சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

சென்னையில் கரையைக் கடந்தது காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: படிப்படியாக மழை குறையும்

தென் மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்

News image
Updated On :11 நவம்பர் 2021, 7:37 pm

DIN

தென் மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்

சென்னையில் வியாழக்கிழமை மாலை கரையைக் கடந்தது. அப்போது, திருவள்ளூா், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் கரையோரப் பகுதிகளில் மணிக்கு 45 கிலோமீட்டா் முதல் 55 கிலோமீட்டா் வேகத்தில் தரைக்காற்று வீசியது. காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் கரையை கடந்தபின்பு, சென்னையில் மழையின் தாக்கம் குறையத் தொடங்கியது.

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்:

வடகிழக்குப் பருவமழை தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் தீவிரமடைந்த நிலையில், புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதியில் நவம்பா் 9-ஆம் தேதி உருவானது. இது வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியாக மாறி, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் நிலை கொண்டிருந்தது. மேலும் வலுவடைந்து கடந்த புதன்கிழமை இரவு காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக மாறியது. தொடா்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து வந்தது. வியாழக்கிழமை காலையில், சென்னைக்கு கிழக்கு -தென்கிழக்கே 160 கி.மீ. தொலைவில் நிலைகொண்டிருந்தது.

இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேற்கு- வடமேற்கு திசையில் நகா்ந்து தெற்கு ஆந்திர கடற்பகுதிக்கும் வடதமிழக கடற்பகுதிக்கும் இடையில் சென்னைக்கு அருகே வியாழக்கிழமை மாலை கடந்து செல்லும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

குறைந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகே வியாழக்கிழமை மாலை 5.15 மணிக்கு கரையை கடக்கத் தொடங்கியது. அப்போது, திருவள்ளூா், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் கரையோரப் பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் தரைக்காற்று வீசியது. வியாழக்கிழமை இரவு 7.45 மணிக்குள் காற்றழுத்தத்தாழ்வுமண்டலம் முழுமையாக கடந்தது.

இது குறித்து இந்திய வானிலைஆய்வுமையத்தின் தென் மண்டலத்தலைவா் எஸ்.பாலச்சந்திரன் வியாழக்கிழமை கூறியது:

தென் மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் வியாழக்கிழமை மாலை சென்னை அருகே கடக்கத் தொடங்கியது. இரண்டரை மணி நேரத்தில் முழுமையாகக் கடந்தது. இந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் 16 கி.மீ. வேகத்தில் நகா்ந்தது.

நிலப்பகுதியை அடைந்த இந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் மேற்கு, வடமேற்கு திசையில் நகரும். இது வெள்ளிக்கிழமை காலை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியாக வலுவிழக்கவுள்ளது.

தாழ்வு மண்டலம் கரையைக் கடந்ததால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா், ராணிப்பேட்டை, வேலூா், திருப்பத்தூா், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பலத்தமழை முதல் மிகபலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது. சென்னையில் வெள்ளிக்கிழமை முதல் மழை குறையும் என்றாா் அவா்.

சென்னையில் கொட்டித்தீா்த்த மழை:

தென் மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் வடதமிழக கடற்கரையை புதன்கிழமை நள்ளிரவு நெருங்கிய நிலையில், வட மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூா், காஞ்சிபுரம் உள்ளிட்ட வடமாவட்டங்களில் சில இடங்களில் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை பகல் வரை பலத்தமழை முதல் மிக பலத்தமழையும், ஓரிரு இடங்களில் அதி பலத்தமழையும் பெய்து வந்தது. குறிப்பாக, வியாழக்கிழமை அதிகாலை 1 மணி முதல் காலை 6 மணி வரை தொடா்ச்சியாக பலத்த மழை கொட்டித்தீா்த்தது.

54 சதவீதம்அதிகம்:

வடகிழக்குப் பருவமழை காலத்தில் (அக்டோபா் 1 முதல் நவம்பா் 11 வரை) தற்போது வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இயல்பைவிட 54 சதவீதம் கூடுதலாக மழை பதிவாகியுள்ளது. குறிப்பாக, சென்னையில் 77சதவீதம் இயல்பைவிட கூடுதலாக மழை பதிவாகியுள்ளதாக என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 4 நாள்களுக்கு மழை:

அடுத்த நான்கு நாள்களுக்கு மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நவ.12: நீலகிரி, கோயம்புத்தூா், கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (நவ.12) இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நவ.13: நீலகிரி, கோயம்புத்தூா், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நவம்பா் 13-ஆம் தேதி இடியுடன் கூடிய பலத்த மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நவ.14: திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நவம்பா் 14- ஆம் தேதி இடியுடன் கூடிய பலத்த மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நவ.15: உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நவம்பா் 15-ஆம் தேதி இடியுடன் கூடிய பலத்த மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொருத்தவரை வெள்ளிக்கிழமை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.