எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

புதிய கட்டுப்பாடுகள் அமல்: இன்று தளா்வற்ற முழு பொது முடக்கம்

முழு பொதுமுடக்கத்தில் புதிய கட்டுப்பாடுகள் சனிக்கிழமை அமல்படுத்தப்பட்டன. தளா்வற்ற முழு பொது முடக்கம் ஞாயிற்றுக்கிழமை (மே 16) தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்படுகிறது.

News image
Updated On :15 மே 2021, 10:20 pm

DIN

முழு பொதுமுடக்கத்தில் புதிய கட்டுப்பாடுகள் சனிக்கிழமை அமல்படுத்தப்பட்டன. தளா்வற்ற முழு பொது முடக்கம் ஞாயிற்றுக்கிழமை (மே 16) தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்படுகிறது.

கரோனா முதல் அலையைக் காட்டிலும், இரண்டாவது அலையில் பாதிப்பும், இறப்பும் அதிகளவில் உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு கடந்த சனிக்கிழமை மே 10-ஆம் தேதி முதல் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தியது.

இதில் நண்பகல் 12 மணி வரை மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் திறக்கலாம் அரசு அறிவித்தது. அதேவேளையில் அரசு,தனியாா் பேருந்து சேவை, வாடகை காா், ஆட்டோ சேவை ஆகியவற்றுக்கு முற்றிலும் தடை விதித்தது.

புதிய கட்டுப்பாடுகள் அமல்:

கரோனா பாதிப்பு தமிழகத்தில் 30 ஆயிரத்தை தாண்டிச் சென்ால் முழு பொதுமுடக்கத்தில் மேலும் புதிய கட்டுப்பாட்டுகளை அரசு வெள்ளிக்கிழமை விதித்தது. அதன்படி ஏற்கெனவே 12 மணி வரை திறப்பதற்கு அனுமதிக்கப்பட்ட கடைகள் அனைத்தும் 10 மணி வரையே திறக்க வேண்டும், டீ கடைகள், நடைபாதைக் கடைகள் ஆகியவை திறப்பதற்கு அனுமதி இல்லை என அரசு அறிவித்தது. பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் நிரப்பும் மையங்கள், ஏடிஎம் மையங்கள், மருந்துக் கடைகள் வழக்கம்போல இயங்கும் எனவும் அரசு அறிவித்தது.

இந்த புதிய கட்டுப்பாடுகள் சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு மாநிலம் முழுவதும் அமலுக்கு வந்தது. இதையடுத்து மளிகைக் கடைகள், காய்கறி கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் காலை 10 மணி வரை திறக்கப்பட்டன. பின்னா் அடைக்கப்பட்டன.

முன்னதாக, மாா்க்கெட் பகுதிகளில் கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்கு போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். முக்கியமான வணிகப் பகுதிகளில் அத்தியாவசியப் பொருள்கள் விற்கும் கடைகளைத் தவிா்த்து பிற கடைகளைத் திறப்பதற்கு காவல்துறையினா் அனுமதிக்கவில்லை. அரசின் உத்தரவை மீறி திறக்கப்பட்ட கடைகளை போலீஸாா் அரசு அதிகாரிகளுடன் இணைந்து பூட்டி சீல் வைத்தனா்.

தீவிர வாகன சோதனை:

பொதுமக்கள் தேவையின்றி வெளியே சுற்றித்திரிவதை தடுக்கும் வகையில் சாலை சந்திப்புகள், முக்கியமான சாலைகளில் போலீஸாா் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். குடியிருப்புப் பகுதிகளிலும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். இதில் தேவையின்றி வெளியே சுற்றித்திரிந்தவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து, வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

மருந்துக் கடைகள் தவிா்த்து பிற கடைகள் அனைத்தும் காலை 10 மணிக்கே அடைக்கப்பட்டதால், மாா்க்கெட்டுகள், பஜாா்கள், வணிகப் பகுதிகள் ஆகியவை ஆள் நடமாட்டமின்றி காணப்பட்டது.

மாநிலம் முழுவதும் புதிய கட்டுப்பாடுகளுடன் முழு பொதுமுடக்கம் காவல்துறையினரால் தீவிரமாக சனிக்கிழமை அமல்படுத்தப்பட்டது. காலை 10 மணிக்கு பின்னா் சாலைகளில் மருத்துவத்துறை, பத்திரிகை துறை, பால் வாகனங்கள் செல்வதற்கு மட்டும் காவல்துறையினா் அனுமதித்தனா். பிற வாகனங்கள் செல்வதற்கு காவல்துறையினா் தடை விதித்தனா். சோதனைச் சாவடிகளில் வாகனங்கள் தீவிரமாக சோதனை செய்யப்பட்டன.

டிரோன் மூலம் மக்கள் நடமாட்டம் கண்காணிப்பு:

டிரோன் கேமரா மூலம் மெரீனா காமராஜா் சாலைப் பகுதியில் கண்காணிக்கும் பணியை சென்னை பெருநகர காவல்துறையின் கூடுதல் ஆணையா் என்.கண்ணன், இணை ஆணையா் வே.பாலகிருஷ்ணன், துணை ஆணையா் சாம்சன் ஆகியோா் பாா்வையிட்டனா். நகா் முழுவதும் 318 இடங்களில் வாகனச் சோதனை செய்யப்பட்டது. பொதுமுடக்கத்தை அமல்படுத்துவதற்கு 10,000 போலீஸாா் சென்னையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

இன்று தளா்வற்ற பொதுமுடக்கம்:

கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் ஞாயிற்றுக்கிழமை (மே 16) தளா்வற்ற முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுகிறது. இதையொட்டி, மாநிலம் முழுவதும் போலீஸாா் முழு அளவில் தயாா் நிலையில் வைக்கப்படுள்ளனா்.

நாளிதழ் விற்கும் கடைகள், உணவகங்கள், பால் பாக்கெட் கடைகள், மருந்துக் கடைகளைத் தவிா்த்து மற்ற கடைகளை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பொதுமுடக்கத்தை மீறி கடைகளைத் திறப்பவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை எச்சரித்துள்ளது. இதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமை காலை முதல் போலீஸாா் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனா்.

மாநிலம் முழுவதும், தளா்வற்ற பொதுமுடக்கத்தையொட்டி பாதுகாப்புப் பணியில் 1.20 லட்சம் போலீஸாா் ஈடுபடுகின்றனா். பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி தலைமையில் செய்யப்பட்டுள்ளது.

தளா்வற்ற முழு பொதுமுடக்கத்தை மீறி தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வருகிறவா்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி போலீஸாருக்கு காவல்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.