கே.டி. ராகவன் விடியோ சர்ச்சை அண்ணாமலைக்குத் தெரியும்: ஆடியோ வெளியிட்டார் யூடியூபர்

பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலையுடன் பேசிய ஆடியோவை யூடியூபர் இன்று வெளியிட்டுள்ளார். 
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலச் செயலாளராக இருந்த கே.டி. ராகவனின் சர்ச்சை விடியோ தொடர்பாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் பேசிய ஆடியோவை யூடியூபர் இன்று (வியாழக்கிழமை) பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். 

பாஜகவில் சமீபத்தில் இணைந்த பத்திரிகையாளர் ஒருவரின் யூடியூப் சேனலில்,  பெண்கள் தொடர்பான கே.டி. ராகவனின் சர்ச்சைக்குரிய காணொலி செவ்வாய்க்கிழமை காலை வெளியிடப்பட்டது.

அந்த விடியோவில், அண்ணாமலைக்குத் தெரிந்துதான் கே.டி. ராகவன் காணொலி வெளியிடப்படுகிறது என அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், கே.டி. ராகவனின் பெண்கள் தொடர்பான சர்ச்சை விடியோவை யூடியூபர் தன்னிடம்  காட்டவில்லை, தான் பார்க்கவில்லை எனத் தெரிவித்திருந்தார். 

தொடர்ந்து, விடியோவை வெளியிட்ட யூடியூபர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். பின்னர், விடியோ வெளியிட்ட அவரின் சேனலையும் யூடியூப் நிறுவனம் முடக்கியது.

இந்த நிலையில், சர்ச்சை விடியோவை வெளியிட்ட யூடியூபரின் முகநூல் கணக்கிலிருந்து கே.டி. ராகவன் சர்ச்சை விடியோ தொடர்பாக அண்ணாமலையுடன் பேசிய ஆடியோ இன்று வெளியிடப்பட்டுள்ளது.

அந்த ஆடியோவில், கே.டி. ராகவனின் சர்ச்சை விடியோவை அண்ணாமலையிடம் காட்டும்போது நடத்தப்பட்ட உரையாடல் இடம் பெற்றுள்ளது. தேவைப்பட்டால் விடியோ பதிவையும் வெளியிடுவதாகவும் யூடியூபர் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஆடியோவில், நிச்சயம் நடவடிக்கை எடுக்க வேண்டும், கட்சியில் உங்களுக்குப் பெரிய பதவி வழங்குகிறேன், பெரிய ஊடக நிறுவனத்தைத் தொடங்குங்கள், தமிழகத்தில் எனக்கு கட்டளையிட எவரும் இல்லை, தன்னைக் கட்சித் தலைவராக்கியபோது அமித் ஷாவிடம் எழுப்பிய கேள்விகள், விடியோவை வைத்து பரபரப்பாக்கக் கூடாது என அண்ணாமலை யூடியூபரிடம் பேசுவது போன்ற பல உரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.

அண்ணாமலையுடனான யூடியூபரின் உரையாடல் ஆடியோ முழுமையாக வெளியிடப்படாமல் பிரித்து பிரித்து வெளியிடப்பட்டுள்ளது. 

தற்போது இந்த ஆடியோவும் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவத் தொடங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com