இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

தளர்வுகளை மக்கள் தவறாகப் பயன்படுத்தக் கூடாது: உயர் நீதிமன்றம்

ஊரடங்கு தளர்வுகளை மக்கள் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

News image
தளர்வுகளை மக்கள் தவறாகப் பயன்படுத்தக் கூடாது: உயர் நீதிமன்றம்
Updated On :9 ஜூன் 2021, 7:50 am

DIN

சென்னை: பொதுமுடக்க தளர்வுகளை  இயல்புநிலை திரும்பியதாக நினைத்து தேவையில்லாமல் வெளியே வருபவர்களைக் கட்டுப்படுத்த வேண்டுமென தமிழக அரசுக்கு  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில், சிவா என்பவர் தாக்கல் செய்த மனுவில், கரோனா 2-ஆவது அலை பரவலைத் தடுக்க பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தெரு நாய்கள் உள்ளிட்ட விலங்குகள் உணவு, குடிநீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, தெருவில் சுற்றித் திரியும் நாய்கள் உள்ளிட்ட விலங்குகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தெரு விலங்குகளுக்கு உணவளிப்பதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையை தமிழக அரசு விரைவில் விடுவிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. 

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் நாய்களுக்கு 2500 கிலோ உணவை வழங்கவும், உணவு வழங்க 500 பேருக்கு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. 104 குதிரைகளுக்கு 3536 கிலோ கோதுமை வழங்கப்பட்டு உள்ளது. விலங்குகளுக்கு உணவு வழங்க உருவாக்கப்பட்ட கணக்கில் இருந்த ரூ. 19 லட்சத்து 29 ஆயிரத்திலிருந்து, சென்னை மாநகராட்சிக்கு ரூ.7 லட்சத்து 91 ஆயிரம் , மற்ற மாநகராட்சிகளுக்கு ரூ. 11 லட்சத்து 84 ஆயிரமும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அப்போது நீதிபதிகள் தமிழக அரசு தலைமை வழக்குரைஞர் சண்முகசுந்தரத்திடம், பொதுமுடக்கத்தில் தளர்வுகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ள நிலையில், பொதுமுடக்கம் முழுமையாக நீக்கப்பட்டது போல பொதுமக்கள் நடந்துகொள்வதாக தெரிவித்தனர். 

இது  கொண்டாட்டங்களுக்கான நேரம் இல்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். அதற்கு அரசு தலைமை வழக்குரைஞர், கரோனா முதல் அலை பொதுமுடக்கத்தின் போது  காவல்துறை மிகவும் கடுமையாக நடந்துகொண்டதால் பல இடங்களில் பிரச்னை ஏற்பட்டது. எனவே கடுமையாக நடக்க வேண்டாம் என தற்போது காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் சாதகமாக எடுத்துக்கொண்டு பொதுமக்கள் வெளியே வருவதாக தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள், பொதுமுடக்க காலத்தில்  மக்கள் கூட்டம் அதிகரிப்பதை தடுக்க வேண்டும். மக்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை குறைப்பதற்காகவே தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. இதனை மக்கள் உணர வேண்டும். பொதுமக்கள் வெளியே சுற்றித்திரியக் கூடாது என ஒலிப்பெருக்கிகள் மூலம் தமிழக அரசு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என  அறிவுறுத்தி விசாரணையை ஒத்திவைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.