ஸ்டாலின் கையில் வேல் எடுத்தாலும் கடவுள் வரம் தரமாட்டார்: முதல்வர் பழனிசாமி

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கையில் வேல் எடுத்தாலும் கடவுள் வரம் தரமாட்டார் என்று முதல்வர் பழனிசாமி கூறினார். 
கோவையில் இரண்டாவது நாளாக புலியகுளத்தில் தோ்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ள முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.
கோவையில் இரண்டாவது நாளாக புலியகுளத்தில் தோ்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ள முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.


கோவை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கையில் வேல் எடுத்தாலும் கடவுள் வரம் தரமாட்டார் என்று முதல்வர் பழனிசாமி கூறினார். 

வெற்றி நடை போடும் தமிழகம் என்ற பெயரில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்து அதிமுகவுக்கு வாக்கு சேகரித்து வருகிறார். 

அதன் ஒரு பகுதியாக முதல்வர் பழனிசாமி இரண்டு நாள் தேர்தல் சுற்றுப் பயணமாக வெள்ளிக்கிழமை மாலை கோவை வந்தார். சனிக்கிழமை காலை கோவையில் உள்ள காக்கும் தெய்வம் கோனியம்மனை வேண்டி தன்னுடைய பிரசாரத்தை தொடங்கினார். 

அதனைத் தொடர்ந்து கோவை தேர்முட்டி ராஜவீதி, செல்வபுரம், உக்கடம், பேருந்து நிலையம், ஆத்துப்பாலம், போத்தனூர், கிணத்துக்கடவு வழியாக பொள்ளாச்சி பகுதியில் சுற்றுப்பயணம் செய்து தன்னுடைய பிரசாரத்தை மேற்கொண்டார். 

அதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது நாள் பிரசாரத்தை முதல்வர் பழனிசாமி காலை 8.30 மணி அளவில் ராமநாதபுரம் புலியகுளம் பகுதியில் உள்ள வேண்டும் வரம் தரக்கூடிய முந்தி விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு பிரசாரத்தை தொடங்கினார். முதல்வருக்கு கோவில் நிர்வாகம் சார்பாக அவருக்கு பூரண மரியாதை அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொது மக்களிடம் முதல்வர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

திமுக தலைவர் ஸ்டாலின் வேலை கையில் எடுத்துவிட்டார்.  நாம் மனப்பூர்வமாக பிராத்தனை செய்கிறோம். உண்மையாக இருக்கிறோம். ஸ்டாலின் வெளியே பேசுவது ஒன்று, உள்ளே இருப்பது வேறு ஒன்றாக உள்ளது. அவருக்கு கடவுள் வரம் அளிக்க மாட்டார். பக்தர்களின் கோரிக்கை அடுத்து தைப்பூசம் பொதுவிடுமுறை அளிக்கப்பட்டது.

அதிமுக அனைத்து மதங்களையும் சமமாக என்னுகின்றனர். திமுகவினர் பகல் வேசம் போடுகின்றனர். தேர்தல் வந்துவிட்டதால் தான் அவ்வாறு செய்கின்றனர். அவர்களுக்கு மக்கள் தக்க தண்டனை வழங்குவார்கள்.

அதிமுக மாணவர்களுக்கு பல நல் திட்டங்களை வழங்கியுள்ளது. 332 பேர் 7.5% இட ஒதுக்கீட்டால் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். 92 பேர் பல் மருத்துவமனை சேர்ந்துள்ளனர். 

ஸ்டாலினுக்கு முருகன் வரம் கொடுக்க மாட்டார். வரம் கொடுக்க போவது அதிமுகவிற்கு தான். சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அளிக்கும் அரசு அதிமுக. சனிக்கிழமை நான் சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் சாலையின் இரு புறங்களிலும் நின்று அன்புடன் வரவேற்றனர். இதை பார்க்கும் போது 2021 தேர்தலில் மக்களிடையே மீண்டும் ஒரு புது எழுச்சி ஏற்பட்டுள்ளது.

இந்த எழுச்சியை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்கள் ஆட்சியை மீண்டும் வரவேண்டும் என்பதற்கான எழுச்சியாக நான் பார்க்கிறேன். 

கோவையில் விரைவில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட்டவுடன் வெளிநாட்டுக்கு இணையாக கோவையில் வர்த்தகம் நடக்கும். தூய்மை மிகுந்த நகரமாகவும், வேலைவாய்ப்பு மிக்க நகரமாக தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்த கூடிய நகரமாக திகழும். 

கொங்கு மக்கள் எப்பொழுதுமே அதிமுக அரசு மீது அன்பு கொண்டவர்கள். கோவை மாவட்டத்தை தொடர்ந்து அதிமுகவின் கோட்டையாக அமைச்சர் எஸ். பி வேலுமணி வைத்துள்ளார். நல்ல பல திட்டங்களை என்னிடம் பேசி பெற்று செயல்படுத்தி வருகிறார். கோவையில் ராணுவ தளவாட உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். ஆதலால் தொடர்ந்து நன்மைகள் பல கிடைக்க எம்ஜிஆர், ஜெயலலிதா அவர்களின் ஆசி பெற்ற சின்னமான இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்கும்படி உங்களை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன் என்று முதல்வர் பழனிசாமி பேசினார். 

முதல்வர் வருகையையொட்டி அவினாசி சாலையில் இருந்து ராமநாதபுரம் சாலை வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இரண்டு புறங்களிலும் மக்கள் கட்சி கொடிகளை ஏந்தியபடி சாலை நெடுகிலும் மக்கள் காத்திருந்து முதல்வருக்கு வரவேற்பு கொடுத்தனர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ். பி வேலுமணி உட்பட எம்.எல்.ஏ.க்கள் மாவட்ட கழக ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com