நானும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வேன்: முதல்வர் பழனிசாமி

நானும் கட்டாயம் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வேன் என்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கூறியுள்ளார்.
முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி  (கோப்புப்படம்)
முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி (கோப்புப்படம்)


மதுரை: நானும் கட்டாயம் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வேன் என்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கூறியுள்ளார்.

இன்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி போடும் பணிகளைத் தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் அளித்த பேட்டி, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் எடுத்த முயற்சி இன்று வெற்றி பெற்றுள்ளதற்கு, அவருக்கு தமிழ்நாடு மக்களின் சார்பாக பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவிக்க விரும்புகிறேன். கரோனா வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதாக பரவக்கூடிய ஒரு தொற்றுநோய். இதனால் பலர் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள், இலட்சக்கணக்கானவர்கள் குணமடைந்து வீடு திரும்பியிருக்கின்றார்கள். இதற்கு இதுவரை சரியான மருந்து கண்டுபிடிக்காமல் இருந்து வந்த சூழ்நிலையில், நமது பிரதமர் நரேந்திர மோடியின் விடாமுயற்சி காரணமாக கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, அதை இன்றைய தினம் இந்திய நாட்டு மக்கள் அனைவருக்கும் அர்ப்பணித்து இருக்கிறார்.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பணியாற்றுகின்ற மருத்துவ முன்களப் பணியாளர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்பதற்காக, முதற்கட்டமாக, அவர்களுக்கு இந்தத் தடுப்பூசியை போடும் நடவடிக்கையை பிரதமர் நரேந்திர மோடி இன்றையதினம் டெல்லியில் தொடங்கி வைத்துள்ளார். 

அவரைத் தொடர்ந்து தமிழகத்தில், மதுரையில் இந்தத் தடுப்பூசி போடும் பணி இன்றையதினம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை, முதற்கட்டமாக நம்முடைய மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் அனைவருக்கும் இந்தத் தடுப்பூசி போடப்படும்.

கேள்வி: நீங்கள் தடுப்பூசி எடுப்பதற்கான வாய்ப்பு இருக்கிறதா?
பதில்: நிச்சயமாக, அனைவரும் எடுக்க வேண்டும். இந்திய நாட்டிலிருக்கின்ற அனைத்து மக்களையும் காப்பாற்ற வேண்டுமென்பதற்காகத்தான் இந்தத் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி வழங்குவதில் முன்னுரிமை கொடுக்கின்றார்கள். கரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவல் தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எளிதாக தொற்று ஏற்பட்டுவிடுமென்பதால், நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப்போல், அரசு மற்றுத் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் அனைவருக்கும் முதற்கட்டமாக இந்தத் தடுப்பூசி போடுவதற்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

கேள்வி: நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறதா? இல்லையா? என்பதற்கு என்ன அளவுகோல் உள்ளது?
பதில்: முதன்முறை தடுப்பூசி போடப்பட்ட பின் 28 நாட்கள் கழித்து மீண்டும் இரண்டாவது முறையாக போடப்படும். அதன் பிறகு 42 நாட்கள் கவனமாக இருக்க வேண்டும். அதற்குப் பிறகு, நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படுமென்று ஆராய்ச்சி மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கென, முழு விவரங்கள் அடங்கிய தகவல்களை கொடுத்திருக்கிறார்கள். நம்முடைய மருத்துவர்களை கலந்தாலோசித்து, எனக்கு கொடுக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில்தான் நான் கருத்துக்களைக் கூறிக் கொண்டிருக்கிறேன்.

கேள்வி: அரசு எவ்வளவுதான் சொன்னாலும், மக்களுக்கு இயதத் தடுப்பூசி போட்டுக்கொண்டால் பாதிப்பு வருமென்ற பயம் இருக்கிறதே, அந்த பயத்தைப் போக்குவதற்கு...

பதில்: முதலில் அவ்வாறு இருக்கத்தான் செய்யும். முதன்முதலாக, இன்று அரசு மருத்துவ சங்கத்தைச் சேர்ந்த தலைவர் செந்தில் அவர்கள் போட்டுக் கொண்டார். பிறகு, அகில இந்திய அளவில் இருக்கின்ற மருத்துவச் சங்கத்தின் தலைவர் போட்டுக் கொண்டார். பிறகு மருத்துவர்கள், செவிலியர்கள் போட்டுக் கொண்டார்கள். மருத்துவர்களே போடுகிறார்களென்றால், சரியாக ஆராய்ச்சி செய்துதான் இந்த மருந்தைக் கண்டுபிடித்திருக்கிறார்கள், இந்த ஊசி சரியாக போடப்பட்டால் நமது உடலில் எதிர்ப்பு சக்தி ஏற்படுமென்று கருதித்தான் செய்கிறார்கள். நாம் சாதாரண மக்கள், நோய் வந்தால் நாம் இந்த மருத்துவர்களிடம்தான் செல்கிறோம், அவர்கள்தான் நம்மை காப்பாற்றுகின்றார்கள். அப்படி நம்மை காப்பாற்றுகின்றவர்களே முன்னிருந்து, இன்று தமிழகத்தில் முதன்முதலாக அரசு மருத்துவர் சங்கத் தலைவராக உள்ள அவரே போட்டுக் கொண்டுள்ளார் என்றால், இதில் தவறு நடப்பதற்கில்லை. முதலில் கொஞ்சம் அச்சமாகத்தான் இருக்கும், போகப் போக அது சரியாகி விடும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com