பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கோரமங்கலா என்ற இடத்தில் நள்ளிரவில், அதிவேகமாக வந்த கார் கட்டடம் மீது மோதிய கோர விபத்தில் ஒசூர் திமுக எம்எல்ஏ பிரகாஷ் மகன் கருணாசாகர் உள்பட 7 பேர் பலியாகினர்.
கோரமங்கலா என்ற இடத்தில் அமைந்துள்ள மங்கல கல்யாண மண்டபத்துக்கு அருகே அதிவேகமாக வந்த ஆடி க்யூ3 ரக கார் சாலையின் நடைபாதை மீதேறி, மின்கம்பத்தின் மீது மோதி, சாலையோரமிருந்த வங்கிக் கட்டடத்தின் தடுப்புச் சுவர் மீது மோதி சுக்குநூறானது. இந்த விபத்தில் காரில் இருந்த 3 பெண்கள் உள்பட 7 பேரும் பலியாகினர்.
இந்த விபத்தில் பலியானவர்கள், திமுக எம்எல்ஏ பிரகாஷின் மகன் கருணாசாகர் (28), டாக்டர் பிந்து, இஷிதா (21), டாக்டர் தனுஷா (21), அக்சய் கோயல் (23), உத்சவ் மற்றும் ரோஹித் (23) என்பது அடையாளம் தெரிய வந்துள்ளது.
சம்பவ இடத்திலேயே 6 பேரும் உயிரிழந்ததாகவும், ஒருவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த காரின் காற்றுப்பைகள் திறக்காமல் போனது 7 பேரின் மரணத்துக்கும் காரணமாக இருந்ததாக ஆடுகொடி போக்குவரத்துக் காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், குண்டு வெடித்தது போன்ற சப்தம் கேட்டது, சப்தம் கேட்டு விபத்து நடந்த இடத்துக்கு வந்தவர்கள் ஆம்புலன்ஸ் மற்றும் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். அப்போதே நான்கு பேர் பலியாகிவிட்டிருந்தனர். சுமார் 20 நிமிடங்களுக்கும் மேல் போராடித்தான் வாகனத்தில் சிக்கியிருந்தவர்களின் உடல்களை வெளியே எடுக்க முடிந்தது.
பலியான அனைவரும் 20 முதல் 30 வயதுக்குள்பட்டவர்களாக இருந்தனர். காரில் வந்தவர்களில் மூன்று பேர் முன்னிருக்கையிலும், நான்கு பேர் பின்னிருக்கையிலும் அமர்ந்திருந்தனர். முதற்கட்ட விசாரணையில், யாருமே சீட் பெல்ட் அணிந்திருக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது. பலியான 7 பேரின் உடல்களும் செயின்ட் ஜான்ஸ் மருத்துவமனையில் உடற்கூராய்வுக்காக வைக்கப்பட்டிருந்தது.
காவல்துறையினர் அளித்த தகவலின் அடிப்படையில், பலியானவர்களில் ஆக்சய் கோயல் கேரளத்தையும், உத்சவ் ஹரியாணாவையும் ரோஹித் ஹூப்ளியையும் சேர்ந்தவர் என்பதும், இவர்களில் சிலர் முதுநிலை மருத்துவ மாணவர் விடுதியில் தங்கியிருந்ததும் தெரிய வந்துள்ளது.
இந்த விபத்தில் சிக்கிய கார் முற்றிலும் உருகுலைந்து போயிருக்கிறது. காரின் உள்பகுதிகள் முழுக்க ரத்தக் கறை படிந்து, காரின் இடதுபக்க டயர்கள் முற்றிலும் சேதமடைந்திருப்பதையும் காண முடிந்தது.