சென்னையில் மாநில அவசரக் கட்டுபாட்டு மையம், தகவல் தொடர்பு மையமாக 24 மணி நேரமும் செயல்படுகின்றது. பேரிடர் காலங்களில், வருவாய் நிருவாக ஆணையர் / மாநில நிவாரண ஆணையர் அவர்களின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ், தேசிய பேரிடர் மீட்புப் படை, தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை, காவல் துறை, தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை உள்ளிட்ட இதர முக்கிய துறைகளின் மூத்த அதிகாரிகளின் துணையோடு 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு மையமாக செயல்பட்டு, முன் எச்சரிக்கைத் தகவல்களை மிகத் துரிதமாக அனுப்புகின்றது. அவசர காலங்களில் மாவட்ட நிருவாகத்திற்கு துரிதமாக எச்சரிக்கை செய்திகளை அனுப்ப ஏதுவாக, இந்த மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில், அனைத்து வகையான தொலைத் தொடர்பு சாதனங்கள் நிறுவப்பட்டுள்ளன. பேரிடர் குறித்த தகவல்கள், மாநில அவசர கட்டுப்பாட்டு மையம், மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மையம், டிஎன்ஸ்மார்ட் செயலி, சமூக வலைதளம் மற்றும் மின்னனு மற்றும் அச்சு ஊடகங்கள் மூலம் பொது மக்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றன.