கம்பம்: தேனி மாவட்டம் அருகே உள்ள தேக்கடி ஏரியில் படகு சவாரி செய்ய ஓணம் பண்டிகை எதிரொலியாக சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வெள்ளிக்கிழமை குவிந்தனர்.
தேனி மாவட்டம் அருகே உள்ளது தேக்கடி ஏரி. இது சர்வதேச சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. உள்நாடு, வெளிநாட்டு பயணிகள் அதிக அளவில் தேக்கடி ஏரியில் படகுச் சவாரி செய்யவும், மலை ஏற்றத்திற்காகவும், அதிக அளவில் வருவார்கள்.
கரோனா தொற்று பரவல் காரணமாக தேக்கடி ஏரிப் பகுதியில் சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கவில்லை.
தற்போது கேரள அரசு தளர்வுகளை அறிவித்ததால் சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர்.
சனிக்கிழமை ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் தேக்கடி ஏரியில் அதிக அளவில் வந்தனர். மேலும், படகுக் கட்டணம் குறைக்கப்பட்டதால் மகிழ்ச்சியுடன் படகு சவாரிக்கு சென்றனர்.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து 5 டிரிப்புகள் இயக்கப்படுகிறது என்று கேரள மாநில சுற்றுலா வளர்ச்சிக்குழு அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.
இதேபோல் இந்தியாவின் மிகப்பெரிய ஆர்ச் அணையான இடுக்கி அணைப்பகுதிக்கும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் சென்று வருகின்றனர்.