தொடர் கனமழை: தாமிரவருணியில் கடும் வெள்ளப்பெருக்கு
தொடர் மழை காரணமாக பாபநாசம் மணிமுத்தாறு அணையில் இருந்து சுமார் 45 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டதால் தாமிரவருணியில் கடும் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது.


அம்பாசமுத்திரம்: தொடர் மழை காரணமாக பாபநாசம் மணிமுத்தாறு அணையில் இருந்து சுமார் 45 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டதால் தாமிரவருணியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றங்கரையில் இருந்த கோவில்கள், குடியிருப்புகள், விளைநிலங்கள் நீரில் மூழ்கின.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகள் முழுக்கொள்ளளவை எட்டியுள்ளன. குறிப்பாக 143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணையில் இருந்து செவ்வாய் இரவு நேரப்படி சுமார் 18 ஆயிரம் கன அடி தண்ணீரும் 118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணையில் இருந்து சுமார் 25 ஆயிரம் கன அடி தண்ணீரும் திறக்கப்படுகின்றது.

அம்பாசமுத்திரம் தாமிரவருணி பாலம் அருகே உள்ள இசக்கியம்மன் கோயிலில் வெள்ளம் சூழ்ந்துள்ளது
மேலும் கடனாநதி, ராமநதி உள்ளிட்ட இதர துணை ஆறுகளின் மூலமாக தாமிரவருணியில் வினாடிக்கு 50 ஆயிரம் கன அடிக்கும் அதிகமான நீர் செல்வதால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றின் கரையோரம் உள்ள கோவில்களில் வெள்ளம் புகுந்தது. மேலும் விளைநிலங்கள் நீரில் மூழ்கின.
அம்பாசமுத்திரம் ஆலடியூர், கல்லிடைக்குறிச்சி, பாப்பாக்குடி, விக்கிரமசிங்கபுரம், பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட மக்கள் தாழ்வான பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு அரசு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மணிமுத்தாறு அணை அடிவாரத்தில் உள்ள பாலம் அளவுகடந்த வெள்ளத்தால் பெயர்ந்து சேதமடைந்தது.
பாபநாசத்தில் யானைப் பாதைப் பாலத்தை மூழ்கியபடி வெள்ளப்பெருக்கு இருந்ததால் பாபநாசத்திற்கு போக்குவரத்துத் துண்டிக்கப்பட்டது. மாஞ்சோலை மலைப்பகுதிக்குச் செல்லும் மலைச்சாலையில் மண்சரிவு மற்றும் சாலையில் மரங்கள் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்துத் தடைபட்டுள்ளது.
இதற்கிடையே மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் மற்றும் அதிகாரிகள் முக்கூடல், திருப்புடைமருதூர், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்க புரம் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களைப் பார்வையிட்டனர். மேலும் பாபநாசத்திற்கு வந்து யானைப்பாலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை பார்வையிட்டதோடு தீயணைப்பு வீரர்களை யானைப்பாலத்தை கடந்து பாபநாசம் கோயில், பொதிகையடி பகுதிகளில் மக்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்திச் சென்றனர்.

பாபநாசத்தில் வெள்ளப்பெருக்கைப் பார்வையிடும் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் மற்றும் அதிகாரிகள்
இந்நிலையில் இரவு 12 மணிக்கு மேல் மழை குறைந்து அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தது. இதனால் வெள்ளப்பெருக்கும் வடியத் தொடங்கியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...