குறிப்பாக, ஆரல்வாய்மொழி, சுங்கான்கடை, சித்திரங்கோடு, சுருளகோடு, அயக்கோடு, குலசேகரம், அருமனை போன்ற பகுதிகளிலிருந்து தினமும் நாள் ஒன்றிற்கு ஏறத்தாழ 600 க்கும் மேற்பட்ட அதிகனரக வாகனங்களில் களியக்காவிளை மற்றும் மாவட்டத்தின் பிற சோதனைச்சாவடிகளின் வழியாகக் கனிமவளப்பொருட்கள் கேரளத்துக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் அனுமதியின்றிக் கனிம வளங்களை கேரளத்துக்குக் கொண்டு செல்ல முயன்றதாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து, 40 இலட்ச ரூபாய்வரை அபராதம் விதித்துள்ளார்கள். இருந்தும், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் வருவாய் கிடைப்பதால் அரசியல் தலையீடு, அதிகாரிகளின் பரிந்துரை, இலாபவெறி வேட்டை ஆகியவை காரணமாகக் கனிம வளக்கொள்ளை தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கின்றது. நிர்ணயிக்கப்பட்ட அளவைவிடக் கூடுதலாக 9 அலகுவரை (மொத்தம் 60 டன்கள் ) கனரக வாகனங்களில் கல் பாரம் கொண்டு செல்வதால் தேசிய நெடுஞ்சாலைகள் அனைத்தும் சேதமாகி விபத்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன.