தமிழகத்தில் 24 மணி நேரம் செயல்படும் 55 கரோனா தடுப்பூசி மையங்கள்: மா. சுப்பிரமணியன்

24 மணிநேரமும் செயல்படும் கரோனா தடுப்பூசி மையங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 24 மணி நேரம் செயல்படும் 55 கரோனா தடுப்பூசி மையங்கள்: மா. சுப்பிரமணியன்
தமிழகத்தில் 24 மணி நேரம் செயல்படும் 55 கரோனா தடுப்பூசி மையங்கள்: மா. சுப்பிரமணியன்

தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி, இந்தியாவிலேயே தமிழகத்தில் 55 இடங்களில் 24 மணிநேரமும் செயல்படும் கரோனா தடுப்பூசி மையங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் இன்று (23-8-2021) சென்னை அரசு ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 24 மணிநேரமும் செயல்படும் கரோனாத் தடுப்பூசி மையத்தினை திறந்து வைத்தனர். 

இம்மருத்துவமனையில் கோவிட்-19 மூன்றாவது அலையை எதிர்க்கொள்ளும் நடவடிக்கையாக 15 படுக்கைகள் கொண்ட நவீன குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவையும் பயன்பாட்டிற்குக் கொண்டுவந்தனர். மேலும் இம்மருத்துவமனையில் இன்போசிஸ் நிறுவனத்தின் சி.எஸ்.ஆர். நிதி பங்களிப்பில் ரூ.1 கோடி மதிப்புடைய, நிமிடத்திற்கு 500 லிட்டர் மருத்துவ ஆக்ஸிஜன் தயாரிக்கும் இயந்திரத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தனர். 

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது, தமிழக முதல்வரின் வேண்டுகோளின்படி கரோனா நிவாரணங்களை தன்னார்வலர்கள், தன்னார்வலத் தொண்டு நிறுவனங்கள் ஏராளமான அளவில் வழங்கி  உதவிக்கொண்டுள்ளனர். இன்போசிஸ் நிறுவனத்தின் சார்பில் ரூ.1 கோடி செலவில் ஆக்ஸிஜன் தயாரிக்கும் இயந்திரம் நிறுவப்பட்டு, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் முன்னிலையில் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஆக்ஸிஜன் ஜெனரேட்டர், திரவ நிலையில் ஆக்ஸிஜன் தயாரிக்கும் இயந்திரம் என்று தமிழ்நாடு முழுவதும் எல்லா அரசு மருத்துவமனைகளிலும் தன்னிறைவுப் பெற்று, ஆக்ஸிஜன் தேவை என்பது பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் மட்டுமல்லாமல் தனியார் மருத்துவமனைகளிலும் அரசின் வற்புறுத்தலால், நடவடிக்கைகளினால் ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ஆக்ஸிஜன் தேவை குறித்தான பயம் தேவையில்லை என்ற அளவிற்கு தன்னிறைவு பெற்றிருக்கிறது. அந்த வகையில் இன்று இன்போசிஸ் நிறுவனத்தின் சி.எஸ்.ஆர். நிதி பங்களிப்பில் ரூ.1 கோடி செலவில் ஆக்ஸிஜன் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

தமிழக முதல்வரின் அறிவுறுத்தலுக்கிணங்க, தமிழகத்தில் உள்ள 36 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகள், அரசின் சார்பில் செயல்படும் மற்ற மருத்துவமனைகளான கண் மருத்துவமனை, புறநகர் மருத்துவமனை போன்ற பல்வேறு மருத்துவமனைகள் ஒருங்கிணைந்து 55 இடங்களில் 24 மணிநேரமும் கரோனா தடுப்பூசி செலுத்திடும் திட்டம் நேற்றைக்கு முன்தினம் பொதுசுகாதாரம் நோய்த்தடுப்பு மருயதுத்துறையில் தொடங்கப்பட்டு அந்த இடத்தில் மட்டும் நடைமுறையில் இருந்தது. ஆனால் இன்று காலை முதல் தமிழகத்தில் 55 இடங்களில் 24 மணிநேரமும் கரோனா தடுப்பூசி செலுத்தும் இத்திட்டம் இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது. 

24 மணிநேரமும் தடுப்பூசி செலுத்துவதால் வேலைக்குச் செல்லும் மக்கள், வெளியூரிலிருந்து சென்னைக்கு வருகிறவர்கள், சென்னையிலிருந்து வெளியூருக்கு செல்பவர்கள் எந்த நேரத்தினாலும் வந்து தடுப்பூசிப் போட்டுக்கொள்ளலாம். எனக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ளக்கூட நேரமில்லை என்று சாக்குப் போக்கு சொல்பவர்களுக்கு தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி தமிழகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கரோனா தடுப்பூசி மையங்கள் 55 இடங்களில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி, கரோனா 3வது அலை என்று ஒன்று வந்தால்கூட, மருத்துவ வல்லுநர்களின் கருத்துப்படி, அது குழந்தைகளைத் தாக்கும் என்கிற கருத்துப்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கான கோவிட் சிறப்பு சிகிச்சை வார்டினை அமைக்க வலியுறுத்தினார்கள். எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் 200 படுக்கைகள் கொண்ட வார்டினை திறந்து வைத்தும் பயன்பாட்டிற்குக் கொண்டுவந்தார்கள். ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் ஏற்கெனவே குழந்தைகள் சிகிச்சை வார்டு ஒன்று இருந்தாலும், அதிநவீன குழந்தைகள் தீவிர சிகிச்சை வார்டு; ஒன்று அதுவும் குழந்தைகள் சிகிச்சை எடுத்துக்கொள்கிறபோது அவர்களுக்குப் பிடித்தமான கார்ட்டூன்கள், வண்ண வண்ண ஓவியங்கள் போன்றவற்றை அறையில் வைத்து, ஏறத்தாழ 15 படுக்கைகள் கொண்ட சிறப்பு வசதிகளுடன் வெண்டிலேட்டர்களுடன் கூடிய வார்டு ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com