இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் தா.பாண்டியன் உடல் நல்லடக்கம்: ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனின் உடல் டேவிட் பண்ணையில் சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா பாண்டியன் இறுதி ஊர்வலம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா பாண்டியன் இறுதி ஊர்வலம்
Published on
Updated on
2 min read

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன்(89) வெள்ளிக்கிழமை காலமானார். அவரது உடல் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கீழவெள்ளமலைபட்டியில் உள்ள அவருக்குச் சொந்தமான டேவிட் பண்ணையில் சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட்டது.

உடல்நலக் குறைவால் சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன்(89) வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு காலமானார். 

தா.பாண்டியன் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் மதுரை மக்களவை உறுப்பினர் வெங்கடேசன்
தா.பாண்டியன் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் மதுரை மக்களவை உறுப்பினர் வெங்கடேசன்

சென்னை அண்ணாநகரில் தா. பாண்டியன் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். 
இந்நிலையில் சனிக்கிழமை அவரது உடல் சொந்த ஊரான மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கீழவெள்ள மலைப்பட்டிக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. 

அவரது உடலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், சி.மகேந்திரன், பி.சேதுராமன், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் சரவணன்,  புறநகர் மாவட்டச் செயலாளர் பா.காளிதாசன்,  உள்ளிட்ட அனைத்து கட்சியினர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்த கீழே வெள்ளமலைபட்டியில் அஞ்சலி செலுத்தும் கம்யூனிஸ்டு தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்த கீழே வெள்ளமலைபட்டியில் அஞ்சலி செலுத்தும் கம்யூனிஸ்டு தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள்

மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு சார்பில் மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் க.கனகராஜ், மதுக்கூர் இராமலிங்கம், மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன், மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், மாநிலக் குழு உறுப்பினர்கள் எஸ்.கே.பொன்னுத்தாய், எஸ்.பாலா, ஆகியோர் தா.பா. உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

திமுக திருப்பரங்குன்றம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பா. சரவணன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, தமுஎகச சார்பில் மாநில நிர்வாகி கருணாநிதி,   கோடங்கி சிவமணி ஆகியோர் தா.பாண்டியனுக்கு அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து கீழவெள்ளமலைபட்டியில் உள்ள அவருக்குச்  சொந்தமான டேவிட் பண்ணையில் தோட்டத்தில் சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட்டது.

முன்னதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தலைமையில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் அனைத்து கட்சித் தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com