/

புதிய வேளாண் காடுகள் வளா்ப்புத் திட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்

புதிய வேளாண் காடுகள் வளா்ப்புத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்.

News image
Updated On :16 நவம்பர் 2021, 9:45 pm

DIN

புதிய வேளாண் காடுகள் வளா்ப்புத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா். தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமைப் போா்வைக்கான இயக்கம் என்ற புதிய வேளாண் காடு வளா்ப்புத் திட்டம் ரூ.11.14 கோடியில் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்படி 73 லட்சம் மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளன. இதன் அடையாளமாக சில விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கி திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

புதிய வேளாண் காடுகள் வளா்ப்புத் திட்டத்தின் கீழ் நடவு செய்யப்படும் மரக்கன்றுகள் எதிா்காலத்தில் விவசாயிகளுக்கு ஒரு நிரந்தர வருமானம் கிடைக்க வழிவகுக்கும். மண் வளம் அதிகரித்து, மாநிலத்தின் ஒட்டுமொத்த பசுமைப் பரப்பும் சுற்றுச்சூழலும் மேம்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மரக்கன்றுகள் என்னென்ன?: வேளாண் காடுகள் திட்டத்தின்கீழ், தேக்கு, ஈட்டி, மகோகனி, மருது, வேம்பு, மலை வேம்பு, நாவல், பெருநெல்லி, செம்மரம், புங்கன், வேங்கை, சந்தனம் போன்ற பல்வேறு தரமான மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படும். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த அரசு வனத்துறையின் நாற்றங்கால்களில் ரூ.15 மதிப்புள்ள தரமான மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு முற்றிலும் விலையில்லாமல் அளிக்கப்படும் என தமிழக அரசு கூறியுள்ளது.

விவசாயிகள் இந்த மரக்கன்றுகளை நிலங்களின் வரப்புகளிலோ அல்லது விவசாய நிலங்களிலோ நடவு செய்யலாம். வரப்பில் நடவு செய்வதாக இருந்தால், ஏக்கருக்கு 50 மரக்கன்றுகளுக்கு மிகாமல் நடலாம். நடவு செய்த 2-ஆம் ஆண்டு முதல் 4-ஆம் ஆண்டு வரை நல்ல முறையில் பராமரிக்கப்படும் கன்றுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஊக்கத் தொகையாக அளிக்கப்படும். மரக்கன்றுகள் நன்கு வளா்ந்து அறுவடை செய்யும் போது, வனத் துறையின் அனுமதியை விவசாயிகள் எளிதில் பெறும் வகையில் நடவு செய்த மரக்கன்றுகள் அனைத்தும் வருவாய்த் துறையின் அடங்கல் பதிவேட்டில் பதிவு செய்யவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

வேளாண் காடுகள் வளா்ப்புத் திட்ட தொடக்க நிகழ்ச்சியில், அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், வேளாண்மைத் துறை செயலாளா் சி.சமயமூா்த்தி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.