எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

வீட்டிலிருந்த இரட்டைக் குழந்தைகளைத் தூக்கிச் சென்ற குரங்குகள்: ஒரு குழந்தை பலி

தஞ்சாவூரில் சனிக்கிழமை பிற்பகலில் வீட்டிலிருந்த இரு பச்சிளம் குழந்தைகளைக் குரங்குகள் தூக்கிச் சென்றன.

News image
சம்பவம் நிகழ்ந்த வீடு.
Updated On :13 பிப்ரவரி 2021, 11:22 am

DIN

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் சனிக்கிழமை பிற்பகலில் வீட்டிலிருந்த இரு பச்சிளம் குழந்தைகளைக் குரங்குகள் தூக்கிச் சென்றன. அதில் குரங்குகளால் அகழியில் போடப்பட்ட ஒரு குழந்தை உயிரிழந்தது.

தஞ்சாவூர் மேலவீதி கோட்டை அகழியைச் சேர்ந்தவர் ராஜா (29). வர்ணப்பூச்சு தொழிலாளி. இவரது மனைவி புவனேஸ்வரி (26). இவர்களுக்கு ஏற்கெனவே ஜீவிதா (5) என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் 7 நாள்களுக்கு முன்பு புவனேஸ்வரிக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தன.

வீட்டின் நடுவில் பிற்பகல் 1.30 மணியளவில் புவனேஸ்வரி தனது இரு குழந்தைகளையும் பாயில் படுக்க வைத்துவிட்டு, கழிப்பறைக்குச் சென்றார். அப்போது, குரங்குகள் வீட்டுக்குள் புகுந்த சப்தம் கேட்டது. வழக்கமாக குரங்குகள் வீட்டுக்குள் புகுந்து உணவுப் பொருள்களைத் தூக்கிச் செல்வது வழக்கம். அதுபோல நினைத்துக் கொண்டு கழிப்பறையை விட்டு புவனேஸ்வரி வெளியே வந்தார். 

உயிருடன் மீட்கப்பட்ட குழந்தையுடன் புவனேஸ்வரி.

உயிருடன் மீட்கப்பட்ட குழந்தையுடன் புவனேஸ்வரி.

படுக்கையில் இருந்த இரு பச்சிளம் குழந்தைகளைக் காணாததைக் கண்டு திடுக்கிட்டார். குழந்தையின் அழுகுரல் கேட்டு மேற்கூரையை புவனேஸ்வரி பார்த்தபோது, ஒரு குரங்கு தனது கையில் ஒரு குழந்தையை வைத்து அமர்ந்திருந்தது. புவனேஸ்வரி சப்தம் போட்டதும், அக்கம்பக்கத்தினர் திரண்டனர். பின்னர் எல்லோரும் சப்தம் எழுப்பியதும் குழந்தையைக் குரங்கு மேற்கூரையிலேயே போட்டுவிட்டுச் சென்றது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் மேலே ஏறிச் சென்று குழந்தையை மீட்டு வந்தனர்.

இதனிடையே, மற்றொரு குழந்தையைக் காணாததால் மக்கள் தேடியபோது, வீட்டின் பின்புறமுள்ள அகழியில் வேறொரு குரங்கு வீசிச் சென்றிருப்பது தெரிய வந்தது. கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் தண்ணீரில் மூழ்கிக் கிடந்த அக்குழந்தையை அப்பகுதி மக்கள் மீட்டு, அரசு ராசாமிராசுதார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். குழந்தையை மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்த பிறகு ஏற்கெனவே இறந்துவிட்டது எனக் கூறினர். இதனால் புவனேஸ்வரியும், உறவினர்களும் கதறி அழுதனர். 

இறந்த குழந்தை.

இறந்த குழந்தை.

மற்றொரு குழந்தைக்குப் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என அப்பகுதி மக்கள் கூறினர். இச்சம்பவம் குறித்து தஞ்சாவூர் மேற்கு காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

குரங்குகள் தொல்லை அதிகம்:
ஏழை மக்கள் பெருமளவில் வசித்து வரும் மேல அலங்கத்தில் ஓடுகள், கூரை வேயப்பட்ட வீடுகளே அதிகம். இந்நிலையில், மேல வீதி, மேல அலங்கம் உள்ளிட்ட பகுதிகளில் 20-க்கும் அதிகமான குரங்குகள் ஓராண்டுக்கும் மேலாக வந்து செல்கின்றன. கூரைகளைப் பிரித்து வீட்டுக்குள் புகுந்து செல்லும் குரங்குகள் உணவு உள்ளிட்ட சிறு சிறு பொருள்களைத் தூக்கிச் செல்கின்றன. இதனால், அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

இதுகுறித்து வனத் துறையினரிடம் அப்பகுதி மக்கள் பல முறை புகார் செய்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இதனால், நாளுக்குநாள் குரங்குகள் தொல்லை அதிகரித்து வருகிறது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

தற்போது குழந்தைகளையும் குரங்குகள் தூக்கிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதால், உடனடியாகக் கட்டுப்படுத்த வனத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.