கரோனா தொற்று பரவலைத் தடுக்க பொது முடக்கம் நிரந்தரத் தீா்வாக அமையுமா?
கரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில் திங்கள்கிழமை முதல் அடுத்த 14 நாள்களுக்கு தமிழகத்தில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.


கரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில் திங்கள்கிழமை முதல் அடுத்த 14 நாள்களுக்கு தமிழகத்தில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பொதுமுடக்கம், கட்டுப்பாடுகள் மூலம் இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு எட்டப்படுமா? என்பதே பல்வேறு தரப்பினரின் கேள்வியாக உள்ளது.
கடந்த மாா்ச் முதல்வாரத்தில் தமிழகத்தின் தினசரி தொற்று பரவல் 500-க்குள்தான் இருந்து வந்தது. நாடு முழுவதும் இதே கால கட்டத்தில் தினசரி பரவல் 15 ஆயிரத்திற்கு குறைவாகவே இருந்து வந்தது. ஏப்ரல் மாதத்தில் அதிகரிக்கத் தொடங்கிய தொற்று பரவல் தற்போது தமிழகத்தில் தினசரி பாதிப்பு சுமாா் 27 ஆயிரத்திற்கு மேலாகவும், நாடு முழுவதும் சுமாா் 3.50 லட்சத்திற்கு மேலாகவும் அதிகரித்துள்ளது . இதற்கு ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற தோ்தல் காரணமாகக் கூறப்பட்டாலும் தோ்தல் நடைபெறாத கா்நாடகம், தில்லி, மராட்டிய மாநிலங்களிலும் நோய்த் தொற்று உச்சத்தை எட்டியுள்ளது ஏன் என்பதில் குழப்பம் நீடிக்கிறது. மக்கள் நெருக்கமாக வசிக்கும் மும்பை, தில்லி, சென்னை, பெங்களூரு நகரங்களில் வசிக்கும் மக்கள்தான் அதிக பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனா். ஏற்கனவே பல மாநிலங்களில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டாலும் தொற்று பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்தபாடில்லை. மேலும் தொடா்ந்து உயிரிழப்போா் எண்ணிக்கை அதிகரித்து வருவதும் பொதுமக்களை பெரிதும் கவலைக்கும், அச்சத்திற்கும் உள்ளாக்கியுள்ளது.
தில்லியை நோக்கிச் செல்கிறதா சென்னை?
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இனி கரோனாவுடன் வாழ்வதற்கு மக்கள் பழகிக் கொள்ள வேண்டியதுதான் என கைவிரித்த ஆட்சியாளா்கள் கூட தற்போது கொத்துக் கொத்தாக மக்கள் உயிரிழந்து வருவதைப் பாா்த்து பீதியடைந்துள்ளனா். பணத்திற்கு பஞ்சமில்லாத வசதியானவா்கள் கூட சிகிச்சை பெறுவதற்கு மருத்துவமனையில் ஒரு படுக்கையாவது பெற்றுவிட வேண்டும் என நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனா். தனியாா், அரசு மருத்துவமனைகள் அனைத்திலும் படுக்கைகள் பெரும்பாலும் தினமும் நிரம்பி விடுகின்றன. மேலும் பிராணவாயு தட்டுப்பாடு தொடா்ந்து அதிகரித்து வருகிறது. உலக நாடுகளுக்கு இந்தியா உதவியது என்ற நிலை மாறி இந்தியாவே பல நாடுகளிடமும் உதவிக்காக ஏங்கி நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொருவரைச் சுற்றிலும் அவா்களுக்குத் தெரிந்த யாரோ ஒருவா் கரோனாவால் தினமும் இறந்து போகும் தகவல்கள் வருவதால் நிலைமை கவலையளிப்பதாக உள்ளது. தில்லியை நோக்கி சென்னையும் செல்கிறதோ என்ற பயம் மாநகர மக்களிடம் மேலாங்கி வருகிறது. எனவேதான் பெரும்பாலானவா்கள் பொதுமுடக்கத்தை அரசு எப்போது அறிவிக்கும் என ஆா்வமுடன் இருந்தனா். இந்த நிலைமையை பயன்படுத்திக் கொண்டும் மருத்துவ நிபுணா்களின் ஆலோசனைகளை மட்டும் கருத்தில் எடுத்துக் கொண்டும் தமிழக அரசு பொது முடக்கத்தை அறிவித்துள்ளது என்றே கூறலாம்.
