ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

கரோனா தடுப்புப் பணி: மேலும் ரூ.41.40 கோடி ஒதுக்கீடு

கரோனா சிகிச்சைக்கான மருத்துவ உபகரணங்கள் வாங்க மேலும் ரூ.41.40 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

News image
Updated On :28 மே 2021, 2:19 pm

DIN

கரோனா சிகிச்சைக்கான மருத்துவ உபகரணங்கள் வாங்க மேலும் ரூ.41.40 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்கு குறிப்பில், தமிழக மக்கள் அனைவரும் தமிழக அரசின் கரோனா தடுப்பு முயற்சிகளுக்கு கை கொடுக்கின்ற வகையில், நிதி வழங்க வேண்டுமென்று முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்ததற்கிணங்க, இன்றுவரை (28-5-2021) 186.15 கோடி ரூபாய் நன்கொடையாக பெறப்பட்டுள்ளது.

முதல்வர் பொது நிவாரண நிதிக்கு அளிக்கப்படும் நன்கொடைகள், கரோனா நிவாரணப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என உறுதியளித்தவாறு, இதுவரை பெறப்பட்டுள்ள தொகையிலிருந்து, ரெம்டெசிவிர் போன்ற உயிர் காக்கும் மருந்துகளை அரசு மருத்துவமனைகளுக்கு வழங்குவதற்காகவும், மற்ற மாநிலங்களிலிருந்து திரவ ஆக்சிஜனை இரயில் போக்குவரத்து மூலமாக கொண்டு வருவதற்குத் தேவையான கண்டெய்னர்களை வாங்குவதற்காகவும், முதற்கட்டமாக 50 கோடி ரூபாயை வழங்கிட முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்கெனவே ஆணையிட்டிருந்தார்.

இதனையடுத்து, கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நாள்தோறும் 1.6 இலட்சம் அளவிற்கு மேற்கொள்ளப்பட்டு வருவதைக் கருத்தில்கொண்டு, இப்பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக ஆர்.டி.பி.சி.ஆர். கிட்களை வாங்குவதற்கு 50 கோடி ரூபாயை இரண்டாவது கட்டமாக வழங்கிட முதல்வர் ஆணையிட்டிருந்தார்.

தற்போது சிப்காட் நிறுவனம் மூலம், சிங்கப்பூர் மற்றும் பிற அயல்நாடுகளிலிருந்து ஆக்சிஜன் உருளைகள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் இதர மருத்துவக் கருவிகளை வாங்குவதற்கு 41.40 கோடி ரூபாயினை முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்து முதல்வர் இன்று (28-5-2021) ஆணையிட்டுள்ளார். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.