மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி அகாதெமியின் 15-வது ஆண்டு பட்டமளிப்பு விழா

மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி அகாதெமியின் பதினைந்தாவது வருடாந்திர பட்டமளிப்பு விழா, காஞ்சிபுரத்தில் உள்ள மீனாட்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி கல்விக்கூடத்தில் நடைபெற்றது. 
மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி அகாதெமியின் 15-வது ஆண்டு பட்டமளிப்பு விழா
Published on
Updated on
2 min read

மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி அகாதெமியின் பதினைந்தாவது வருடாந்திர பட்டமளிப்பு விழா, காஞ்சிபுரத்தில் உள்ள மீனாட்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி கல்விக்கூடத்தின் வண்ணமிகு அரங்கத்தில் சனிக்கிழமை(டிச. 4) அன்று மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி அகாதெமியின் வேந்தர் ஏ.என்.ராதாகிருஷ்ணன், 15 வது பட்டமளிப்பு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து துடிப்புமிக்க பட்டதாரிகளுக்கு பட்டம் வழங்கும் நிகழ்வை அறிவித்தார். இந்த நிகழ்ச்சி, தலைமை விருந்தினரான கோவை அவிநாசிலிங்கம் இல்ல அறிவியல் மற்றும் உயர்கல்விக்கூடத்தின் வேந்தர் டாக்டர் எஸ்.பி. தியாகராஜன் முன்னிலையில் நடைபெற்றது.

முன்னதாக மீனாட்சி கல்வி நிறுவனத்தின் தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன், 15 வது பட்டமளிப்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ளோரை வரவேற்றுப் பேசினார். அவர் தம் உரையில், இந்த அரும்பெரும் தேசத்தின் சிறுவர்களும் இளைஞர்களும் அவர்கள் சக்திக்கேற்ற, உகந்த, சமகால நற்கல்வியைப் பெற வேண்டும் என்கிற சீரிய நோக்கில் 1983 ஆம் ஆண்டு மீனாட்சி அம்மாள் அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டது என்றும் அந்த உயரிய கனவை இப்பொழுது இந்நிறுவனம் நிறைவேற்றி உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

துணை வேந்தர் பேராசிரியர் ஆர்.எஸ்.நீலகண்டன் அவர்கள், மீனாட்சி நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் வருடாந்திர அறிக்கையை சமர்ப்பித்தார். அவர் பேசுகையில், இந்த 15 வது பட்டமளிப்பு நிகழ்ச்சியில், இளநிலை பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள் மற்றும் 49 பிஎச்டி முடித்தவர்கள் உள்ளிட்டோர் தங்கள் பட்டங்களைப் பெறுகிறார்கள் என்று கூறினார். துணை வேந்தர் தமது உரையில் இந்த கல்விக்கூடத்தின்  வசதிகளைப் பற்றி விவரித்து இந்த ஆண்டு பல கோடி பெறுமானத்தில் ஆய்வக சாதனங்களும் கட்டமைப்பு வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டார்  .

கல்வி நிறுவனத்தின் பதிவாளர் பேராசிரியர் சி. கிருத்திகா, கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறையில் தலைமை விருந்தினர் பேராசிரியர் எஸ்.பி.தியாகராஜன் ஆற்றிய மகத்தான பங்களிப்பு பற்றி எடுத்துரைத்தார்.

தமது பட்டமளிப்பு சிறப்புரையில், டாக்டர் எஸ்.பி.தியாகராஜன்,மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி அகாதெமியின் துணைக் கல்லூரிகள் ஆற்றிய மிகச்சிறந்த சாதனைகளைப் பாராட்டிப் பேசினார். NAAC அங்கீகாரம் மற்றும் NIRF தரவரிசை பெற்றதை மெச்சிப் பேசினார். அவர் பட்டம் பெற்ற புதிய பட்டதாரிகள், தங்கள் உத்யோக வாழ்வில் சிறந்து விளங்க தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார். பல்வேறு துறைகளில் பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு பட்டங்களை வழங்கிய பின்னர், கல்வித்துறையில் அளப்பரிய சாதனைகளைப் படைத்தவர்களுக்கு அவர்கள் சாதனைகளைப் போற்றும் வகையில் 66 ஆகச்சிறந்த மாணவர்களுக்கு பதக்கங்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

கோமதி ராதாகிருஷ்ணன் பெயரில் அமைக்கப்பட்ட அலுமினி விருதுகள்,   சமூகத்தில் சிறப்பாக பணியாற்றி வரும் மீனாட்சி கல்வி நிறுவனத்தின் 9 முன்னாள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

மனிதகுலத்துக்கு அரிய சேவைப் பணி ஆற்றுபவருக்கு அளிப்பதற்காக, தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் பெயரில் அமைக்கப்பட்ட விருது சமூக செயல்பாட்டாளர்ஜெயந்திக்கு, கரோனா பெருந்தொற்று தருணத்தில் அவர் ஆற்றிய தன்னலம் கருதாத சேவையைப் போற்றும் வகையில் வழங்கப்பட்டது .

நிகழ்ச்சி நிறைவு தருணத்தில் பட்டமளிப்பு நிறைவு பெற்றதாக வேந்தர் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து நாட்டுப் பண்ணுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com