வெளிநாடு செல்ல விசாவுக்கு பணம் கொடுத்து ஏமாந்த இளைஞர்கள்

வெளிநாடு சென்று பொருள் ஈட்ட விரும்பி தப்பான நபர்களிடம் பணத்தைக் கொடுத்து  ஏமாந்த இளைஞர்களும், பணம் கொடுத்துதவிய பெற்றோர்களும் வேதனையில் உள்ளனர்.
ஆவணம் போலியானது என்று தில்லியில் உள்ள மொரிஷீயஸ் தூதரகம், இளைஞருக்கு அனுப்பிய மின்னஞ்சல்
ஆவணம் போலியானது என்று தில்லியில் உள்ள மொரிஷீயஸ் தூதரகம், இளைஞருக்கு அனுப்பிய மின்னஞ்சல்

துறையூர்: வெளிநாடு சென்று பொருள் ஈட்ட விரும்பி தப்பான நபர்களிடம் பணத்தைக் கொடுத்து  ஏமாந்த இளைஞர்களும், பணம் கொடுத்துதவிய பெற்றோர்களும் வேதனையில் உள்ளனர்.

கோயம்புத்தூரில் ராயல் விசாஸ் அண்ட் இமிக்ரேசன் சர்வீசஸ் (Royal visa's and immigration services) என்ற நிறுவனம் உள்ளது. இதனை கோயம்புத்தூரைச் சேர்ந்த வினோத்தும், பாண்டிச்சேரியைச் சேர்ந்த சுமனும் நிர்வகித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிறுவனத்தின் முகவராக கோயம்புத்தூரைச் சேர்ந்த விமல் செயல்படுகிறார். இவரும் (விமலும்) துறையூர் அருகேயுள்ள கோட்டப்பாளையத்தைச் சேர்ந்த விவேக்கும் நண்பர்கள்.

இந்த நிலையில் விவேக்குக்கு தெரிந்த கோட்டப்பாளையத்தைச் சேர்ந்த சுதாகர், செந்தில்குமார், திலிப்குமார் உள்ளிட்ட 11 பேர் வெளிநாடு சென்று பொருள் ஈட்ட விரும்பி விவேக், விமல் மூலமாக ராயல் விசாஸ் நிறுவனத்தை அணுகியுள்ளனர். இவர்களின் வசதிக்கேற்ப மொரீசியஸ் நாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி தலா ரூ. 1.40 வரையிலும் பணத்தை பெற்றுக் கொண்டு 4 பேருக்கு ஏற்றுமதி நிறுவனத்திலும், 5 பேருக்கு உணவக நிறுவனங்களிலும், 2 பேர் ஓட்டுனர் வேலைக்கும் விசா பெற்றுத் தந்துள்ளனர்.

போலி இ-விசா
போலி இ-விசா

அவர்கள் கொடுத்த விசாவை சோதித்தபோது அது உண்மையான விசா இல்லை என்று தெரிந்தது. இதுதொடர்பாக ராயல் விசாஸ் நிறுவனத்தை தொடர்பு கொண்டபோது அவர்களுடைய பதில் திருப்தியில்லை. இதனையடுத்து போலி விசா தந்து பண மோசடி செய்ததாக திருச்சி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் புகாரளித்தனர். மேலும், அவர்கள் அந்நிறுவனத்தின் முகவாரன விமலைத் தொடர்பு கொண்டு பணத்தை திரும்பத் தருமாறு கேட்டு வந்தனர்.

இந்த நிலையில் ஜூலை 7ஆம் தேதி சென்னையில் உள்ள கிண்டியில் வெளிநாடு செல்ல விரும்புபவர்களிடம் சுமன் நேர்காணல் செய்வதாக விமல் கொடுத்த தகவலின் பேரில் கோட்டப்பாளையம் கிண்டிக்கு விரைந்து சென்று சுமனை பிடித்து அங்குள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஆனால் கிண்டி போலீஸார் தங்கள் எல்லையில் குற்றம் நடைபெறவில்லை என்று கூறி சுமனை இளைஞர்கள் பிடியில் இருந்து விடுவித்துள்ளனர்.

ஆயினும் மனம் தளராத இளைஞர்கள் சுமனை காரில் ஏற்றிக் கொண்டு திருச்சி எஸ்பி அலுவலகத்தில் வியாழக்கிழமை ஆஜர்படுத்தினர். அங்கு தற்போது இளைஞர்களிடமும் சுமனிடமும் விசாரணை நடைபெறுகிறது.

பணத்தை கொடுத்து ஏமாந்த இந்த இளைஞர்கள் சொந்து வீடுகளில் கூட நிம்மதியின்றி இருக்க வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com