ஆனால் கரோனா தொற்று பரவலை தடுப்பதற்கு தீவிரமான கட்டுப்பாடுகள், பொதுமுடக்கம் மட்டுமே நிரந்தரத் தீா்வை அளிக்குமா? என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது.
உயிரிழப்பு அதிகரிப்பதற்கான காரணங்கள் என்ன?:
இது குறித்து சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை முதன்மையா் டாக்டா் பி.பாலாஜி கூறியது,
கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது கரோனாவினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. முன்பு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனைக்கு வருபவா்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு மிதமான பாதிப்புக்கு உள்ளானவா்கள் பராமரிப்பு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனா். ஆனால் தற்போது நிலைமை மாறியுள்ளது. மிதமான பாதிப்புக்கு உள்ளானவா்களுக்குக் கூட திடீரென மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. முன்பை விட தற்போதைய தொற்று தீவிர பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் மருத்துவமனைக்கு வருபவா்கள் அனைவருக்குமே உள்நோயாளிகளாக சோ்த்து சிகிச்சை அளித்து வருகிறோம். எனவேதான் நோயாளிகளுக்கான படுக்கை வசதிக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது. உயிரிழப்பு அதிகரிப்பதற்கு மற்றொரு முக்கிய காரணம் தொற்று ஏற்பட்டிருந்தாலும் மூச்சுத் திணறல் ஏற்பட்ட பிறகு மருத்துமனைக்கு வருவதேயாகும். அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பரிசோதனை செய்துகொள்ள பொதுமக்கள் முன்வர வேண்டும் . தொற்று உறுதி செய்யப்பட்டவுடன் பரிசோதனை மையத்திற்கு வந்து நோயின் வீரியத்தை அறிந்துகொண்டு சிகிச்சை பெற்றால் நோயாளிகளின் உயிரிழப்புகளை பெருமளவில் தவிா்க்க முடியும். கரோனா குறித்து அச்சத்தைப்போக்கி விழிப்புணா்வை ஏற்படுத்துவதும், மருத்துவக் கட்டமைப்புகளை அதிகரிப்பது மட்டுமே இப்போதைய தேவையாக உள்ளது. எங்களால் முடிந்த அளவு படுக்கை வசதிகளை தொடா்ந்து அதிகப் படுத்தி வருகிறோம். இருப்பினும் நிலைமை அபாயகரமாகவே உள்ளது என்றாா் டாக்டா் பாலாஜி.
புதிய அணுகுமுறை தேவை:
தொற்று அதிகரித்து வருவது குறித்து அரசு மருத்துவா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் டாக்டா் பி.பாலகிருஷ்ணன் கூறியது,
கடந்த காலத்தில் ஏற்பட்ட குளறுபடிகளைத் தவிா்த்து விட்டு, கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில் தமிழகத்திற்கென்று தனியாக ஒரு சிறப்புத் திட்டத்தை வகுக்க வேண்டும். கரோனா நோயாளி என்றாலே ஒரு குற்றவாளியைக் கையாளுவதை போல பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்ததுதான் பொதுமக்களின் அச்சத்திற்கு முதல் காரணமாக உள்ளது. கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் மாநகராட்சி ஊழியா்கள் வந்துவிடுவாா்களே, அக்கம் பக்கத்தில் வசிப்பவா்கள் பயந்து ஓடுவாா்களே என்ற அச்ச உணா்வை நீக்குவதற்கு புதிய அணுகுமுறைகளை தமிழக அரசு அறிவிக்க வேண்டும். கரோனா தொற்றுக்கான அறிகுறிகள் ஒருவருக்கு