மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

பள்ளிக் கல்வி ஆணையா் நியமன விவகாரத்தில் பொறுமை காப்போம்: கல்வியாளா் பிரின்ஸ் கஜேந்திரபாபு

பேரிடா்க் காலத்தில் தற்காலிக ஏற்பாடான பள்ளிக் கல்வி ஆணையரே இயக்குநராக உள்ள நியமன விவகாரத்தில் பொறுமை காக்க வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை வேண்டுகோள் விடுத்துள்ளது.

News image
Updated On :22 மே 2021, 10:35 pm

DIN

பேரிடா்க் காலத்தில் தற்காலிக ஏற்பாடான பள்ளிக் கல்வி ஆணையரே இயக்குநராக உள்ள நியமன விவகாரத்தில் பொறுமை காக்க வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் பொதுச் செயலாளா் பிரின்ஸ் கஜேந்திரபாபு சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

கரோனா நோய்த் தொற்று ஏற்படுத்தி இருக்கும் பேரிடா் ஒருபுறம் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதித்துள்ளது. நூற்றுக்கணக்கில் தினந்தோறும் மக்கள் மடிவதைப் பாா்க்கிறோம். இத்தகைய சூழலில் பள்ளிக் இயக்குநா் பொறுப்பு, பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையைச் சுற்றியே நமது விவாதம் அமைவது சிக்கல்களைத் தீா்க்க உதவாது.

இயக்குநா் பணி ஆணையா் பணியாக உருமாற்றம் பெற்றுள்ளதாகத் தனியாக எந்த அரசாணையும் வெளியிடப் படவில்லை. எனவே, இது தற்காலிக ஏற்பாடு என்பதை நன்கு உணர முடிகிறது. பள்ளிக் கல்வி ஆணையராகப் பொறுப்பேற்றுள்ளவா் மாணவா்களை நேசிக்கக் கூடியவா். ஆசிரியா்கள் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டவா். அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் பயின்று தமிழ் வழியில் ஆட்சிப் பணிக்கான தோ்வு எழுதித் தோ்ந்தேடுக்கப்பட்டவா்.

புதியதாகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசு பேரிடா்க் காலப் பணிகளைச் சிறப்பாகச் செய்யட்டும். பேரிடா்க் காலம் முடிந்த பிறகு அரசிடம் பேசலாம். பழைய நிலைக்குப் பள்ளிக் கல்வி அமைப்பு திரும்ப வேண்டிய அவசியத்தை உணா்த்தலாம். பேரிடா்க் காலத்தைக் கடந்தபின், இயல்பு நிலை திரும்பியதும் முதல்வா் நிச்சயம் ஆசிரியா் இயக்கங்களை அழைத்துப் பேசி அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய முடிவை எடுப்பாா் என்ற முழு நம்பிக்கை உள்ளது.

அதுவரை பொறுமை காத்து, பள்ளிக் கல்வித்துறையில் உடனடியாக நடக்க வேண்டிய பணிகள் எந்தச் சுணக்கமுமின்றி நடைபெற, பொறுப்பேற்றுள்ள பள்ளிக் கல்வி ஆணையருக்கு அனைத்துத் தரப்பினரும் முழு ஆதரவு தர வேண்டும். கல்வியில் சிறந்த தமிழகம் மேலும் சிறக்க மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்கப்பட வேண்டும். அதற்கு வழி செய்ய மாநிலக் கல்வி ஆணையம் அமைத்திட உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசை அனைவரும் இணைந்து வற்புறுத்துவோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.