நீர்நிலை புனரமைப்பு, மழைநீர் வடிகால் பணிகளை தொடங்காத ஒப்பந்ததாரர்களுக்கு குறிப்பாணை
குறித்த காலத்தில் துவங்காத 23 ஒப்பந்ததாரர்களுக்கு மாநகராட்சியின் சார்பில் காரணம் கேட்டு குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது.


சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர்நிலைகள் புனரமைப்பு மற்றும் மழைநீர் வடிகால் திட்டப்பணிகளை குறித்த காலத்தில் துவங்காத 23 ஒப்பந்ததாரர்களுக்கு மாநகராட்சியின் சார்பில் காரணம் கேட்டு குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் துறையின் சார்பில் 2,071 கி.மீ. நீளமுள்ள 8,835 மழைநீர் வடிகால் கட்டமைப்புகள், 48.80 கி.மீ. நீளமுள்ள 30 நீர்வழிக் கால்வாய்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிக்கலாமே.. பிளஸ் 2 மதிப்பெண் கணக்கிடுவது எப்படி? சிபிஎஸ்இ விளக்கம்
சென்னை மாநகராட்சியில் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் கொசஸ்தலையாறு, அடையாறு, கூவம் மற்றும் கோவளம் வடிநிலப்பகுதிகளில் பன்னாட்டு வங்கிகளின் நிதியுதவியுடன் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும், பெருநகர சென்னை மாநகராட்சியில் வெளிநாடுகளிலிருந்து தருவிக்கப்பட்ட அதிநவீன இயந்திரங்களான நீர் மற்றும் நிலத்தில் இயங்கும் ஆம்பிபியன் இயந்திரம், ரொபோடிக் மண்தோண்டும் இயந்திரங்கள் ஆகியவற்றின் உதவியுடன் நீர்நிலைகளில் ஆகாயத்தாமரைகள் மற்றும் வண்டல்கள் அகற்றப்பட்டு வருகின்றன.
மழைநீர் வடிகால் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர்நிலைகள் புனரமைப்பு மற்றும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் முதன்மைச் செயலாளர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் 16.06.2021 அன்று நடைபெற்றது. தொடர்ந்து, ஆணையாளர் அவர்கள் முடிவுற்ற மழைநீர் வடிகால் திட்டப்பணிகளை இன்று (17.06.2021) நேரடியாக சென்று கள ஆய்வு மேற்கொண்டார்.
கோடம்பாக்கம் மண்டலம், சின்மையா நகர் சந்திப்பில் கால்வாயில் தூர்வாரப்படும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்தப் பகுதிகளில் கடந்த காலங்களில் மழைநீர் தேக்கம் அதிகளவு இருந்ததால் 5 இடங்கள் கண்டறியப்பட்டு மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டு விருகம்பாக்கம் கால்வாயுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இப்பகுதிகளில் வெள்ளப் பாதிப்புகளை தடுக்க 1600மீ. நீளத்திற்கு மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநகராட்சியின் பேருந்து சாலைகள் துறையின் மூலம் சென்னை குடிநீர் வாரியம் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்துடன் இருந்து குறிப்பிட்ட அளவு இடத்தை பெற்று 16 மீ.-லிருந்து 27 மீ. அகலம் கொண்ட சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்ட காளியம்மன் கோயில் சாலையை ஆணையாளர் பார்வையிட்டார்.
மேலும், கோயம்பேடு வணிக வளாகத்திற்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ள மியாவாக்கி அடர்வனக் காடுகளையும் பார்வையிட்டார்.
பின்னர், மணப்பாக்கம் பிரதான சாலையில் உலக வங்கி நிதியுதவியுடன் சாலைக்கு கீழ் அமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் பணிகளையும், மவுண்ட் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் புதிதாக கட்டப்பட்ட நந்தம்பாக்கம் கால்வாயை பார்வையிட்டு அதில் ரொபோடிக் இயந்திரங்கள் கொண்டு தூர்வாரப்படும் பணிகளையும் அங்கு நிறுவப்பட்டுள்ள ஸ்மார்ட் தூண் மற்றும் வெள்ள அபாயம் குறித்து ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுபாட்டு மையத்திற்கு சமிக்ஞைகள் தெரிவிக்கும் சென்சார் கருவிகளையும் பார்வையிட்டு அதுகுறித்து கேட்டறிந்தார்.
இந்த வெள்ள சென்சார் கருவியானது கால்வாயில் 2.50 மீ அளவிற்கு மேல் தண்ணீர் செல்லும் போது உடனடியாக கட்டுப்பாட்டு மையத்திற்கு சமிக்ஞை தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தக் கால்வாய்களில் குப்பை மற்றும் இதரக் கழிவுகளை தடுப்பதற்காக 3 மீ. உயரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள தடுப்பு வேலிகளை பார்வையிட்டார்.
அலுவலர்களுடன் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மற்றும் மழைநீர் வடிகால் திட்டப்பணிகள் குறித்த கள ஆய்விற்கு பின்னர் நீர்நிலைகள் புனரமைப்பு பணிகளில் குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை துவங்காமல் ஒப்பந்தப்பணிகளில் தொய்வு ஏற்படுத்திய ஒப்பந்ததாரர்கள் மற்றும் வடசென்னை பகுதிகளுக்குட்பட்ட கொசஸ்தலை வடிநிலப்பகுதிகளின் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் திட்டப்பணிகளில் குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை துவங்காமல் ஒப்பந்தப்பணிகளில் தொய்வு ஏற்படுத்திய 23 ஒப்பந்ததாரர்களுக்கு பணிக்கான தாமதம் குறித்து காரணம் கேட்டு மாநகராட்சியின் சார்பில் குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...