முசிறி: திருச்சி மாவட்டம் தொட்டியம் ஊராட்சி ஒன்றியம் அலகரையில் குடிநீர் கேட்ட அப்பகுதி மக்கள் சனிக்கிழமை காலிக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொட்டியம் ஊராட்சி ஒன்றியம் அலகரை ஊராட்சி 5 மற்றும் 6 வது வார்டு பகுதியில் மாதம்தோறும் 10 நாட்கள் மோட்டார் பழுது என கூறி குடிநீர் வழங்காததை கண்டித்தும், கொண்டாமாரி செல்லும் வீதி ஆக்கிரமிப்பை அகற்றித் தர வேண்டியும், மேலும் தங்கள் பகுதியில் போதிய வடிகால் வசதி இல்லாததால் மழை நீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், இதனால் கால்நடைகளுக்கு நோய் ஏற்பட்டு பெரும்பாலான கால்நடைகள் இறந்து விட்டதாகவும், மழைநீர் தேங்காதவாறு பஞ்சாயத்து நிர்வாகம் வடிகால் அமைத்து தராமல் மெத்தனமாக இருப்பதை கண்டித்தும் அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மணமேடு - பவித்திரம் சாலையில் அலகரை பேருந்து நிறுத்தம் பகுதியில் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு பேருந்துகளை சிறைப்பிடித்தனர்.
தகவலறிந்த முசிறி காவல் துணை கண்காணிப்பாளர் அருள்மணி, தொட்டியம் காவல் ஆய்வாளர் மோகன்ராஜ், தொட்டியம் மண்டல துணை வட்டாட்சியர் கவிதா, தொட்டியம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஞானமணி, ஆறுமுகம் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி காவிரி குடிநீர் வாங்குவதற்கான உடனடி நடவடிக்கையை மேற்கொண்டும், ஆக்கிரமிப்பு மற்றும் வடிகால் வசதி செய்து தருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் கூறியதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் தங்களது போராட்டத்தை விலக்கிக் கொண்டு கலைந்து சென்றனர்.
இதனால் மணமேடு - பவித்திரம் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.