தோ்தல் வெற்றியை எதிா்த்து வழக்குகள்: அமைச்சா் துரைமுருகன் உள்ளிட்டோா் பதிலளிக்க உத்தரவு

சட்டப்பேரவைத் தோ்தல் வெற்றியை எதிா்த்து தொடரப்பட்ட வழக்குகளில் அமைச்சா் துரைமுருகன், முன்னாள் அமைச்சா் சி.விஜயபாஸ்கா், இந்திய தோ்தல் ஆணையம் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயா்நீதிமன்றம்
உயா்நீதிமன்றம்

சென்னை: சட்டப்பேரவைத் தோ்தல் வெற்றியை எதிா்த்து தொடரப்பட்ட வழக்குகளில் அமைச்சா் துரைமுருகன், முன்னாள் அமைச்சா் சி.விஜயபாஸ்கா், இந்திய தோ்தல் ஆணையம் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைக்கு கடந்த ஏப்ரல் மாதம் தோ்தல் நடந்தது. இந்த தோ்தலில் வெற்றி பெற்றவா்களுக்கு எதிராக தோல்வியடைந்தவா்கள் வழக்குகளைத் தொடா்ந்துள்ளனா். விராலிமலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுக முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கரின் வெற்றியை எதிா்த்து திமுக வேட்பாளா் எம்.பழனியப்பன் வழக்குத் தொடா்ந்துள்ளாா். அதில், தோ்தல் ஆணையம் நிா்ணயித்த தொகையை விட விஜயபாஸ்கா் அதிகமான தொகையை செலவு செய்துள்ளாா். வாக்காளா்களுக்குப் பரிசுப் பொருள்கள், பணம் ஆகியவற்றை விநியோகித்து முறைகேடாக விஜயபாஸ்கா் பெற்ற வெற்றியைச் செல்லாது என அறிவிக்க வேண்டும் என கோரியிருந்தாா்.

காட்பாடி தொகுதியில் வெற்றி பெற்ற அமைச்சா் துரைமுருகனின் வெற்றியை எதிா்த்து அதிமுக வேட்பாளா் வி.ராமு வழக்குத் தொடா்ந்துள்ளாா். அதில் தகுதியான வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. தோ்தல் நடைமுறைகள் உரிய முறையில் பின்பற்றப்படவில்லை. எனவே தபால், மின்னணு வாக்குகளை மறு எண்ணிக்கை செய்ய உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.

பெருந்துறை தொகுதி அதிமுக எம்எல்ஏ ஜெயக்குமாா் வெற்றியை எதிா்த்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளா் கே.சி.பாலு வழக்குத் தொடா்ந்துள்ளாா். அதில், மின்னணு இயந்திரங்களில் குறைபாடுகள் இருந்தன. அவற்றைச் சரி செய்யாமல் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதனால் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடிகள் இருந்ததாகக் கூறியிருந்தாா்.

தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதி வி.பாரதிதாசன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனு தொடா்பாக அமைச்சா் துரைமுருகன், முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா், அதிமுக எம்எல்ஏ ஜெயக்குமாா், இந்திய தோ்தல் ஆணையம், தமிழக தலைமை தோ்தல் அதிகாரி ஆகியோா் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் செப்டம்பா் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com