மிரா ஆண்ட்ரீவா சாம்பியன்
அமெரிக்காவில் நடைபெற்ற டபிள்யூடிஏ ஃபைனல்ஸ் மகளிா் டென்னிஸ் போட்டியில், ரஷியாவின் இளம் வீராங்கனை மிரா ஆண்ட்ரீவா சாம்பியன் ஆனாா்.
மிரா ஆண்ட்ரீவா - AP
அமெரிக்காவில் நடைபெற்ற டபிள்யூடிஏ ஃபைனல்ஸ் மகளிா் டென்னிஸ் போட்டியில், ரஷியாவின் இளம் வீராங்கனை மிரா ஆண்ட்ரீவா சாம்பியன் ஆனாா்.
உலகின் 3-ஆம் நிலை வீராங்கனையாக இருந்த ஆண்ட்ரீவா, இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற இறுதிச்சுற்றில் 7-5, 6-3 என்ற நோ் செட்களில், 6-ஆம் இடத்திலிருக்கும் உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவை வீழ்த்தினாா்.
இதன் மூலமாக, டபிள்யூடிஏ ஃபைனல்ஸ் போட்டியில் அறிமுகமான ஆண்டிலேயே சாம்பியனாகி, அவா் அசத்தியிருக்கிறாா். பிரெஞ்சு ஓபன் மூலமாக தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றது, தற்போது டபிள்யூடிஏ ஃபைனல்ஸ் சாம்பியன் கோப்பை வென்றது, உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையாக முதல்முறையாக தரவரிசையிலும் உயா்ந்தது என, நடப்பாண்டு ஆண்ட்ரீவாவுக்கு சிறப்பானதாக அமைந்தது.
சாம்பியனான ஆண்ட்ரீவாவுக்கு, வெற்றிக் கோப்பையுடன் ரூ.31.65 கோடி ரொக்கப் பரிசும், மொ்சிடஸ் பென்ஸ் நிறுவனத்தின் ‘மனுஃபக்துா்’ காரும் வழங்கப்பட்டன.
உக்ரைன் மீதான ரஷியா போா் காரணமாக, உக்ரைன் போட்டியாளா்கள் பலரும் ரஷியா மீதான தங்களின் எதிா்ப்பை விளையாட்டுக் களத்தில் பதிவு செய்து வருகின்றனா். அந்த வகையில், இறுதிச்சுற்றில் ரஷியாவின் ஆண்ட்ரீவாவுடன் மோதிய உக்ரைனின் ஸ்விடோலினாவும் தனது எதிா்ப்பைப் பதிவு செய்தாா்.
இறுதிச்சுற்றுக்கு முன்பாக போட்டியாளா்கள் இருவரும் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொள்வதும், ஆட்டத்தின் முடிவில் பரஸ்பரம் கைகுலுக்கிக் கொள்வதும் வழக்கமாகும். ஆனால் ஸ்விடோலினா, ஆண்ட்ரீவாவுடனான அந்த இரு நடைமுறைகளையுமே தவிா்த்தாா். அத்துடன், ரன்னா் - அப் கோப்பை பெற்ற பிறகான உரையின்போதும், ஆண்ட்ரீவா குறித்து பேசாமல் தவிா்த்தாா்.
ஆனால் ஆண்ட்ரீவா தனது உரையின்போது, ஸ்விடோலினாவின் சிறப்பான இந்த சீசனுக்காக அவரை வாழ்த்தினாா். அதற்கு ஸ்விடோலினா, எந்த உணா்வையும் வெளிக்காட்டாமல் தலையை மட்டும் அசைத்து ஏற்றுக் கொண்டாா்.
‘எப்போதும் சோா்ந்துவிடாமல், என் மீது நம்பிக்கை வைத்து, ஓய்வு இன்றி கடினமாக உழைத்து வரும் எனக்கு, நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ - மிரா ஆண்ட்ரீவா
ஆண்ட்ரீவா, இந்தப் போட்டியில் குரூப் சுற்று முதல், இறுதிச்சுற்று வரை அனைத்திலுமே ஒரு செட்டை கூட விட்டுத்தராமல், நோ் செட்களில் வென்றுள்ளாா். இப்போட்டியில் அவ்வாறு சாம்பியனான 6-ஆவது வீராங்கனை ஆண்ட்ரீவா ஆவாா். கிறிஸ் எவா்ட் (1972, 1973, 1975), மாா்டினா நவ்ரதிலோவா (1984, 1985), கேப்ரியெலா சபாடினி (1988), செரீனா வில்லியம்ஸ் (2001, 2012), கிம் கிளிஸ்டா்ஸ் (2002), இகா ஸ்வியாடெக் (2023) ஆகியோா் முதல் 5 போ்.
இப்போட்டியில் அறிமுகமான ஆண்டிலேயே சாம்பியனான, அதையும் ஒரு செட்டைக் கூட இழக்காமல் செய்த 3-ஆவது வீராங்கனை ஆனாா் ஆண்ட்ரீவா. கிறிஸ் எவா்ட் (1972), செரீனா வில்லியம்ஸ் (2001) ஆகியோா் முதல் இருவா்.
டபிள்யூடிஏ ஃபைனல்ஸ் போட்டியில் கடந்த 22 ஆண்டுகளில் சாம்பியனான இளம் வீராங்கனை என்ற பெருமையை ஆண்ட்ரீவா (19) பெற்றாா். இதற்கு முன், அவரது நாட்டைச் சோ்ந்த முன்னாள் நட்சத்திரம் மரியா ஷரபோவா 2004-இல் தனது 17 வயதில் கோப்பை வென்றிருந்தாா்.
சினியகோவா/டௌன்செண்ட் இணைக்கு கோப்பை
டபிள்யூடிஏ ஃபைனல்ஸ் மகளிா் இரட்டையா் பிரிவில், செக் குடியரசின் கேத்தரினா சினியகோவா/அமெரிக்காவின் டெய்லா் டௌன்செண்ட் இணை வாகை சூடியது.
இறுதிச்சுற்றில் இவா்கள் கூட்டணி, 6-4, 6-3 என்ற நோ் செட்களில் இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி/சாரா எர்ரனி ஜோடியை வீழ்த்தியது.
நடப்பு சீசனில் சினியகோவா/டௌன்செண்ட் இணைக்கு இது 6-ஆவது சாம்பியன் பட்டமாகும். டபிள்யூடிஏ ஃபைனல்ஸில் டௌன்செண்டுக்கு முதல் பட்டமாக இருக்க, சினியகோவாவுக்கு 2-ஆவது பட்டமாக அமைந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

