12-ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கீட்டு முறை: ஸ்டாலின் வெளியிட்டார்

தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் கணக்கீட்டு முறை குறித்த விவரங்களை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.
12-ஆம் வகுப்பு மதிப்பெண் வழங்கும் முறை: ஸ்டாலின் வெளியிட்டார்
12-ஆம் வகுப்பு மதிப்பெண் வழங்கும் முறை: ஸ்டாலின் வெளியிட்டார்
Published on
Updated on
2 min read


சென்னை: தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் கணக்கீட்டு முறை குறித்த விவரங்களை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.

கரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களுக்கு மதிப்பெண் கணக்கிடும் முறை குறித்து ஆலோசிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், கரோனா பெருந்தொற்றின் காரணமாக 2020-2021 ஆம் கல்வியாண்டில் நடக்கவிருந்த பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ஏற்கெனவே இரத்து செய்யப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறையை முடிவு செய்வதற்காகப் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் உயர் கல்வித் துறை முதன்மைச் செயலாளர், சென்னை பல்கலைக் கழகத் துணைவேந்தர், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் அடங்கிய குழு அரசுக்கு தனது அறிக்கையை அளித்துள்ளது.

10, 11 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன. 12 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு, அதற்கான மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், 12 ஆம் வகுப்புக்கான இறுதி மதிப்பெண்களைக் கீழ்க்கண்ட விகிதாச்சார அடிப்படையில் வழங்க வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது : 

12 ஆம் வகுப்பில் ஒவ்வொரு பாடத்திலும் செய்முறைத் தேர்வு (20) மற்றும் அக மதிப்பீட்டில் (10) என மொத்தம் 30-க்குப் பெற்ற மதிப்பெண் முழுவதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

செய்முறைத் தேர்வு இல்லாத பாடங்களில் அக மதிப்பீட்டில் (10) பெற்ற மதிப்பெண் 30 மதிப்பெண்களுக்காக மாற்றப்பட்டு முழுவதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்

கரோனா பெருந்தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக 12 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகளில் பங்குபெற இயலாத மாணவர்களுக்கு அவர்களின் 11 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் இரண்டிலும் பங்குபெற இயலாத மாணவர்களுக்கு அவர்களின் 10 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு எழுத்துத் தேர்வுகளின் அடிப்படையில் 12 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு மதிப்பெண் வழங்கப்படும்.

கடந்த ஆண்டு 11 ஆம் வகுப்பு எழுத்துத் தேர்வில் ஏதேனும் பாடங்களில் தோல்வி அடைந்திருந்தாலோ, தேர்வு எழுத இயலாத நிலை இருந்திருந்தாலோ, அம்மாணவர்களுக்கு தற்போது அத்தேர்வுகளை மீண்டும் எழுத வாய்ப்பு இல்லாத நிலையைக் கருத்தில்கொண்டு, 35 விழுக்காடு மதிப்பெண் வழங்கப்படும். 

11 ஆம் வகுப்பு எழுத்துத் தேர்வு, அக மதிப்பீடு, செய்முறைத் தேர்வு மற்றும் 12 ஆம் வகுப்பு அக மதிப்பீடு, செய்முறைத் தேர்வு ஆகிய தேர்வு நிலைகளில் ஒன்றில் கூட கலந்து கொள்ளாத மாணவர்கள் தனித் தேர்வர்களாகத் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும்.

ஒவ்வொரு மாணவருடைய மதிப்பெண்ணும் மேற்கூறிய முறைகளில் கணக்கிடப்பட்டு, உச்சநீதிமன்ற ஆணைப்படி ஜூலை 31 ஆம் தேதிக்குள் அரசுத் தேர்வுகள் துறை இணையதளத்தில் வெளியிடப்படும்.

இம்மதிப்பீட்டு முறையில் கணக்கிடப்படும் மதிப்பெண்கள் தமக்குக் குறைவாக உள்ளதாகக் கருதும் மாணவர்களுக்கு, அவர்கள் விரும்பினால் 12 ஆம் வகுப்பு எழுத்துத் தேர்வெழுத வாய்ப்பு வழங்கப்படும். 

அவ்வாறு நடத்தப்படும் தேர்வில் அவர்கள் பெறும் மதிப்பெண்ணே அவர்களது இறுதி மதிப்பெண்ணாக அறிவிக்கப்படும்.
தனித்தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு கரோனா பெருந்தொற்றுப் பரவல் சீரடைந்தவுடன், மேற்குறிப்பிட்டோருடன் சேர்த்து தக்க சமயத்தில் தேர்வு நடத்தப்படும். இத்தேர்விற்கான கால அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com