ஊரகப் பகுதிகளில் ஏழைகளுக்கு நிலம், வீடு வழங்க சிறப்புப் பிரிவு: தமிழக அரசாணை
ஊரகப் பகுதிகளில் வாழும் வீடு இல்லாத, குடிசை வீடுகளில் வசிக்கும் ஏழை மக்களுக்கு நிலம் மற்றும் வீடுகள் வழங்க தமிழக அரசின் சார்பில் சிறப்புப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.


2022-ஆம் ஆண்டிற்குள் அனைவருக்கும் வீடு என்ற இலக்கை அடையும் பொருட்டு, ஊரகப் பகுதிகளில் வாழும் வீடு இல்லாத, குடிசை வீடுகளில் வசிக்கும் ஏழை மக்களுக்கு நிலம் மற்றும் வீடுகள் வழங்க தமிழக அரசின் சார்பில் சிறப்புப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் அரசு முதன்மை செயலாளர் இந்தப்பிரிவின் தலைவராகவும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் அரசு முதன்மை செயலாளர் இதன் துணைத் தலைவராகவும், நில நிர்வாக ஆணையரை உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
குடிசைகளே இல்லாத தமிழகம் உருவாக வேண்டும் என்பதே அரசின் முக்கிய நோக்கமாகும். 2022-ஆம் ஆண்டிற்குள் அனைவருக்கும் வீடு என்ற இலக்கை அடையும் பொருட்டு, ஊரகப் பகுதிகளில் வாழும் வீடு இல்லாத, குடிசை வீடுகளில் வசிக்கும் ஏழை மக்களுக்குத் தேவையான நிலையான வீடு கட்டிக் கொடுப்பதே பிரதம மந்திரி குடியிருப்பு (ஊரக) திட்டத்தின் குறிக்கோள் ஆகும்.
இத்திட்டத்தின் பயனாளிகள் 2011-ன் சமூக பொருளாதார கணக்கெடுப்பின் படி நிரந்தர காத்திருப்போர் பட்டியலிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இத்திட்டம் நிலமற்றோருக்கு முன்னுரிமை அளித்தபோதிலும், நிலமற்ற பயனாளிகள் இத்திட்டத்தின் மூலம் வீடுகள் பெற இயலாத நிலை உள்ளது. மேலும், பிரதம மந்திரி குடியிருப்பு (ஊரகம்) திட்டத்தினை விரைவுப்படுத்தி, வீடுகள் கட்டும் பணியினை துரிதப்படுத்த இயலவில்லை. எனவே, நிலமற்ற பயனாளிகளுக்கு, நிலம் வழங்கி, வீடுகள் கட்டும் பணியினை துரிதப்படுத்திட, அரசு செயலாளர்(வருவாய்) மற்றும் பிரதம மந்திரி குடியிருப்பு (ஊரகம்) திட்டத்தினை செயல்படுத்தும் அரசு செயலாளரைக் கொண்ட சிறப்பு பணிப்பிரிவு (Task Force) அமைக்க மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இதனடிப்படையில், இத்திட்டத்தின் செயலாக்கத்தினை விரைவுபடுத்தவும், 2011-ன் சமூக பொருளாதார கணக்கெடுப்பின்படி நிரந்தர காத்திருப்போர் பட்டியலிலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட நிலமற்ற பயனாளிகளுக்கு, விரைவில் நிலம் ஒதுக்கீடு செய்யும் பொருட்டு, இந்த அரசு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் அரசு முதன்மை செயலாளரை தலைவராகவும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் அரசு முதன்மை செயலாளரை, துணைத் தலைவராகவும், நில நிர்வாக ஆணையரை உறுப்பினராகவும் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் இயக்குநரை உறுப்பினர்/செயலராகவும் கொண்ட சிறப்பு பணிப்பிரிவு (Task Force) அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் இத்திட்டத்தினை விரைவுப்படுத்தி, நிலமற்ற பயனாளிகளுக்கு நிலம் வழங்கி, குடிசைகளே இல்லாத தமிழகம் என்ற குறிக்கோளை எய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...