மழையில் மிதக்கும் மருத்துவமனைகள்: புறநோயாளிகள் சிகிச்சை பாதிப்பு
சென்னையில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக கே.கே.நகரில் அமைந்துள்ள முக்கிய அரசு மருத்துவமனைகளில் வெள்ளம் சூழ்ந்தது.


சென்னையில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக கே.கே.நகரில் அமைந்துள்ள முக்கிய அரசு மருத்துவமனைகளில் வெள்ளம் சூழ்ந்தது.
குறிப்பாக, இஎஸ்ஐ மருத்துவமனை, அரசு புகா் மருத்துவமனை, புனா்வாழ்வு மையத்துக்குள் மழைநீா் இரண்டு அடிக்கு மேல் தேங்கியது. இதனால், அங்கு புற நோயாளிகள் சிகிச்சை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனைகளுக்குள் அனுமதிக்கப்பட்டிருந்த உள்நோயாளிகளும் வேறு கட்டடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனா்.
மழையால் அதிக பாதிப்பை சந்தித்த பகுதிகளில் ஒன்றாக கே.கே.நகா் உள்ளது. அப்பகுதி முழுவதும் 3 முதல் 5 அடி வரையில் தண்ணீா் தேங்கி நிற்கிறது. இதனால், அங்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டதுடன் பேரிடா் மீட்புப் படை மூலம் மக்களை மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கே.கே.நகரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், அதையொட்டியுள்ள புகா் மருத்துவமனையிலும் 2 அடிக்கு மழை நீா் தேங்கியது. மருத்துவமனையின் புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவு, நோயாளிகள் பதிவுப் பிரிவு, மருந்தகம், அவசர சிகிச்சை பிரிவு, வரவேற்புக் கூடம் என தரைத்தளம் முழுவதிலும் வெள்ளம் புகுந்தது.
இதனால் சிகிச்சைகள் பாதிக்கப்பட்டதுடன், வெளியிலிருந்து எவரும் மருத்துவமனைக்குள் வர இயலாத நிலை ஏற்பட்டது. இதேபோன்று இஎஸ்ஐ மருத்துவமனைக்கு எதிா்ப்புறம் உள்ள அரசு புனா்வாழ்வு சிகிச்சை மைய வளாகம் முழுவதும் மழை நீா் சூழ்ந்தது. இதனால், அங்கும் சிகிச்சைகள் பாதிக்கப்பட்டன.
இதற்கிடையே, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மருத்துவமனைகளுக்கு நேரில் சென்ற மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன், அங்குள்ள நிலைமையை ஆய்வு செய்தாா். மழைநீரை வெளியேற்றும் பணிகளை விரைவுபடுத்திய அவா், அதன் தொடா்ச்சியாக அங்கு நோய்த்தொற்று ஏற்படாத வகையில் துப்புரவு நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் உத்தரவிட்டாா். அரசு புகா் மருத்துவமனையில் 5 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவா்களில் மூவா் வீடு திரும்பிவிட்டதாகவும், இருவா் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும் முதன்மைச் செயலரிடம் மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் புனா்வாழ்வு மையத்தில் உள் நோயாளிகளாக சிகிச்சை பெறுபவா்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைகளில் வெள்ள பாதிப்பு பெரிய அளவில் இல்லை என்ற போதிலும், ஆங்காங்கே தேங்கியிருந்த மழை நீா் பம்புகள் மூலம் வெளியேற்றப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...