வாரிசு அரசியல் ஜனநாயகத்துக்கு எதிரானது: ஜெ.பி.நட்டா

திருப்பூர் வித்யாலயம் பகுதியில் கட்டப்பட்டுள்ள பாஜகவின் புதிய மாவட்ட அலுவலகத்திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
மேடையில் ஜெ.பி.நட்டா
மேடையில் ஜெ.பி.நட்டா
Published on
Updated on
2 min read

திருப்பூர்: வாரிசு, குடும்ப அரசியல் என்பது ஜனநாயகத்துக்கு எதிரானது என்று திமுக மீது பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா குற்றம் சாட்டியுள்ளார்.

திருப்பூர் வித்யாலயம் பகுதியில் கட்டப்பட்டுள்ள பாஜகவின் புதிய மாவட்ட அலுவலகத்திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்தார். இதன் பின்னர் அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஈரோடு, திருப்பத்தூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் புதியதாக கட்டப்பட்டுள்ள பாஜக அலுவலகத்தையும் காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.

இதன் பிறகு அவர் பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:  இந்த தமிழகம் புனிதமான பூமியாகும். இங்குதான் நம்முடைய தமிழ் கலாசாரத்துக்கு அடையாளமாக விளங்கக்கூடிய திருவள்ளுவர் இருந்த இந்த பூமியை நான் வணங்குகிறேன். தமிழகம் பக்தி நிறைந்த பூமியாகும். இந்த நாட்டின் பக்திக்கும் கலாசாரத்துக்கும் உதாரணமாக இருக்கிறது.

இந்த நாளில் திருப்பூர் மட்டுமின்றி ஈரோடு, திருநெல்வேலி, திருப்பத்தூர் ஆகிய இடங்களிலும் பாஜக மாவட்ட அலுவலகம் திறந்துவைக்கப்பட்டுள்ளது. பாஜகவின் பணி என்பது சீராக கட்டமைக்கப்பட்ட பணியாகும். சித்தாந்தரீதியாக நம்முடைய பணிகள் நடைபெற இந்த அலுவலகங்கள் மிகப்பெரிய உதவியாக இருக்கும்.

கட்சி அலுவலகங்கள் எல்லாம் தலைவர்களின் வீடுகளில் இருந்து செயல்படும். அந்தக் கட்டடங்கள் அந்தத் தலைவர்கள் போனதற்கு பின்பாக காணாமல்போய்விடும். நம்முடையை அலுவலகம் என்பது காலம்காலமாக கட்சியின் தொண்டர்கள் இருந்து பணியாற்றுவதற்காக மிகப்பெரிய உத்வேகத்தைக் கொடுக்கும் இடமாக இருக்கும். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பாஜகவுக்கு அலுவலகம் வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் நாடு முழுவதிலும் உள்ள 720 மாவட்டங்களில் கட்சி அலுவலகங்களை திறக்கத் திட்டமிட்டுள்ளோம். இதில், தற்போது வரையில் 473 மாவட்டங்களில் கட்சி அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 4 மாவட்டத்தில் அலுவலகத்தை திறந்துள்ளோம். மேலும், ஒரு ஆண்டுக்குள் கோவை உள்பட 16 மாவட்டங்களில் அலுவலகங்கள் திறக்கப்படும். நம்முடைய அலுவலகங்களை காரியாலயம் என்றுதான் சொல்வோம் இதன் பொருள் ஆலயம் என்பதாகும்.

அலுவலகம் என்பது நம் கட்சி தொண்டர்களுக்கு கோயில் போன்றதாகும். இந்த அலுவலகங்கள் அனைத்து நாள்களிலும் அனைத்து நேரங்களிலும் ஆண்டு முழுவதும் செயல்படும். கட்சி நடத்துவதற்காக நிதி வாங்க வேண்டுமோ தவிர நிதி வாங்குவதற்காக கட்சி நடத்துபவர்கள் அல்ல பாஜகவினர். திமுக என்றால் லஞ்சம், ஊழலும் நிறைந்ததாகக்தான் உள்ளது. திமுகவும் ஊழலும் நாணயத்தின் இரண்டு பக்கங்களைப்போல் உள்ளது.

திமுக என்பது வாரி்சு, குடும்ப அரசியலைக் கொண்ட கட்சியாக உள்ளது. எப்போதும் வாரிசு அரசியல் ஜனநாயகத்துக்கு எதிரானது. வாரிசு அரசியல் உள்ள கட்சிக்கு பணியாற்றும்போது தலைவருக்கோ, குடும்பத்துக்கோ பணியாற்றுகிறீர்கள் என்று அர்த்தம்.

அதுவே பாஜகவுக்கு பணியாற்றினால் அது இந்த நாட்டில் உள்ள மக்களுக்கு பணியாற்றுவதாக அர்த்தம். இந்த மேடையில் உள்ள தலைவர்கள் எந்தவிதமான அரசியல் பின்புலத்தில் இருந்தும் வராதவர்கள் என்றார்.

இந்த நிகழ்ச்சியில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி, தேசிய செயற்குழு உறுப்பினர்கள் எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழக பொறுப்பாளர் பி.சுதாகர் ரெட்டி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com