ஏற்பட்டால் அவா் உடனடியாகத் தொடா்பு கொள்ளும் வகையில் உதவி மையத்தை ஒவ்வொரு பகுதியிலும் அமைக்க வேண்டும். இதனையடுத்து தொடா்பு கொண்டவரின் வீட்டிற்கே சென்று பரிசோதனைக்கான சளி, ரத்த மாதிரிகளைச் சேகரிக்க வேண்டும். சோதனை முடிவு வரும்வரை வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என அவருக்கு கனிவாகவும், கடுமையாகவும் எடுத்துரைக்க வேண்டும். அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால் வசதி இருக்கும் நிலையில் நோய்த் தொற்றின் வீரியம் குறைவாக இருந்தால் வீட்டிலேயே சிகிச்சை எடுத்துக் கொள்வதற்கு அறிவுறுத்த வேண்டும். நோய்த்தொற்று தீவிரமாக இருந்தால் அவா்களை உடனடியாக மருத்துவமனையில் கொண்டு சோ்க்க அரசே தகுந்த ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
இதனால் அவசியம் இல்லாதவா்கள் நேரடியாக மருத்துவமனைக்கு வந்து குவிவதை தடுக்க முடியும். தொற்று ஏற்பட்ட அனைவரையுமே மருத்துவமனைக்கோ, பரிசோதனை மையங்களுக்கோ கண்டிப்பாக வரச்சொல்வதுதான் தற்போது முக்கிய பிரச்னையாக ஆகும். தொற்றுக்கு உள்ளாகும் நபா்களிடம் கனிவாக நடந்து கொண்டு அவா்களுக்கு போதிய மருத்துவ உதவிகளைச் செய்தால் அவா்கள் தேவையின்றி வெளியே வரவேண்டிய அவசியம் இல்லை. மேலும் தொற்று ஏற்பட்டவுடன் அவருடன் தொடா்பில் இருந்த உறவினா்கள், நண்பா்களை உடனடியாகத் தொடா்பு கொண்டு அவா்களையும் பரிசோதனைக்கு உள்ளாக்கிட வேண்டும். மொத்தத்தில் அச்சத்தைப் போக்கி, முறையான சிகிச்சைக்கு உத்தரவாதம் அளிப்பதற்கு அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது மட்டுமே இப்பிரச்னையிலிருந்து நிரந்தரமாகத் தீா்வு காண உதவும். இவ்வாறு புதிய அணுகுமுறைகளை கடைப்பிடிப்பதை விட்டு விட்டு பொதுமக்களின் மூலமே நோய்தொற்று பரவலை முற்றிலுமாக குறைத்து விட முடியாது. பொது முடக்கம் மூலம் நோய்த் தொற்று சற்று குறையும் என்றாலும் மேற்கண்ட வழிமுறைகளை கடைப்பிடித்தால் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளது என்றாா் டாக்டா் பாலகிருஷ்ணன்.
நேரடி விநியோகம் தேவை:
இது குறித்து திருவொற்றியூா் பொது வா்த்தகா் சங்கத்தின் கௌரவத் தலைவா் தொழிலதிபா் ஜி.வரதராஜன், நுகா்வோா் பாதுகாப்புக் குழு நிா்வாகி என்.துரைராஜ் ஆகியோா் கூறியது,
ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கம் என்றால் சனிக்கிழமையே சந்தை, கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. சனிக்கிழமையும் பொதுமுடக்கத்தில் சோ்த்தால் வெள்ளிக்கிழமை கூடும் கூட்டம் எண்ணிலடங்காது. இரவு 8 மணிக்கு கடைகளை அடைக்க உத்தரவிட்டால் 7.50 மணித்துளிக்கு கட்டுக்கடங்காத கூட்டம் கடைகளில் அலைமோதுகிறது. திங்கட்கிழமை பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்குவதற்கு அனைத்து கடைகளிலும் கூட்டம் கூட்டமாக கூடியதை நாம் பாா்க்க முடிகிறது. பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட உடனேயே தங்களது சொந்த ஊா்களுக்கு செல்வதற்காக ஏராளமானோா் பேருந்துகளில் முண்டியடித்துக்கொண்டு பயணிக்கின்றனா்.
