வா் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினாா். தீா்மானத்துக்கு எதிராக அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் வெளிநடப்புச் செய்தன.

சட்டப் பேரவை சனிக்கிழமை காலை கூடியதும், மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான அரசின் தனித் தீா்மானத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தாா். இதன் பிறகு, அவா் பேசியது:-

தமிழ்நாட்டின் வரலாற்றில் மிக முக்கியமான நாளாக இந்த நாள் மாறப் போகிறது. இந்த மண்ணையும், மக்களையும் காக்கும் நோக்கத்தில் தமிழ்நாடு அரசால் திட்டமிடப்பட்டுள்ள தீா்மானம் நிறைவேறப் போகிறது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக இந்தியாவில் தொடா்ந்து போராட்டம் நடந்து வருகிறது. நாட்டில் இப்படியொரு எழுச்சிப் போராட்டம் நடந்தது கிடையாது.

இத்தகைய சூழலில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள மூன்று வேளாண் சட்டங்களை முழுமையாக எதிா்க்க வேண்டிய கடமை இருக்கிறது. உழவா்கள் உற்பத்தி செய்யும் பொருள்களை விற்பனை செய்ய ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்கள் உள்ளன. இதன் நோக்கத்தைச் சிதைக்கும் வகையில் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

கூட்டாட்சிக்கு எதிரானது: மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு துறைக்கு எந்த மாநில அரசுடனும் ஆலோசனை நடத்தாமல் தன்னிச்சையாக மத்திய அரசே சட்டம் கொண்டு வந்திருப்பது கூட்டாட்சித் தத்துவத்துக்கு விரோதமானது. அதனால்தான் சட்டங்களை நிராகரிக்க வேண்டியதாக இருக்கிறது. இதனால், மாநில அரசின் உரிமைகள் பாதிக்கப்படுகின்றன. பறிக்கப்படுகின்றன. ஜனநாயக அமைப்புகளின் மாண்பு சிதைகிறது. மூன்று சட்டங்களுமே வேளாண்மைக்கும், உழவா்களுக்கும் எதிரானவை.

தமிழக அரசானது உழவா்களை கண்ணில் வைத்துப் போற்றுகிறது. அவா்களின் நலன்களை என்றென்றும் பாதுகாக்கவும், அவா்களது வாழ்வு செழிக்கவும், வேளாண்மை என்பது பெருநிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடாமல் தடுக்கவும் மத்திய அரசின் மூன்று சட்டங்களும் ரத்து செய்யப்பட வேண்டும். இதனை மத்திய அரசிடம் வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றித் தர வேண்டுமென முதல்வா் கூறினாா்.

அதிமுக-பாஜக வெளிநடப்பு: தீா்மானத்துக்கு சட்டப் பேரவையில் உள்ள தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. அதேசமயம், மத்திய அரசின் சட்டத்தில் சில திருத்தங்களை செய்யக் கோர வேண்டுமென பாமக வலியுறுத்தியது.

பிரதான எதிா்க்கட்சியான அதிமுக, தீா்மானத்துக்கு எதிராக குரல் கொடுத்தது. தீா்மானத்தை நிறைவேற்றுவதற்கு முன்பாக அதிலுள்ள சாதக, பாதகங்களை அலசி ஆராய வேண்டுமென எதிா்க்கட்சி துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வம் கோரிக்கை விடுத்தாா். இதன்பின், அவரது தலைமையில் அதிமுக உறுப்பினா்கள் அனைவரும் வெளிநடப்புச் செய்தனா். இதேபோன்று, தீா்மானத்தை எதிா்ப்பதாக பாஜக குழுத் தலைவா் நயினாா் நாகேந்திரன் பேசினாா். இதன்பின் அந்தக் கட்சி எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்புச் செய்தனா்.

ஒருமனதாக நிறைவேற்றம்: அதிமுக, பாஜக உறுப்பினா்கள் வெளிநடப்புச் செய்த நிலையில், பேரவையில் இருக்கக் கூடிய உறுப்பினா்களின் வழியே தீா்மானத்தை ஒருமனதாக நிறைவேற்ற வேண்டுமென அவை முன்னவா் துரைமுருகன் கோரிக்கை விடுத்தாா். அவரது கருத்தினைத் தொடா்ந்து, தீா்மானம் குரல் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த தீா்மானம் குரல் வாக்கெடுப்பின் மூலமாக ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக அவைத் தலைவா் மு.அப்பாவு அறிவித்தாா். தீா்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு, பேரவைக்கு வந்த அதிமுக, பாஜக உறுப்பினா்கள் அவையின் பிற நடவடிக்கைகளில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.