அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று சொல்வது சமூக நீதி: கே.எஸ்.அழகிரி

அனைத்து சாதியினரும் அர்ச்சகராக ஆகலாம் என்று சொல்வது சமூக நீதி என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று சொல்வது சமூக நீதி: கே.எஸ்.அழகிரி

அனைத்து சாதியினரும் அர்ச்சகராக ஆகலாம் என்று சொல்வது சமூக நீதி என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

சிதம்பரத்தில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜீவ் காந்தி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது உருவச்சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மாலை அணிவித்து மக்களுக்கு இலவச வேட்டி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வெள்ளிக்கிழமை வழங்கினார். நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் என்.வி.செந்தில்நாதன் தலைமை வகித்தார்.

நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் பாலதண்டாயுதம், தில்லை ஆர்.மக்கீன், ஜெமினி எம்.என்.ராதா, ராஜாசம்பத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விருத்தாசலம் சட்டப்பேரவை உறுப்பினர் ராதாகிருஷ்ணன், தமிழக காங்கிரஸ் கட்சி மாநிலச் செயலாளர்கள் பி.பி.கே.சித்தார்த்தன், சேரன், ஜெயச்சந்திரன், மாநில மகளிரணித் தலைவர் சுதா, நாகை மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் அபூர்வராஜா, முன்னாள் மாவட்டத் தலைவர் ஏ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

செல்லிடப்பேசி, கணினி ஆகிய தொழில்நுட்பங்களை இந்தியாவில் கொண்டு வந்தவர் ராஜீவ் காந்தி. தொழில்நுட்பத்தில் மட்டுமல்ல. இந்தியாவில் உள்ள அடிப்படைப் பிரச்னைகளை தீர்ப்பதற்கு முயற்சி செய்தார். பஞ்சாப் காலிஸ்தான்  இயக்கம் தீவிரமாக இருந்தது. ராஜீவ்காந்தி பேச்சுவார்த்தை நடத்தி தற்போது பஞ்சாப்பில் ஜனநாயக ஆட்சி நடைபெறுகிறது. அதேபோன்று வட கிழக்கு மாநிலங்களில் நாகா கலகக்காரர்கள் இருந்தார்கள். அவர்களிடம் ராஜீவ்காந்தி பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு கண்டார்.

இலங்கை பிரச்சனையில் இலங்கையில் வாழும் தமிழர்களின் பிரச்சனையைக் கண்டறிந்து அதனை சரி செய்தார். இலங்கைத் தமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கையான வடக்கு, கிழக்கு மாநிலங்களை ஒன்றாக இணைத்து இலங்கையின் அரசியல் சட்டத்தை திருத்தி ஒப்பந்ததை ஏற்படுத்தி இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழர் ஒருவரை முதல்வராக்கினார். உலக நாடுகளில் உள்ள சீனா, அமெரிக்காவுடன் நெருங்கிய உறவை ஏற்படுத்தினார். அவரை இன்று நினைவு கூறுகிறோம். 

இதையும் படிக்க |  ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை
 
ஜிஎஸ்டியில் மத்திய அரசு, மாநில அரசு தருவதாக ஒத்துக்கொண்ட நிலுவைத்தொகையை கூட இதுவரை வழங்கவில்லை. எப்போதுமே மத்தியஅரசுக்கும், மாநில அரசுக்கும் இருக்கின்ற உறவு பொருளாதாரா ரீதியாக என்னவென்று சொன்னால் சிறப்பு நிதியை பல மாநிலங்களுக்கு வழங்குவார்கள். தமிழகத்தை பொறுத்தவரை சிறப்பு நிதி தரவில்லையென்றாலும் கூட குறைந்த பட்சம் ஜிஎஸ்டில் நமக்கு வர வேண்டிய நிலுவைத் தொகையை வழங்கியிருந்தால்கூட மாநிலங்களின் பொருளாதார நெருக்கடி தீர்க்கப்பட்டிருக்கும். ஆனால் மத்தியஅரசு அதனை செய்யவில்லை. மத்தியஅரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது. அதனால் மாநில அரசுக்கு கடும் பொருளாதார நெருக்கடி உள்ளது.

தமிழக அரசு ஒவ்வொரு பிரச்சனையையும் சரி செய்து வருகிறார்கள். உதரானமாக பெட்ரோலுக்கான கலால் வரியை ரூ.3 குறைத்துள்ளார்கள்.  நூறு நாட்கள் செய்ய வேண்டிய பணிகளுக்கு மேலாக திமுக அரசு செய்துள்ளது. எனவே மற்ற பிரச்சனையான மத்தியஅரசு உயர்த்திய அகவிலைப்படி உயர்த்தப்பட்டதை வழங்குவதற்கான ஏற்பாடு செய்வார்கள்.

கொடநாடு விவகாரத்தில் ஒரு அரசாங்கம் பொய் வழக்கெல்லாம் போட முடியாது. கொடநாடு வழக்கு விசாரணை என்று வந்தால், அந்த விசாரணையை அணுகி எதிர்கொண்டு எங்களது மீது சுமத்திய குற்றத்திற்கு சம்பந்தமில்லை என்பதை நிருபீப்பதுதான் இந்திய வழக்காடுமன்றத்தின் தன்மை. ஒரு வழக்கு உங்கள் மீது போடப்பட்டால், நீங்கள்தான் வழக்குமன்றத்தில் சென்று குற்றவாளி அல்ல என்பதை நிருப்பிக்க வேண்டும். எனவே இதனை எடப்பாடி பழனிசாமி இதனை பின்பற்றி வழக்கை எதிர்கொள்ள வேண்டும். 

அனைத்து சாதியினரும் அர்ச்சகராக ஆகலாம் என்று சொல்வது சமூக நீதி. அதில் எவ்வித தவறும் கிடையாது. ஏனென்று சொன்னால் இந்தியாவுடையை அரசியல் சட்டத்தையே முதன் முதலாக ஜவாஹர்லால் நேரு இட ஒதுக்கீட்டிற்காக திருத்தினார். பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், சமூகத்தில் உரிமை இல்லாதவர்களுக்கு கல்வியில், அரசு வேலையிலும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதால் சட்டத்தை திருத்தினார்.

இறைவனை பிராத்திக்க வேண்டிய இடத்தில் ஒரு சிலர் உள்ளே செல்ல முடியாது என்பது மிகப்பெரிய அநீதி. சிதம்பரம் நடராஜர் கோயிலே அதற்கு சான்று. இன்றைக்கு நந்தனார் நாம் வணங்குகிறோம். ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நந்தனாருடைய நிலைமை என்ன? அவரால் உள்ளே நுழைய முடியவில்லை. எனவே, இந்த சமூக சீர்திருத்தம் வேண்டும் என்பதற்காகத்தான், அதற்கான கல்வியை கற்று, வேதங்களை கற்று அதற்கான பயிற்சி அளித்து அதன்பிறகு அவர்களை அர்ச்சகர்களாக இந்த அரசு நியமித்திருக்கிறது என கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com