ஈரோடு: 50% பணியாளர்களுடன் ஏற்றுமதிக்கான ஆயத்த ஆடை நிறுவனங்களில் பணிகள் தொடக்கம்

ஈரோட்டில் 50% பணியாளர்களுடன் ஏற்றுமதிக்கான ஆயத்த ஆடை நிறுவனங்களில் பணிகள் தொடங்கியுள்ளன.
ஈரோடு: 50% பணியாளர்களுடன் ஏற்றுமதிக்கான ஆயத்த ஆடை நிறுவனங்களில் பணிகள் தொடக்கம்
ஈரோடு: 50% பணியாளர்களுடன் ஏற்றுமதிக்கான ஆயத்த ஆடை நிறுவனங்களில் பணிகள் தொடக்கம்


ஈரோடு: ஈரோட்டில் 50% பணியாளர்களுடன் ஏற்றுமதிக்கான ஆயத்த ஆடை நிறுவனங்களில் பணிகள் தொடங்கியுள்ளன.

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து ரூ.1000 கோடிக்கு மேல் ஆயத்த ஆடைகளை உற்பத்தி செய்ய  வேலை எடுக்கப்பட்டிருந்தது. பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருந்த நிலையில் கரோனா தாக்கம் காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் ஜவுளி சம்பந்தமான தொழில்கள் மூடப்பட்டிருந்தன. இதனால் ரூ.500 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இது தொடர்பாக ஆயத்த ஆடைகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தளர்வுகள் வழங்குமாறு அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனையடுத்து அரசு சில தளர்வுகள் அறிவித்தது. 

அதன்படி 50 சதவீத பணியாளர்களுடன் ஏற்றுமதிக்கான  ஆயத்த ஆடை பணிகளை நிறுவனங்கள் தொடங்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்க செயலாளர் சிவானந்தன் கூறியதாவது:- ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு நாடுகளில் இருந்து ரூ.1000 கோடிக்கு மேல் எடுத்திருந்த பணிகள் முடக்கத்தால் ரூ.500 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படும் என்று கவலை அடைந்தோம். தற்போதைய தளர்வால் 50 சதவீத பணியாளர்களுடன் பணிகள் தொடங்கியதால் எங்கள் இழப்பு சற்று குறைய வாய்ப்புள்ளது. விரைவில் 100 சதவீத தளர்வு வந்தால் இழப்பை சமாளிக்க வாய்ப்பு ஏற்படும்.

ஜவுளித்துறைக்காக ஒரு ஆணையம் ஏற்படுத்தி அமைச்சர்கள், அதிகாரிகள், ஜவுளித்துறை சார்ந்தவர்கள், ஏற்றுமதியாளர்கள், உள்நாட்டு வியாபாரம் செய்வோர் கொண்ட குழு அமைக்க வேண்டும். சீனா, வங்காளதேசம், கம்போடியா, வியட்நாம் நாடுகளுடன் போட்டியிட்டு ஆணையம் ஏற்படுத்தி இத்தொழிலை நிலையாக தொடர வாய்ப்பு தர வேண்டும். 
முன்னதாக பஞ்சு நூல் ஏற்றுமதியை முழுமையாக தடை செய்ய வேண்டும். தேவைக்குப் போக மீதமுள்ளதை மற்றும் ஏற்றுமதி செய்யலாம். நூல், பஞ்சு விலையை ஆறு மாதத்திற்கு ஒருமுறை அல்லது ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் உயர்த்த வேண்டும். தினமும் இவற்றின் விலை உயர்வதால் வெளிநாடுகளிலிருந்து வரும் பணிகளுக்கு எவ்வித உறுதியும் தரமுடியாமல் நஷ்டத்தை சந்திக்கிறோம். 

தற்போது 50 சதவீத பணியாளர்கள் வைத்து இயங்க அரசு அனுமதி வழங்கியுள்ளதால் ஈரோடு மாவட்டத்தில் ஏற்றுமதி நிறுவனத்தில் 10,000 பேருக்கு மேல் பணி செய்கின்றனர். 

பொது முடக்க நிலையில் அவர்களுக்கு முழு ஊதியம் வழங்க இயலாவிட்டாலும் பாதி சம்பளத்தை தொடர்ந்து வழங்கி வருகிறோம். தற்போது 50 சதவீத பணியாளர்கள் அரசின் தளர்வால் வேலைக்கு திரும்பி விட்டனர். 100 சதவீத பணியாளர்கள் வேலைக்கு வரும் பட்சத்தில் ஓரிரு வாரத்தில் நாங்கள் சகஜ நிலைமைக்கு திரும்பி விடுவோம்.  அரசு தெரிவித்த அனைத்து விதிமுறைகளையும் கடைபிடித்து இயங்குகிறோம். எங்களது சொந்த வாகனத்தில் தொழிலாளர்களை பாதுகாப்பாக அழைத்து வருகிறோம். அவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டு பாதுகாப்பை உறுதிப்படுத்த மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டுள்ளோம் என்று அவர் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com