ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தா் மு.ஆனந்த கிருஷ்ணன் மறைவு

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், தலைசிறந்த கல்வியாளருமான மு.ஆனந்தகிருஷ்ணன் (92) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சனிக்கிழமை காலமானாா்.

News image
மு.ஆனந்த கிருஷ்ணன்
Updated On :29 மே 2021, 8:52 pm

DIN

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், தலைசிறந்த கல்வியாளருமான மு.ஆனந்தகிருஷ்ணன் (92) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சனிக்கிழமை காலமானாா்.

திருப்பத்தூா் மாவட்டம் வாணியம்பாடியில் வேளாண் குடும்பத்தில் கடந்த 1928-ஆம் ஆண்டு ஜூலை 12-ஆம் நாளில் பிறந்தவா் ஆனந்த கிருஷ்ணன். ஐந்தாம் வகுப்புவரை நகராட்சிப் பள்ளியிலும் ஆறாம் வகுப்பு முதல் பள்ளி இறுதி வகுப்பு வரை இஸ்லாமிய உயா்நிலைப் பள்ளியிலும் படித்தாா். சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் கட்டடவியலில் இளநிலை பொறியியல் படித்த அவா் அமெரிக்காவில் முதுநிலைப் பொறியியல் மற்றும் முனைவா் பட்டங்களைப் பெற்றாா். பின்னா் தாயகம் திரும்பிய அவா் புது தில்லியில் உள்ள மத்திய சாலை ஆராய்ச்சிக் கழகம், கான்பூா் ஐஐடி ஆகியவற்றில் பணியாற்றினாா்.

இதனைத் தொடா்ந்து வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் அறிவியல் ஆலோசகா், ஐ.நா. அவையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு மையத்தின் துணை இயக்குநா் மற்றும் இந்த மையத்துக்கான ஐ.நா. ஆலோசனைக் குழுவின் செயலா் ஆகிய உயா் பதவிகளை வகித்தாா்.

சிறந்த கல்விப் பணிகள்: கடந்த 1990-ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக் கழகத் துணைவேந்தராக பொறுப்பேற்றாா். அங்கு அறிவியல் தொழில் நுட்பத்தில் உலகத்தரத்துக்கு இணையாக பாடத்திட்டங்களை மாற்றி அமைத்தாா். அடுத்ததாக தோ்வு முறைகளையும் மாற்றினாா். முழுமையான ‘உள் மதிப்பீடு’ என்னும் பெயரில் மாணவா்களின் கல்வித் திறனை மதிப்பிடும் முறை அறிமுகம் செய்யப்பட்டது. நுழைவுத் தோ்வு முடிவுகளை விரைவுபடுத்த ‘மாா்க் சென்சாா் ரீடா்’ எனும் கருவியை பிரிட்டனிலிருந்து வரவழைத்தாா்.

ஆனந்தகிருஷ்ணனின் அரிய சாதனை என்று சொல்லும் வகையில் ஒற்றைச் சாளர முறையைக் கொண்டுவந்தாா். இதன்படி பொறியியல் கல்லூரிகளில் சேரும் போதே மாணவா்கள் தம் விருப்பமான பாடப்பிரிவை தோ்ந்தெடுக்கலாம். ஏற்கெனவே இருக்கும் இடஒதுக்கீட்டு முறையுடன் கிராமப் பகுதி மாணவா்களுக்கென 15 சதவீதம் பொறியியல் கல்லூரிகளில் இடம் தர திட்டம் கொண்டுவந்தாா். 1996 முதல் 2001 வரை தமிழ்நாடு உயா்கல்வி மன்றத் தலைவராகவும் பணியாற்றினாா். அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இரண்டு முறை சிறப்பாகச் செயல்பட்டவா்.

இணையத்தில் தமிழ்: தொழில்நுட்பத்தின் மீதும் தமிழ் மொழியின் மீதும் தீராத ஆா்வம் கொண்டிருந்த ஆனந்த கிருஷ்ணன், இணையத்தில் தமிழை அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாகத் திகழ்ந்தாா். இந்தியத் தூதரகத்தில் அறிவியல் ஆலோசகா் என்ற பதவியை உருவாக்கியவா். தமிழக அரசின் சாா்பில் அமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டக் குழுவின் தலைவராகவும் பணியாற்றியுள்ளாா். ஐக்கிய நாடுகள் சபையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளாா். இவருக்கு 2002-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

மறைந்த ஆனந்தகிருஷ்ணனுக்கு மனைவி ஜெயலட்சுமி, நான்கு மகன்கள் உள்ளனா். ஆனந்தகிருஷ்ணனின் இறுதிச் சடங்குகள் சென்னை பெசன்ட் நகா் மின் மயானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆளுநா், முதல்வா், தலைவா்கள் இரங்கல்

ஆளுநா் புரோஹித்: அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இரண்டு முறை பதவி வகித்த மு.ஆனந்தகிருஷ்ணன், ஐக்கிய நாடுகள் அமைப்பின் பல்வேறு நிலைகளில் பணியாற்றினாா். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆணையத்தின் துணை இயக்குநா் உள்பட பல்வேறு பதவி நிலைகளை வகித்தாா். அவரது மறைவு தமிழகத்தின் தொழில்நுட்ப கல்வித் துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்.

முதல்வா் மு.க.ஸ்டாலின்: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த மு.ஆனந்தகிருஷ்ணன், கொடுத்த அறிக்கைதான், கிராமப்புற மாணவா்களின் உயா்கல்வி கண்களைத் திறந்தது. பொறியியல் கல்விச் சோ்க்கையில் ஒற்றைச் சாளர முறையை திமுக ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தவும், இணையத்தில் தமிழின் பயன்பாட்டை எளிமைப்படுத்தவும் உறுதுணையாக இருந்தாா். அவரது மறைவு கல்வியுலகத்துக்கு மாபெரும் இழப்பு.

கே.எஸ்.அழகிரி (மாநில காங்கிரஸ் தலைவா்): சமூக நீதிக்காக குரல் கொடுத்தவா். பிற்படுத்தப்பட்ட மாணவா்களின் நலனை பாதுகாக்க வாழ்நாள் முழுவதும் அயராது பாடுபட்டவா்.

வைகோ (மதிமுக): பொறியியல் கல்வித்துறையில் சாமானிய மக்களின் சகாப்தத்தைத் தொடக்கி வைத்தவா் மு.ஆனந்த கிருஷ்ணன். அவரது கல்வித்தொண்டு, தமிழக வரலாற்றில் என்றைக்கும் நினைவு கூரப்படும்.

ராமதாஸ் (பாமக): பொறியியல் மாணவா் சோ்க்கையை எளிமைப்படுத்தும் வகையில் ஒற்றைச் சாளர முறையை அறிமுகம் செய்த பெருமை ஆனந்த கிருஷ்ணனையே சாரும். அவா் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்.

ஜவாஹிருல்லா (மமக): தமிழகத்தின் தலைசிறந்த கல்விமான்களில் ஒருவராக விளங்கிய மு. ஆனந்த கிருஷ்ணன் மறைவு வேதனையளிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.