பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கோரமங்கலா என்ற பகுதியில் நள்ளிரவில் நிகழ்ந்த கார் விபத்தில், காரில் இருந்த ஒசூர் எம்எல்ஏவின் மகன் உள்பட 7 பேர் பலியாகினர்.
இந்த விபத்தில் பலியானவர்களில் ஒருவர், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், ஒசூர் தொகுதி திமுக எம்எல்ஏவுமான பிரகாஷின் மகன் கருணாசாகர் என்பது தெரிய வந்துள்ளது.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளா் தளி.பிரகாஷ் எம்.எல்.ஏ.வின் மனைவி சிவம்மா உடல்நலக் குறைவால் பெங்களூா் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 19-ஆம் தேதி காலமானாா். பேளகொண்டப்பள்ளி கிராமத்தில் சிவம்மாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
பிரகாஷ் எம்எல்ஏவின் மனைவி கடந்த ஏப்ரல் மாதத்தில் உடல்நலக் குறைவால் பலியான நிலையில், அவரது மகன் கருணாசாகர் பெங்களூருவில் நடைபெற்ற கார் விபத்தில் பலியானார். நான்கு மாதங்களில் பிரகாஷ் வீட்டில் இரண்டாவது துயரச் சம்பவம் நடந்துள்ளது. இதனால், குடும்ப உறுப்பினர்களும், நண்பர்களும் அவருக்கு ஆறுதல் அளித்து வருகின்றனர்.
இதையும் படிக்கலாமே.. கரோனா தடுப்பூசி சான்றிதழில் பிழையா? சரி செய்ய வழி இருக்கு
பெங்களூருவில் நிகழ்ந்த கார் விபத்து நள்ளிரவில் நிகழ்ந்ததால், விபத்து எவ்வாறு நடந்தது என்பது குறித்து ஆடுகொடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அப்பகுதியிலிருந்து சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆராய்ந்ததில், சாலையில் அதிவேகமாக வந்த ஆடி கார், திடிரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, ஒரு கட்டடத்தின் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியிருப்பது தெரிய வந்துள்ளது. இந்த சிசிடிவி காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளது.
கோரமங்கலா பகுதியில், நள்ளிரவில் வேகமாக வந்த கார் கட்டடத்தில் மோதி விபத்துக்குள்ளானதில், கார் சுக்குநூறாக நொறுங்கியது. இந்த காரில் இருந்த ஒசூர் தொகுதி திமுக எம்எல்ஏ பிரகாஷின் மகன் கருணாசாகர் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்தில், காரில் இருந்த யாரும் சீட் பெல்ட் அணிந்திருக்கவில்லை என்பதும், அதனால்தான் காற்றுப்பைகள் வேலை செய்யவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது. கார் கட்டடத்தின் மீது மோதி விழுந்த வேகத்தில், கார் பாகங்கள் தெறித்து வெளியே விழுவதும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.