புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

மேக்கேதாட்டு விவகாரம்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் 3 தீர்மானங்கள்

மேக்கேதாட்டு அணைப் பிரச்னை தொடர்பாக, முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இன்று மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

News image
மேக்கேதாட்டு விவகாரம்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் 3 தீர்மானங்கள்
Updated On :12 ஜூலை 2021, 11:52 am

DIN


சென்னை: மேக்கேதாட்டு அணைப் பிரச்னை தொடர்பாக, முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இன்று மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் 13 கட்சிகளின் சார்பில் அதன் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

காவிரியின் குறுக்கே, கர்நாடக அரசு கட்ட திட்டமிட்டிருக்கும் மேக்கேதாட்டு அணை திட்டத்துக்கு மத்திய அரசு எந்த அனுமதியும் வழங்கக் கூடாது என்று முதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேக்கேதாட்டு அணை தொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேக்கேதாட்டு அணை விவகாரத்தில், தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு அனைத்துக் கட்சிகளும் முழு ஒத்துழைப்பு தருவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும், மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அனைத்துக் கட்சி பிரதிநிதிகளும் தில்லிக்கு நேரில்  சென்று  மத்திய அரசிடம் வழங்குவது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், மேக்கேதாட்டு பிரச்னை குறித்து நடைபெற்ற அனைத்து சட்டமன்றக் கட்சியினருடனான ஆலோசனைக் கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மூன்று முக்கிய தீர்மானங்கள்

தீர்மானம் 1: 
‘உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, காவிரியின் கீழ்ப்படுகை மாநிலங்களின், முன் அனுமதியைப் பெறாமல் மேக்கேதாட்டுவில் எந்தவொரு கட்டுமானப் பணியையும் மேற்கொள்ளக் கூடாது. அதை மீறி, தற்பொழுது மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கான முயற்சிகளை கர்நாடக அரசு முழு முனைப்புடன் செய்து வருவது மிகவும் கண்டனத்திற்குரியது. இத்திட்டத்தினால் தமிழ்நாடு விவசாயிகளுக்குத் தேவையான நீர் கிடைப்பது பாதிப்படையும். உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிரான இத்தகைய முயற்சி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மாட்சிமைக்கு விடப்படும் சவாலாகும். எனவே, கர்நாடக அரசின் இத்திட்டத்திற்கு, இதில் தொடர்புடைய மத்திய அரசின் அமைச்சகங்கள் எவ்விதமான அனுமதிகளையும் வழங்கக் கூடாது என மத்திய அரசைக் கேட்டுக்கொள்வது.

தீர்மானம் 2: 
இந்த அணை அமைப்பதற்கான முயற்சிகளைத் தடுப்பதில் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மாநிலத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தங்களுடைய முழு ஆதரவையும், முழு ஒத்துழைப்பையும் வழங்கும்.

தீர்மானம் 3:
தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பை முழுமையாக பிரதிபலிக்கும் வகையில், இக்கூட்டத்தின் தீர்மானங்களை ஒன்றிய அரசிடம் அனைத்துக் கட்சியினரும் நேரில் சென்று முதற்கட்டமாக வழங்குவது. அதன்பிறகு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலிருக்கும் வழக்கு உள்ளிட்ட சட்டபூர்வ நடவடிக்கைகள் மற்றும் தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வது’ எனத் தீர்மானிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.