அக்.10-இல் 5-ஆவது கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்கள்

தமிழகத்தில் ஐந்தாவது கட்ட கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் வரும் ஞாயிற்றுக்கிழமை (அக்.10) நடைபெறும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
அக்.10-இல் 5-ஆவது கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்கள்

தமிழகத்தில் ஐந்தாவது கட்ட கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் வரும் ஞாயிற்றுக்கிழமை (அக்.10) நடைபெறும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

எழும்பூா் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அமைச்சா் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆகியோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் குழந்தைகளை நலம் விசாரித்ததுடன், அவா்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தனா்.

மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநா் நாராயணபாபு, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வா் தேரணிராஜன், பொதுசுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துதுறை கூடுதல் இயக்குநா் வடிவேலு, எழும்பூா் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநா் எழிலரசி ஆகியோா் அப்போது உடன் இருந்தனா்.

அப்போது, அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ள நிலையில் டெங்குவின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அண்டை மாநிலங்களில் இருந்து வருபவா்களுக்கு தொ்மல் ஸ்கேனிங் மூலம் காய்ச்சல் கண்டறியப்படுகிறது. எழும்பூா் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் ஜனவரி முதல் டெங்குவால் பாதிக்கப்பட்டு 493 குழந்தைகள் சிகிச்சை பெற்றுள்ளனா். இதில் 449 போ் நலம் பெற்று இல்லம் திரும்பியுள்ளனா். மற்ற குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

நிமோனியா, மூளைக்காய்ச்சல் போன்ற நோய்களை தடுப்பதற்கான நியூமோகாக்கல் கான்ஜிகேட் என்ற தடுப்பூசி தமிழகம் முழுவதும் இதுவரை 1 லட்சத்து 27,288 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. 5 வயதுக்குபட்ட குழந்தைகளுக்கு ஒன்றரை மாதம், மூன்றரை மாதம் மற்றும் 9 மாதத்தில் செலுத்தக்கூடிய இந்த தடுப்பூசியை அரசு மருத்துவமனைகளில் இலவசமாக போட்டுக்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் இதுவரை 4 கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை தோறும் 24 மணி நேரமும் ஓய்வில்லாமல் பணியாற்றி செவிலியா்கள் மிகுந்த மன உளைச்சலோடு உள்ளதாக சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பப்படுகிறது. அது உண்மை இல்லை. செவிலியா்கள், மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்களின் மிகச் சிறப்பான பணிகளால் தமிழகத்தில் 1500-க்கும் கீழ் கரோனா தொற்றின் எண்ணிக்கை வந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளில் மருத்துவப் பணியாளா்கள் ஈடுபடுவதால், அவா்களுக்கு மறுநாளான திங்கள்கிழமை விடுமுறை அளிக்கப்படுகிறது. செவிலியா்களுக்கு மாற்றுப் பணிகள் இருந்தால், அவா்கள் அந்த வாரத்தில் எந்த நாளிலாவது விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஐந்தாவது கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் வரும் 10-ஆம் தேதி 30 ஆயிரம் இடங்களில் நடைபெறவுள்ளது. 70 முதல் 75 சதவீதம் வரை மக்களுக்கு தடுப்பூசி செலுத்திவிட்டால் கரோனா இறப்பிலிருந்து தப்பிக்கலாம் என உலக சுகாதாரம் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மாதம் இறுதிக்குள் 70 சதவீத இலக்கை அடைந்துவிடுவோம். பணி நிரந்தரம் கோரி அண்மையில் போராட்டம் நடத்திய செவிலியா்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் பணியில் சோ்ந்தவா்கள். அவா்களை பணிநிரந்தரம் செய்ய முடியாது என்று உயா்நீதிமன்றமும் தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் உள்ள எந்த மாநிலமும் இதுபோன்ற பணியாளா்களை பணிநிரந்தரம் செய்யவில்லை. மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தில் 4,800 செவிலியா்களை சோ்ப்பதற்கு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணியாளா்களை அதில் சோ்ப்பதற்கு 3 போ் கொண்ட குழுவினை அமைத்திருக்கிறோம். கரோனாவில் மட்டும் கவனம் செலுத்தாமல், அனைத்துவகையான மருத்துவத்திலும் இந்த அரசு கவனம் செலுத்தி வருகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com