பட்டுப் புடவைக்கு சரிகை உத்தரவாத அட்டை: முதல்வர் ஸ்டாலின் தொடக்கிவைப்பு

கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறையின் சார்பில் பல்வேறு புதிய திட்டங்களை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
பட்டுப் புடவைக்கு சரிகை உத்தரவாத அட்டை: முதல்வர் ஸ்டாலின் தொடக்கிவைப்பு
பட்டுப் புடவைக்கு சரிகை உத்தரவாத அட்டை: முதல்வர் ஸ்டாலின் தொடக்கிவைப்பு

கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறையின் சார்பில் பல்வேறு புதிய திட்டங்களை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் தொடர் முயற்சியால் கள்ளக்குறிச்சி மரச்சிற்பம், கருப்பூர் கலம்காரி ஓவியம், தஞ்சாவூர் நெட்டி வேலை மற்றும் அரும்பாவூர் மரச்சிற்பம் ஆகிய கைவினைப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு பதிவகம் மூலம் பெறப்பட்ட புவிசார் குறியீடு அங்கீகார சான்றிதழ்களை வெளியிட்டார்.

தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் புவிசார் குறியீடு என்பது ஒரு குறிப்பிட்ட பகுதி / மாநிலம் / நாட்டில் பல ஆண்டுகளாக பாரம்பரிய முறைகளின்படி உற்பத்தி செய்யும் பொருட்களை பயன்படுத்துவதற்காகவும், சந்தைப்படுத்துவதற்காகவும் அப்பொருட்களை உற்பத்தி செய்பவர்களுக்கு அங்கீகாரம் அளிப்பதற்காகவும் சட்டப்படி வழங்கப்படும் சான்றாகும்.

புவிசார் குறியீட்டின் மூலம் அப்பொருட்களுக்கான தரம், நற்பெயர் மற்றும் அடையாளம் காக்கப்படுகிறது. மேலும், அவ்வாறு புவிசார் குறியீடு அங்கீகாரம் பெற்ற குறிப்பிட்ட பொருட்களுக்கு மட்டுமே உற்பத்தி செய்யவும், சந்தைப்படுத்தவும் வழிவகை செய்யப்படுகிறது. இதனால் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் தரம், பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் அதன் தொன்மை பேணி பாதுகாக்கப்படுகிறது. புவிசார் குறியீடு அங்கீகாரம் பெற்றவைகளைத் தவிர பிறபகுதி / மாநிலம் / நாட்டில் உள்ளவர்கள் அப்பொருட்களை உற்பத்தி செய்யவோ, சந்தைப்படுத்தவோ சட்டப்படி இயலாது.

இதன்மூலம் போலியாக உற்பத்தி செய்வதும் கள்ளச்சந்தையில் விற்பதும் கட்டுப்படுத்தப்படுகிறது.

அந்த வகையில், தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் தொடர் முயற்சியின் காரணமாக, கள்ளக்குறிச்சி மரச்சிற்பம், கருப்பூர் கலம்காரி ஓவியம், தஞ்சாவூர் நெட்டி வேலை மற்றும் அரும்பாவூர் மரச்சிற்பம் ஆகிய கைவினைப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு பதிவகம் மூலம் புவிசார் குறியீடு அங்கீகார சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளது. இந்த புவிசார் குறியீட்டின் மூலம் தமிழக கைவினைஞர்கள் படைப்புகள் உலகளவில் கொண்டுச் சென்று சந்தைப்படுத்துவதற்கு வாய்ப்பாக அமையும்.

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் தமிழ்த் தறி தொகுப்பு தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு தமிழரின் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் நவீனமும் கலந்த புதிய வடிவமைப்புகள் மற்றும் வண்ணங்களை கொண்டு கைத்தறி நெசவாளர்களால் உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம் பட்டு சேலைகள் 100 புதிய வடிவமைப்புகள், ஆரணி பட்டு சேலைகள் 25 புதிய வடிவமைப்புகள், திருபுவனம் பட்டு சேலைகள் 50 புதிய வடிவமைப்புகள், சேலம்; கோயம்புத்தூர் பட்டு சேலைகள் 200 புதிய வடிவமைப்புகள், சின்னாளப்பட்டி பட்டு / பருத்தி சேலைகள் 75 புதிய வடிவமைப்புகள், நெகமம் பருத்தி சேலைகள் 40 புதிய வடிவமைப்புகள், திண்டுக்கல், பரமக்குடி பருத்தி சேலைகள் 80 புதிய வடிவமைப்புகள், லினன் சேலைகள் 25 புதிய வடிவமைப்புகள், ஆடவருக்கான கைலிகள் 75 புதிய வடிவமைப்புகள், பவானி கோர்வை ஜமக்காளம் 30 புதிய வடிவமைப்புகள் மற்றும் குழந்தைகளுக்கான காஞ்சிபுரம் பட்டுப்பாவாடை, சட்டை 50 புதிய வடிவமைப்புகள் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் வாயிலாக “தமிழ்த்தறி” என்ற தொகுப்பினை முதல்வர் ஸ்டாலின்அறிமுகம் செய்து வைத்தார்கள்.

