'நண்பர்களுடன் செல்கிறேன்': கருணாசாகரின் கடைசி உரையாடல்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கோரமங்கலா என்ற இடத்தில் நள்ளிரவில், அதிவேகமாக வந்த கார் கட்டடம் மீது மோதிய கோர விபத்தில் ஒசூர் திமுக எம்எல்ஏ பிரகாஷ் மகன் கருணாசாகர் உள்பட 7 பேர் பலியாகினர்.
'நண்பர்களுடன் செல்கிறேன்': கருணாசாகரின் கடைசி உரையாடல்
'நண்பர்களுடன் செல்கிறேன்': கருணாசாகரின் கடைசி உரையாடல்
Updated on
2 min read

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கோரமங்கலா என்ற இடத்தில் நள்ளிரவில், அதிவேகமாக வந்த கார் கட்டடம் மீது மோதிய கோர விபத்தில் ஒசூர் திமுக எம்எல்ஏ பிரகாஷ் மகன் கருணாசாகர் உள்பட 7 பேர் பலியாகினர்.

கோரமங்கலா என்ற இடத்தில் அமைந்துள்ள மங்கல கல்யாண மண்டபத்துக்கு அருகே அதிவேகமாக வந்த ஆடி க்யூ3 ரக கார் சாலைத் தடுப்பு மீது மோதி, சாலையோரமிருந்த கட்டடத்தின் தடுப்புச் சுவர் மீது மோதி சுக்குநூறானது. இந்த விபத்தில் 3 பெண்கள் உள்பட 7 பேர் பலியாகினர்.

சம்பவ இடத்திலேயே 6 பேரும் உயிரிழந்ததாகவும், ஒருவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த காரின் காற்றுப்பைகள் திறக்காமல் போனது 7 பேரின் மரணத்துக்கும் காரணமாக இருந்ததாக ஆடுகொடி போக்குவரத்துக் காவலர்கள் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் பலியானவர்கள், திமுக எம்எல்ஏ பிரகாஷின் மகன் கருணாசாகர் (28), டாக்டர் பிந்து, இஷிதா (21), டாக்டர் தனுஷா (21), அக்சய் கோயல் (23), உத்சவ் மற்றும் ரோஹித் (23) என்பது அடையாளம் தெரிய வந்துள்ளது.

விபத்து குறித்து விசாரித்து வரும் காவல்துறையினர் கூறுகையில், இந்த விபத்தில் சிக்கிய கருணாசாகர், மருந்து வாங்க ஒசூரிலிருந்து திங்கள்கிழமை மாலை 5.30 மணிக்கு பெங்களூரு வந்துள்ளார். அவர் பெங்களூருவில் நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். அவரை இரவு 9.30 மணிக்கு செல்லிடப்பேசி வாயிலாக தொடர்பு கொண்ட குடும்பத்தினர் இரவு உணவுக்கு அழைத்துள்ளனர். ஆனால், கருணாசாகர், தான் இரவு உணவுக்கு வீட்டுக்கு வர மாட்டேன் என்றும், நண்பர்களுடன் செல்வதாகவும் கூறியுள்ளார். இதுதான் அவர் குடும்பத்தினருடன் பேசிய கடைசி உரையாடல்.

இந்த நிலையில்தான், கருணாசாகர் மற்றும் அவரது நண்பர்கள் நள்ளிரவில் வந்து கொண்டிருந்த போது கோரமங்கலா என்ற பகுதியில், அவர்கள் வந்த கார் கோர விபத்தில் சிக்கி, காரில் இருந்த 3 பெண்கள் உள்பட 7 பேரும் பலியாகிவிட்டனர். 

இந்த விபத்துக்கு, கவனக்குறைவும், அதிவேகமுமே காரணம் என்று போக்குவரத்துத் துறை கூடுதல் ஆணையர் டாக்டர் ரவிகாந்தே கௌடா தெரிவித்துள்ளார்.

காரை ஓட்டி வந்தவர் குடிபோதையில் இருந்தாரா என்பது குறித்து உறுதி செய்யப்படவில்லை என்றும், அதிவேகமாக வந்த கார், திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர நடைபாதை மீது ஏறி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் சுற்றுச்சுவர் மீது மோதியதாகவும் குறிப்பிட்டுள்ளார். விபத்துக்குள்ளான வாகனம் சஞ்சீவினி ப்ளூ மெடல் என்ற நிறுவனத்தின் பெயரில் பதிவாகியிருந்ததாகவும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், குண்டு வெடித்தது போன்ற சத்தம் கேட்டது, சத்தம் கேட்டு விபத்து நடந்த இடத்துக்கு வந்தவர்கள் ஆம்புலன்ஸ் மற்றும் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். அப்போதே நான்கு பேர் பலியாகிவிட்டிருந்தனர். சுமார் 20 நிமிடங்களுக்கும் மேல் போராடித்தான் வாகனத்தில் சிக்கியிருந்தவர்களின் உடல்களை வெளியே எடுக்க முடிந்தது.

பலியான அனைவரும் 20 முதல் 30 வயதுக்குள்பட்டவர்களாக இருந்தனர். காரில் வந்தவர்களில் மூன்று பேர் முன்னிருக்கையிலும், நான்கு பேர் பின்னிருக்கையிலும் அமர்ந்திருந்தனர். முதற்கட்ட விசாரணையில், யாருமே சீட் பெல்ட் அணிந்திருக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது. பலியான 7 பேரின் உடல்களும் செயின்ட் ஜான்ஸ் மருத்துவமனையில் உடற்கூராய்வுக்காக வைக்கப்பட்டது.

காவல்துறையினர் அளித்த தகவலின் அடிப்படையில், பலியானவர்களில் ஆக்சய் கோயல் கேரளத்தையும், உத்சவ் ஹரியாணாவையும் ரோஹித் ஹூப்ளியையும் சேர்ந்தவர் என்பதும், இவர்களில் சிலர் முதுநிலை மருத்துவ மாணவர் விடுதியில் தங்கியிருந்ததும் தெரிய வந்துள்ளது.

இந்த விபத்தில் சிக்கிய கார் முற்றிலும் உருகுலைந்து போயிருக்கிறது. காரின் உள்பகுதிகள் முழுக்க ரத்தக் கறை படிந்து, காரின் இடதுபக்க டயர்கள் முற்றிலும் சேதமடைந்திருப்பதாகவும் நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com