சாலை அமைக்காவிட்டால் ஓட்டு கேட்டு வருபவர்களை ஓட ஓட விரட்டுவோம்: பெண்கள் ஆவேசம்

சட்டப்பேரவை தேர்தலுக்குள் சாலை அமைக்காவிட்டால் ஓட்டு கேட்டு வருபவர்களை ஓட ஓட விரட்டுவோம் என பெண்கள் ஆவேசமாக கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சாலை அமைக்க அனுமதி தராத வனத்துறையை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்.
சாலை அமைக்க அனுமதி தராத வனத்துறையை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்.

செங்கல்பட்டு: சாலை அமைக்க அனுமதி தராத வனத்துறையை கண்டித்து நல்லம்பாக்கம் மற்றும் கீரப்பாக்கம் ஊராட்சி மக்கள் வெள்ளிக்கிழமை நல்லம்பாக்கத்திலிருந்து ஊரப்பாக்கம் செல்லும் சாலையில் அமர்ந்து லாரிகளை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சட்டப்பேரவை தேர்தலுக்குள் சாலை அமைக்காவிட்டால் ஓட்டு கேட்டு வருபவர்களை ஓட ஓட விரட்டுவோம் என பெண்கள் ஆவேசமாக கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையான ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் தொடங்கி, வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் இணையும் ஊரப்பாக்கம் நல்லம்பாக்கம் சாலை 14 கிலோமீட்டர் கொண்டது. 
இந்த சாலையில் உள்ள அருங்கால் முதல் காட்டூர் வரையிலும், இதேபோல் நல்லம்பாக்கம் கிராமத்திலிருந்து நல்லம்பாக்கம் கூட்டுரோடு வரையிலும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. 

இதில் ஏற்கனவே கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இந்த சாலை சில மாதங்களிலேயே குண்டும் குழியுமாக மாறிவிட்டது. இதனை சீரமைக்க நெடுஞ்சாலை துறையினர் முயன்றபோது வனத்துறையினர் தடுத்து நிறுத்தி விட்டனர்.

இதனால் இந்த சாலை கடந்த 21 ஆண்டுகளாக சாலை அமைக்கப்படாமல் குட்டை, குளம் போன்று காட்சி அளிக்கிறது. இதனால் மேற்படி சாலையில் இயங்கி வந்த 5-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் மாநகர பேருந்துகள் துண்டிக்கப்பட்டு விட்டன.

இந்நிலையில், மேற்படி சாலையை அமைக்க ரூ.4 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் கடந்த வாரம் தொடங்கியது.  ஆனால் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் சாலை அமைக்க கூடாது என்று நெடுஞ்சாலைத்துறையை வனத்துறையினர் தடுத்து நிறுத்தி விட்டனர் .

இதனால் ஆத்திரமடைந்த நல்லம்பாக்கம் மற்றும் கீரப்பாக்கம் ஊராட்சி பொதுமக்கள் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் துலுக்கானம் தலைமையில் நலம்பாக்கத்தில் இருந்து ஊரப்பாக்கம் செல்லும் சாலையில் அமர்ந்து லாரிகளை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டம் ஈடுபட்டனர். 

அப்போது பெண்கள் மற்றும் மக்கள் கூறுகையில், ஊரப்பாக்கம் நல்லம்பாக்கம் சாலையை சீரமைக்கக் கோரி கடந்த 21 ஆண்டுகளாக மனு கொடுத்தும், பல்வேறு போராட்டங்களை நடத்தியும் பயனில்லை. மேலும் கிராம சபை கூட்டத்தை புறக்கணிக்கும் போதும்,  தேர்தல் நேரங்களில் தேர்தல் புறக்கணிப்பு செய்யும் போதும் அதிகாரிகள் விரைந்து வந்து மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தேர்தல் முடிந்ததும் சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கின்றனர். ஆனால் தேர்தல் முடிந்த பின்பு வழக்கம் போல் சாலை அமைக்காமல் பொதுமக்களை ஏமாற்றி விடுகின்றனர். 

எனவே வருகின்ற சட்டப்பேரவை தேர்தலுக்குள் மேற்படி சாலையை சீரமைக்க வேண்டும். இல்லையென்றால் நல்லம்பாக்கம் மற்றும் கீரப்பாக்கம் ஊராட்சி பொதுமக்கள் தேர்தலைப் புறக்கணிப்போம். மேலும் ஓட்டு கேட்டு வருபவர்களை ஓட ஓட விரட்டுவோம் என பெண்கள் ஆவேசமாக ஆவேசமாக கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அதிகாரிகள் அளித்த உத்தரவின் பேரில் போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com