சரிகை உத்தரவாத அட்டை
காஞ்சிபுரம் பட்டு சேலை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சரிகையில் உள்ள தங்கம், வெள்ளி அளவீடுகள் மற்றும் நம்பகத்தன்மையினை உறுதி செய்யும் வகையில் இந்தியாவில் முதன்முதலாக கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் சரிகை உத்தரவாத அட்டையினை முதல்வர் ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார்.

குழந்தைகளுக்கான ஆர்கானிக் ஆடைகள்
சுற்றுச்சூழலுக்கு உகந்த மென்மையான இயற்கை பருத்தி நூலினை உபயோகித்து பச்சிளம் குழந்தைகளுக்கான புதிய ஆர்கானிக் ஆடை இரகங்களை தமிழக முதல்வர் அறிமுகப்படுத்தினார்.

ஆதிரை கலெக்சன்ஸ் பட்டுப் புடவைகள்
தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் புதிய முயற்சியாக இந்தாண்டு பெண்களைக் கவரும் வகையில் ஆதிரை கலெக்சன்ஸ் வகையான அச்சிடப்பட்ட பட்டுப் புடவைகள், டிஜிட்டல் பிரிண்டிங் பட்டுபுடவைகள், கையினால் வர்ணம் தீட்டப்பட்ட பட்டுப் புடவைகள், மற்றும் மெல்லிய ரக பருத்தி இழை புடவைகள் ஆகியவற்றையும் தமிழ்த் தறியின் ஒருபகுதியாக முதல்வர் ஸ்டாலின்அறிமுகப்படுத்தினார்கள்.

புதிய வகை குளியல் சோப்புகள்
தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தால் குறிஞ்சி சந்தனம், வேம்பு, இயற்கை மூலிகை, குமரி கற்றாழை போன்ற குளியல் சோப்பு வகைகள் மக்களை கவரும் வண்ணம் உற்பத்தி செய்யப்பட்டு சிறந்த முறையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நவீன காலத்திற்கேற்றவாறு சந்தையில் உள்ள இதர சோப்புகளுக்கு இணையாக ரோஸ், லேவண்டர், சந்தனம் மற்றும் செஞ்சந்தனம் எனும் 4 வகையான நறுமணங்களில் 125 கிராம் அளவுகளில் மக்கள் விரும்பும் வண்ணம் நவீன வடிவமைப்பிலான அட்டைப்பெட்டிகளில், வாரிய கதரங்காடிகள் மற்றும் சந்தையில் பிரசித்திப்பெற்ற பல்பொருள் அங்காடிகளின் மூலம் விற்பனை செய்யும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
புதிய கண்ணாடி பாட்டில்கள் மூலம் தேன் விற்பனை தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தால் பச்சைத்தேன் நாகர்கோவில் மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள தேனீ விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து, பதப்படுத்தி அக்மார்க் தரத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கதர் அங்காடிகளில் கடந்த பல ஆண்டுகளாக பெட் பாட்டில்களில் தேனை அடைத்து பல்வேறு அளவுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உணவு மற்றும் பாதுகாப்புத் துறையின் அறிவுரைப்படி, கண்ணாடி பாட்டில்களில் தேனை அடைத்து விற்பனை செய்திடும்போது தேனின் பண்புகள் நீண்ட நாட்களுக்கு மாறாமல் இருக்கப் பெறும் என்பதாலும், சந்தையில் பிரசித்திப்பெற்ற பல்பொருள் அங்காடிகளின் மூலம் காதி தேனை விற்பனை செய்யும் நோக்கிலும், நவீன கண்ணாடி பாட்டில்களில் பொது மக்களை கவரும் வண்ணம் அழகிய லேபில்களை கொண்ட 250 கிராம் மற்றும் 500 கிராம் அளவுகளில் தேன் விற்பனையை முதல்வர் ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com