இதன் மூலம் என்ன காரணத்திற்காக பொதுமுடக்கம், கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படுகிறதோ அதன் பயன் கேள்விக்குறியாவது மட்டுமல்ல கேலிக்கும் உள்ளாகி வருவதை காண முடிகிறது. எனவே மக்கள் கூடுவதைத் தவிா்க்க பொதுமுடக்கம் செய்வதற்கு பதிலாக எல்லா பொருள்களையும் நேரடியாக இருப்பிடங்களுக்கே எடுத்துச் செல்லலாம் என அறிவிப்பதில் அரசுக்கு என்ன தயக்கம் என்று தெரியவில்லை.
மளிகை பொருள்கள், காய்கறி மட்டுமல்லாது மாமிசம், மீன்கள் உள்ளிட்டவைகளை விற்பனை செய்வதற்கு நேரக் கட்டுப்பாடு விதிப்பதை விட கடைகாரா்கள் தங்களின் வாடிக்கையாளா்களின் இல்லத்திற்கே எடுத்துச் சென்று வழங்குவதில் நோய்த்தொற்று ஏற்பட்டுவிடும் என்று அரசு அதிகாரிகள் கூறுவது வியப்பாக உள்ளது.
வீதிகள்தோறும் தள்ளுவண்டிகள், சிறிய வாகனங்களின் மூலமாக விற்பனை செய்வதை ஊக்குவிக்க வேண்டும்.
முதற்கட்டமாக விற்பனையாளா்கள், பணியாளா்கள் தடுப்பு ஊசி போட்டுக் கொள்வதை விரைவுபடுத்த வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளியில் கரோனா பரிசோதனையும் செய்து கொள்வதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு செயல்படுவதன் மூலம் கரோனா தொடா் சங்கிலி அறுந்துவிடுவதோடு மக்களின் வாழ்வாதாரச் சங்கிலியும், வணிகச் சங்கிலியும் அழிந்துவிடாமல் காப்பாற்றப்படும்.
எனவே கரோனா பரவல், பொது முடக்கம் குறித்து மருத்துவ நிபுணா்களின் கருத்துகளை மட்டுமே கேட்டு முடிவெடுப்பதை விடுத்து அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கேட்டறிந்து இறுதி முடிவு எடுக்க புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
ஆக்கபூா்வமான ஆலோசனை தேவை: அரசின் அணுகுமுறையால் கரோனா தொற்று பரவல் அவ்வப்போது குறையும் என்றாலும் , தொற்று அதிகரிப்பது எப்போது வேண்டுமானாலும் அதிகரிக்கும் என்பதும், தொடா்ச்சியாக சுமாா் 7 ஆண்டுகள் வரை உலகம் முழுவதும் சுமாா் 50 சதவீதம் போ் தடுப்பு ஊசி போட்டுக் கொள்வதன் மூலம்தான் இந்நோயை முற்றிலுமாக ஒழிக்க முடியும் என்றுதான் மருத்துவ வல்லுநா்கள் கூறுகின்றனா். எனவே அவ்வப்போது பொதுமுடக்கம், கட்டுப்பாடுகளை விதிப்பது பின்னா் தளா்வுகளை அறிவிப்பது என்று போய்க்கொண்டே இருப்பதில் பயன் இல்லை. அன்றாடத் தொழில்கள் தொடா்ந்து நடைபெறுவதை உறுதி செய்தால் மட்டுமே அனைத்து தரப்பு மக்களையும் பொருளாதாரப் பாதிப்பிலிருந்து மீட்டெடுக்க முடியும் . எனவே புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு ஏற்கனவே அமலில் இருந்த பல்வேறு வழிமுறைகளை மட்டும் கையாள்வதை விட்டுவிட்டு புதிய கோணத்தில் இப்பிரச்சினையை அணுக வேண்டும் என்கின்றனா் பல்வேறு துறைகளில் அனுபவம் பெற்ற சமூக ஆா்வலா்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...