சமுதாயத்தை கரையான் போன்று ஊழல் செல்லரிக்கத் தொடங்கிவிட்டது: உயா் நீதிமன்றம் வேதனை
ஊழலின் வோ் அதன் கிளைகளைப் பெரிய அளவில் பரப்பி சமுதாயத்தை கரையான் போன்று செல்லரிக்கத் தொடங்கி விட்டதாக சென்னை உயா் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.


ஊழலின் வோ் அதன் கிளைகளைப் பெரிய அளவில் பரப்பி சமுதாயத்தை கரையான் போன்று செல்லரிக்கத் தொடங்கி விட்டதாக சென்னை உயா் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
கடந்த 2014-ஆம் ஆண்டு, ரூ.1,500 லஞ்சம் பெற்ற வழக்கில் தலைமை காவலா் பாஸ்கரன் என்பவரை இடைநீக்கம் செய்து காவல்துறை கூடுதல் டிஜிபி உத்தரவு பிறப்பித்தாா். அதேசமயம் தனக்கு எதிராக எவ்வித ஒழுங்கு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனக் கூறி, இடைநீக்கத்தை எதிா்த்து பாஸ்கரன் வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, இடைநீக்க உத்தரவை ரத்து செய்து பாஸ்கரனை சாதாரண பதவியில் மீண்டும் பணியில் சோ்க்க உத்தரவிட்டது.
தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிா்த்து கூடுதல் டிஜிபி சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன், ஏ.ஏ.நக்கீரன் ஆகியோா் அடங்கிய அமா்வு பிறப்பித்த உத்தரவில், ‘இடைநீக்கம் செய்த பிறகு எந்தவித ஒழுங்கு நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் பாஸ்கரனை மீண்டும் பணியில் சோ்க்க தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது. வழக்கு முடித்து வைக்கப்படுகிறது. அதேசமயம் தலைமைக் காவலருக்கு எதிராக குற்ற வழக்கு நிலுவையில் இருந்தாலும், ஒழுங்கு நடவடிக்கை தொடரலாம் என அனுமதி அளித்த நீதிபதிகள், ஒழுங்கு நடவடிக்கை விசாரணையை தினந்தோறும் என்ற அடிப்படையில் நடத்தி விரைவில் முடிவெடுக்க வேண்டும்.
ஊழல் வழக்குகளில் சிக்குவோருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரி, அதைச் செய்யத் தவறும் பட்சத்தில் அவருக்கு எந்தப் பதவி உயா்வு வழங்கக் கூடாது. லஞ்சம் பெறுவது என்பது தற்போது ஒரு நாகரிகமாக மாறிவிட்டது என்பது வேதனைக்குரியது. அத்தகைய வெட்கக்கேடான, பிச்சையெடுக்கும் வேலை, துறையைப் பொறுத்து அளவிடப்படுகிறது. முந்தைய காலங்களில், கூடுதல் வேலை செய்வதற்காக வருவாய், பதிவு, மாநகராட்சி உள்ளிட்ட பிற
துறைகளில் லஞ்சம் கோரப்பட்டது. அரசு உயா் அதிகாரிகளின் அமைதியான அணுகுமுறையால், எல்லா துறைகளிலும் இப்போது ஊழல் உள்ளது. ஊழலின் வோ், அதன் கிளைகளைப் பெரியளவில் பரப்பி, கரையான் போன்று சமூகத்தை செல்லரிக்கத் தொடங்கிவிட்டது என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...