இது குறித்து காவல் துறை தரப்பில் கூறப்பட்டதாவது:
தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கடந்த 21-ஆம் தேதி திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டையில் நடைபெற்ற பல்வேறு அரசு விழாக்களில் பங்கேற்றார். முதல்வரின் பாதுகாப்புக்காக தமிழக காவல் துறையின் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் அங்குச் சென்றார். அங்கு ராஜேஷ்தாஸ், முதல்வருக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தார்.
இந்நிலையில் இப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு இளம் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு ராஜேஷ்தாஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து அந்தப் பெண் அதிகாரி, தமிழக காவல் துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி, தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் ஆகியோரிடம் கடந்த செவ்வாய்க்கிழமை புகார் அளித்தார்.
இச் சம்பவம் தமிழக காவல் துறையினரிடம் பெரும் அதிர்ச்சியையயும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. அதேவேளையில் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள், பாலியல் புகாரில் சிக்கியுள்ள ராஜேஷ் தாஸ் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தின.