ஈரோடு அருகே மஞ்சள் குடோனில் தீ விபத்து; பல கோடி ரூபாய் மஞ்சள் எரிந்து நாசம்!

ஈரோடு அருகே தனியாருக்குச் சொந்தமான மஞ்சள் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான மஞ்சள் எரிந்து சேதமடைந்தது.  
ஈரோடு அருகே மஞ்சள் குடோனில் ஏற்பட்ட தீயை அணைக்கும் தீயணைப்பு வீரர்கள்.
ஈரோடு அருகே மஞ்சள் குடோனில் ஏற்பட்ட தீயை அணைக்கும் தீயணைப்பு வீரர்கள்.

ஈரோடு அருகே தனியாருக்குச் சொந்தமான மஞ்சள் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான மஞ்சள் எரிந்து சேதமடைந்தது.          

ஈரோடு மாவட்டம் பெரிய புலியூர் அருகே அங்கித் அகர்வால் என்பவர் விவசாயிகளிடம் இருந்து மஞ்சள் விலைக்குப் பெற்று அதனை மஞ்சள் தூள் ஆக்கி குடோனில் இருப்பு வைத்து வட மாநிலங்களில் உள்ள பல்வேறு விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வியாபாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் இன்று அதிகாலை பெரிய புலியூர் பகுதிகளில் மழை பெய்தபோது குடோனில் இடி இறங்கி உள்ளது. இதனால் அங்கிருந்த மஞ்சள் மூட்டைகள் தீப்பிடித்து எரியத் துவங்கியது.  

இதனைக் கண்ட அப்பகுதியினர் பவானி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால், தீ கட்டுப்படுத்த முடியாமல் கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இதனால் ஈரோடு, பெருந்துறை, கோபி பகுதியில் இருந்து மேலும் மூன்று தீயணைப்பு வாகனங்கள் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கும் பணியில் 50 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் இந்த தீ விபத்தில் உயிர் சேதம் இல்லாத போதும் பல கோடி ரூபாய் மதிப்பிலான மஞ்சள் எரிந்து சேதம் ஆனது.

இச்சம்பவம் தொடர்பாக கவுந்தப்பாடி காவல்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், நகரின் ஒதுக்குப்புறமான பகுதியில் குடோனை வாடகைக்கு எடுத்து சட்டவிரோதமாக மஞ்சள் பதுக்கி வைத்ததும், காப்பீடு மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இன்றி இருப்பதும் தெரிய வந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com